ஆன்மீகம் - Perumal Temple, Chiramadam - ஸ்ரீஎம்பெருமாள் திருக்கோவில் சிறமடம்
ஸ்ரீஎம்பெருமாள் திருக்கோவில் சிறமடம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-பாலமோர் சாலையில் 10 கி.மீ. தூரத்திலுள்ள தெரிசனங்கோப்பு என்ற ஊரிலிருந்து இடதுபுறம் அருமநல்லூ ருக்குப் பிரியும் சாலையில் ஞாலம் என்ற ஊருக்கு முன்னால் உள்ளது, சிறமடம் என்ற அழகிய கிராமம். சுற்றிலும் பச்சைப் பசேல் என்ற நெல்வயல் களும் பின்னணியில் நெடிதுயர்ந்த மலைகளும் சலசலத்து ஓடும் ஓடைகளும் இந்த கிராமத்தின் அழகுக்கு மெருகூட்டுகின்றன. இந்த ஊருக்கு அருகி லுள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில்தான் மிகப் பழமையும் பெருமையும் வாய்ந்த ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீஎம்பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.
பல்லாண்டுகளாக வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்த இந்த ஆலயம் ஏராளமான பக்தர்கள் வந்து கூடுகின்ற ஆலயமாக மாறிக் கொண்டிருக்கிறது. இத்தலத்தில் ஸ்ரீஎம்பெருமாள் என்ற பெயரில் திருமால் கோயில் கொண்டதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான வரலாறு கூறப்படுகிறது. தன் ஊருக்கு அருகிலுள்ள மலை உச்சியில் அமைந்திருந்த எம்பெருமாள் கோயிலுக்கு வழிபாடு மற்றும் பூஜைகள் செய்ய வயது முதிர்ந்த அர்ச்சகர் ஒருவர் தினமும் மலையேறிச் செல்வார். தினந்தோறும் அடர்ந்த காட்டுப் பகுதியான அந்த மலைமீது சிரமப்பட்டு ஏறி பெருமாளுக்குக் கைங்கரியம் செய்து வந்தார்.
நாளடைவில் முதுமை அடைய, மலையேறிப் பணி செய்ய முடியவில்லையே என்று அவர் கண்ணீர் வடித்தார். அன்றிரவு கனவில் பெருமாள் காட்சியளித்து, ‘‘கவலைப்படாதே, நாளை காலையில் மலைக் கோயிலிருந்து ஒரு குடம் உருண்டு வரும். அந்தக் குடம் நிலை கொள்ளும் இடத்தில் உனக்காக நான் எழுந்தருளுகிறேன். நீ அந்த இடத்தில் உன் வழிபாட்டினைத் தொடரலாம்’’ என்று கூறினார். அர்ச்சகர் மிகவும் மனம் மகிழ்ந்து, அப்பகுதியினை ஆண்டு கொண்டிருந்த சேர மன்னரிடம் விவரம் தெரிவிக்க, மன்னனும் பிற முக்கியஸ்தர்களும் மறுநாள் காலை மலையடிவாரத்திற்குச் சென்று குடத்திற்காகக் காத்திருந்தார்கள்.
திடீரென்று குடம் ஒன்று பேரொளியோடு மலைக் கோயிலிருந்து கீழ் நோக்கி உருண்டு வந்து மலையடிவாரத்தில் நின்றது. திருமால் சாந்நித்தியம் கொண்டிருந்த அந்தக் குடத்தை மன்னனும் மற்றவர்களும் பயபக்தியோடு வணங்கினார்கள். அந்த இடத்தில் ஓர் அழகிய கற்றளியை மன்னன் எழுப்பினான். பக்தரின் வழிபாடும் தொடர்ந்தது. குடம் உருண்டு வந்த மலை, குடமுருட்டி மலை எனப்படுகிறது. அதிலிருந்து வழிந்தோடிய நீரே, ஆலயத்திற்குப் பின்புறமாக ஓடும் தெள்ளிய குடமுருட்டி ஆறு எனப்படுகிறது. இதிலிருந்து பிரிந்து, நீரோடை ஒன்று ஆலயத்தின் அருகில் ஓடுகிறது. ஆண்டு முழுவதும் தெளிந்த நீர் இந்த ஓடையில் ஓடுவது இதன் தனிச் சிறப்பாகும்.
எம்பெருமாளை வழிபட்டு வந்த அர்ச்சகருக்காகவே திருமஞ்சனம் செய்யும் பொருட்டு கோயில் ஒட்டியே இந்த சிற்றாறு ஓடி வந்ததாக கூறப்படுகிறது. காடு சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் தலமரமாக சந்தன மரம் திகழ்கிறது. ஆலயக் கருவறையில் எம்பெருமாள், ஸ்ரீதேவி-பூதேவி சகிதமாக நான்கு கரங்களோடு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நல்ல உயரமான, நுணுக்கமான வேலைப்பாடுகளோடு திகழும் எம்பெருமாள், பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தி, முன் வலக்கை அபய ஹஸ்தமாகவும் இடக்கையை கதையின் மீது வைத்து புன்முறுவலோடு காட்சி தருகிறார். சிலையிலேயே பல்வேறு ஆபரணங்களோடு காட்சி தரும் எம்பெருமாளை அப்படியே பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலவே தோன்றுகிறது.
அடர்ந்த காடு மண்டிக் கிடந்ததாலும் தக்க பராமரிப்பு இல்லாமல் இருந்ததாலும் அந்த ஆலயத்திற்கு பக்தர்கள் வருவதற்கு யோசித்தார்கள். ஆனால், உள்ளூர் பக்தர்கள் பெருமுயற்சி எடுத்து, பாதைகளைச் செப்பனிட்டு, திருப்பணிகள் செய்து 3.12.2008 அன்று மிகச் சிறப்பாக குடமுழுக்குச் செய்துள்ள னர். கருவறையின் மீது ஓர் அழகிய விமானமும் கட்டப்பட்டுள்ளது. குடமுழுக்கினைத் தொடர்ந்து தற்போது ஏராளமான பக்தர்கள் இந்த ஆலயத்தில் கூடுகிறார்கள். தற்போது ஒவ்வொரு சனிக்கிழமை மற்றும் மாத திருவோண நட்சத்திரத்தன்றும் சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெறுகிறது. இந்த அன்னதானத்தில் சுமார் 500 பேர் கலந்து கொண்டு பயனடைகின்றனர்.
கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் எதிரில் கருடன் சந்நதி என்று மிக எளிமையாக ஆலயம் திகழ்கிறது. ஆலயத்தின் தூண்களில் பல அனு மன் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. தற்போது ஆலயத்தின் வெளியே மேற்கு நோக்கி அனுமனுக்குத் தனிச் சந்நதி அமைக்கப்பட்டு குடமு ழுக்குச் செய்யப்பட்டுள்ளது. கன்னி மூலையில் விநாயகர், மேலும் சாஸ்தா, சப்த கன்னியர், நாகர் சந்நதிகளும் உள்ளன. வெளிச்சுற்றில் வேப்பமரத் தின் கீழ் பீடத்தில் இரண்டு அம்மன் சிலைகள் உள்ளன. இவர்கள் ஆலயத்தை காவல் காப்பதாகக் கூறப்படுகிறது.
கன்னியாகுமரிக்கு யாத்திரை செல்பவர்கள், நாகர்கோவில், சுசீந்திரம் ஆலயங்களைப் பார்த்துவிட்டு, பூதப்பாண்டியில் உள்ள மிகப் பழமையான பூத லிங்கேஸ்வரர் குடைவரைக் கோயிலையும் அருகில் உள்ள கீழை தெரிசனங்கோப்பு கட்டுக்கோயிலான (மாடக்கோயில்) லோகநாயகி அம்பாள் சமேத ராகவேஸ்வரர் கோயில்களோடு சிறமடம் எம்பெருமாளையும் தரிசித்து வரலாம். நாகர்கோவில்-அருமநல்லூர் பேருந்து பாதையில் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிறமடம் செல்லலாம். தெரிசனங்கோப்பிலிருந்து ஆட்டோ மூலமாகவும் சென்று வரலாம். நாகர்கோவிலிலிருந்து தெரிசனங்கோப்பிற்கு அடிக்கடி பேருந்து வசதி உண்டு.
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks