Advertisement

Breaking News

ஆன்மீகம் - St. Francis Xavier's Cathedral, Kottar - கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலயம்

கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் புனித சவேரியார் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.





குமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோவில் நகரின் மைய பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது சவேரியார் ஆலயம். சவேரியார் திருப்பலி நடத்தியதால் அவரது பெயரை தாங்கி நிற்கும் இந்த ஆலயத்துக்கு சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து சமுதாய மக்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்வோர் தங்களது வேண்டுதல்படி நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.


உலகிலேயே சவேரியாருக்கு முதன்முதலாக ஆலயம் எழுப்பப்பட்டது குமரி மாவட்டம் கோட்டாரில்தான். கோவாவுக்கு அடுத்தபடியாக இங்குள்ள சவேரியார் ஆலயம்தான் இந்தியாவில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது இன்னும் சிறப்புக்குரியது.

புனித பிரான்சிஸ் சவேரியார் (Saint Francis Xavier




ஸ்பெயின் நாட்டில் ஏப்ரல் 7, 1506 அன்று புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார். அப்போதே எசுப்பானியம் மற்றும் பல மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இந்தியாவில் கிறித்துவத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார்.

இயேசு சபை

1525ஆம் வருடம் கல்லூரி படிப்பிற்காகப் பாரிஸ் சென்றார். அதன் பின்னர் 11 வருடங்கள் பாரிசிலே இருந்த புனித சவேரியார், அங்குள்ள புனித பற்பே கல்லூரியில் தத்துவம் மற்றும் கலைத்துறையில் முதுகலை பட்டம் பெற்று, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணியாற்றினார். மீண்டும் 1534முதல் 1536 வரை இறையியலைப் பயின்றார். அப்போது புனித சவேரியாருக்கு புனித இலொயோலா இஞ்ஞாசியார் நண்பரானார்,"உலகையே ஆதாயமாக்கினாலும் மனிதர் தம் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன" என்ற இறைமகன் இயேசுவின் வார்த்தையை இஞ்ஞாசியார்,சவேரியாருக்கு எடுத்துரைக்க சவேரியார் அவ்வார்த்தையின் ஆழத்தை உணர்ந்து இறைவனோடு அதிகமாய் இணைந்திருந்தார். பின்னர் இவர்கள் இயேசு சபையைத் தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்ந்து இறைபணியை செய்ய முடிவு செய்தனர்.

இந்தியா வந்த சவேரியார்



இதை தொடர்ந்து 1537 ஆம் வருடம் ஜூன் மாதம் 24 ஆம் நாள் குருவாக திருநிலை பெற்று தன் முதல் திருப்பலியை செப்டம்பர் 30ஆம் நாள் நிறைவேற்றினார். பின்னர் அவரும் அவருடைய நண்பர்களும் திருத்தந்தை மூன்றாம் பவுலைச்சந்தித்து இறைப்பணி செய்வதற்கான தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தனர். அதே வேளையில் போர்த்துகீசிய மன்னன் தனக்குக் கீழ் இருந்த நாடுகளுக்குக் குருக்களைத் தந்துதவும்படி வேண்டியதால், சவேரியார் இந்தியா மற்றும் போர்த்துகீசிய காலனி நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
புனித சவேரியார் 1540இல் உரோமில் இருந்து புறப்பட்டு லிஸ்பான் செல்கிறார். அங்கு ஒரு வருடம் இறைபணியை செய்த பின்னர் இந்தியாவிற்கு வரும் வழியில் மொசாம்பிக்கில் ஒரு வருடம் இறைபணியை செய்துவிட்டு 1542 மே மாதம் 6ஆம் நாள் கோவாவை வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவின் குறிப்பாக தமிழகக் கடற்கரைக் கிராமங்களில் தனது இறைப்பணியைச் செய்துவந்தார்
வேணாட்டை முற்றுகையிட முயற்சி




1543இல் தென்திருவிதாங்கூரில் தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தில் தன் இறைப்பணியைத் தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள் கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார். திருவிதாங்கூர் இராச்சியத்தில் பல ஆலயங்கள் புனித சவேரியாரால் நிறுவப்பட்டன. மிகக் குறுகிய கால வேளையான ஒரு வருடத்திற்குள் நாற்பத்தி ஐந்து சிறிய கிறிஸ்தவ ஆலயங்களை அவர் நிறுவினார் என்று காண்கிறோம். கி.பி. 1544-ல் திருவிதாங்கூரை (அன்றைய வேணாடு) திரு. பூதல வீர கேரள வர்மன் என்ற ஜெயசிம்ம நாட்டு மூத்த திருவடிகள் ஆண்டு வந்தார்கள். அவ்வேளையில் விசய நகர மன்னரான விதாலர் ஒரு பெரும் படையுடன் வேணாட்டை முற்றுகையிட்டார். அவரை எதிர்த்து நிற்பதற்கு வேணாட்டு அரசரால் இயலாமற் போகவே அவர் புனித சவேரியாரின் உதவியை நாடினார். விசய நகரப் படைகள் ஒழுகினசேரி வழியாக வடசேரி மேட்டை நெருங்கிவிட்டது. அவ்வேளையில் குருசையும் செபமாலையும் உயர்த்திப் படித்து வடுகர்ப்படைகளளை பின்வாங்கும்படி கர்ச்சித்தார். புனித சவோரியாரின் இந்த திடீர் செயலானது வடுகப்படையினரை நிலைகுலையைச் செய்துவிட்டது. அவர்களின் முன்பு ஊதோ ஒரு பெரும் பூதம் போருக்குத் தயாராக நிற்பதைப் போன்று அவர்கள் கண்டனர். நடுநடுங்கிய வடுகப்படைகள் எதிர்பாராத விதமாக பின்வாங்கி வேணாட்டைவிட்டு வெளியேறிச் சென்றனர். இவ்விதமாக புனிதர் சவேரியார் பெரும் ஆபத்திலிருந்து அன்று வேணாட்டைக் காத்து நின்றார். இந்நிகழ்ச்சி நடந்த இடத்தில் ஒரு சிறு கத்தோலிக்க ஆலயம் இன்றைய நாகர்கோவில் இராஐம் திருமண மண்டபத்திற்கெதிரில் காணப்படுகிறது.



என்று மன்னர் புனிதர் சவேரியாரை நன்றியுணர்வுடன் பாரட்டினர். இன்றைய குமரி மாவட்டத்தின் கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் இப்புனிதராலேயே நிறுவப்பட்டுள்ளது. ஒரு முறை கடலில் பயணம் செய்யும் போது புனித சவேரியாரின் சிலுவை தொலைந்து போயிற்று, ஆனால் கரையை அடைந்ததும் ஒரு நண்டு அந்தச் சிலுவையைக் கொண்டுவந்து சேர்த்தது என்பர்.
புனித சவேரியார் பேராலயம், கோட்டாறு
கன்னியாகுமரி மாவட்டம், கோட்டாறில் சவேரியார் தங்கிருந்த போது அன்னை மரியாளுக்கு ஒரு சிறிய ஆலயம் ஒன்றை கட்டினார். அந்த ஆலயம் இருந்த இடத்தில் கி.பி. 1600-ல் புனித சவேரியார் பேராலயம் ஒன்று கட்டப்பட்டது. சவேரியார் அன்னை மரியாளுக்கு கட்டிய ஆலயம் பேராலயத்தினுள் இன்றளவும் உள்ளது.
திருவிழா 



குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் முதன்மையான பேராலயமாகவும், கோட்டாறு மறைமாவட்டத்தின் தலைமைப் பேராலயமாகவும் விளங்குவது நாகர்கோவில் கோட்டாரில் அமைந்துள்ள புனித சவேரியார் பேராலயமாகும். புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் 3-ந் தேதி நிறைவடையும். சில ஆண்டுகளில் 11 நாள் திருவிழா நடைபெறுவதும் உண்டு.

இந்த திருவிழாவில் குமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் எராளமானோர் கலந்து கொள்வார்கள்.
ஆலயம் கடந்து வந்து பாதை

* 1605-ம் ஆண்டு மூவொரு இறைவன் ஆலயமானது தூய சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

* 1640-ம் ஆண்டு கற்களால் ஆன புதிய ஆலயம் கட்டப்பட்டது.

* 1643-ம் ஆண்டு தூய இன்னாசியார், தூய சவேரியாரின் திருபண்டங்கள் கோட்டார் ஆலயத்தில் வைக்கப்பட்டன.

* 1752-ம் ஆண்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை உடலின் எஞ்சிய பாகங்கள் கோட்டார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

* 1865-ம் ஆண்டு மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அதன்பிறகு தான் ஆலயம் சிலுவை அடையாள தோற்றத்தை பெற்றது.

* 1876-ம் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட தூய சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.

* 1930-ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து கோட்டார் தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டு கோட்டார் ஆலயம் பேராலயமாக உயர்த்தப்பட்டது.

* 1955-ம் ஆண்டு ஆலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தூய ஆரோபண அன்னை ஆலயம், பேராலயத்தோடு இணைக்கப்பட்டது. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் தூய லூர்து அன்னை கெபி அழகுற கட்டப்பட்டது.

* 1956-ம் ஆண்டு சவேரியார் இந்தியாவுக்கு வந்து 400 ஆண்டுகள் ஆனதன் நினைவாக ஆலயத்தில் கோபுரம் கட்டப்பட்டு அதன் மீது சொரூபம் நிறுவப்பட்டது.

* 1992-ம் ஆண்டு தூய சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்து 450 ஆண்டுகள் ஆனதன் நினைவாக பேராலயம் புதுப்பிக்கப்பட்டது.

* 1994-ம் ஆண்டு முதல் தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை தொடங்கப்பட்டது.

* 2009-ம் ஆண்டு வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது.

* 2010-ம் ஆண்டு திருப்பீடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.

* 2013-ம் ஆண்டு மாதா சிறப்பு பவனி தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு லூர்து அன்னை கெபியின் முன் ஜெபமாலை சிறப்பு நற்கருணை ஆசீர் வழிபாடு நடக்கிறது.

* 2014-ம் ஆண்டு தூய லூர்து அன்னை கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.

* 2016-ம் ஆண்டு பேராலய மறுசீரமைப்பு பணி துவங்கப்பட்டது.

* 2017-ம் ஆண்டு புதுப்பொலிவு பெற்ற பேராலய அர்ச்சிப்பு விழா, புனித சவேரியாருடைய இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா, கோட்டார் சவேரியார் பேராலய பெருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

www.nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks