Advertisement

Breaking News

Breaking News - தமிழகத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை பஸ் சேவை

தமிழகத்தில் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை பஸ் சேவை







சென்னை: தமிழகத்தில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ் இயக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் நாளை முதல்(ஜூன் 1) வரும் 30ம் தேதி வரையில் 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளடங்கிய மண்டலங்களை தவிர பிற மண்டலங்களில் பஸ்கள் இயக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டு உள்ளது. மண்டலங்களுக்குள் பஸ் இயக்கப்படுமே தவிர ஒரு மண்டலப்பகுதியில் இருந்து அடுத்த மண்டல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்படாது. மேலும் பஸ்கள் காலை 6 மணி முதல் 9 மணி வரையில் இயக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது.






கடந்த 60 தினங்களாக பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது.இதனையடுத்து சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில்,அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான காய்கறிகடைகள் பஸ்ஸ்டாண்டிற்கு மாற்றப்பட்டு அங்கிருந்து செயல்பட்டன. தற்போது பஸ்கள் இயக்க அரசு அனுமதி அளித்து உள்ளதால் பெரும்பாலான ஊர்களில் பஸ்ஸ்டாண்டுகளில் செயல்பட்டு வந்த காய்கறி மார்க்கெட்டுகள் வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளன.


இந்தியாவில் ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.82 லட்சத்தை தாண்டியது





புதுடில்லி: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,380 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.82 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 193 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,164 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 31) காலை 10:00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,73,763 ல் இருந்து 1,82,143 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,971 ல் இருந்து 5,164 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,370 ல் இருந்து 86,984 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 89,995 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,380 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 193 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 65,168 - 2,197
தமிழகம் - 21,184 - 160
டில்லி - 18,549 - 416
குஜராத் - 16,343 - 1,007
ராஜஸ்தான் - 8,617 - 193
மத்திய பிரதேசம் - 7,891 - 343
உத்தர பிரதேசம் - 7,445 - 201
மேற்கு வங்கம்- 5,130 - 309
ஆந்திரா - 3,569 - 60
கர்நாடகா- 2,922 - 48
தெலுங்கானா - 2,499 - 77
கேரளா - 1,208 - 9
புதுச்சேரி- 51 - 0


தமிழகத்தில் நாளை பஸ்கள் இயக்கம்; பயணிகளுக்கு கட்டுப்பாடு






சென்னை: தமிழகத்தில் நாளை(ஜூன் 1 ) முதல் 50 சதவீத பஸ்கள் , 60 சதவீத பயணிகளுடன் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பஸ்கள் இயக்க அனுமதி வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் இன்றுடன் முடிவடையும் ஊரடங்கு ஜூன் 30 நள்ளிரவு வரை பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு பகுதியாக பஸ் இயக்கப்பட உள்ளதாக முதல்வர் இ.பி.எஸ்., அறிவித்துள்ளா்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மாநிலத்தில் பஸ் போக்குவரத்தை ஜூன் 1 முதல் நடைமுறைபடுத்த தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்படுகிறது.


மண்டலம் -1: கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், சேலம் மற்றும் நாமக்கல்

மண்டலம்- 2: தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் கிருஷ்ணகிரி

மண்டலம் -3: விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி

மண்டலம் -4: நாகை, திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை

மண்டலம்-5: திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம்

மண்டலம்-6: தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தென்காசி

மண்டலம்- 7: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு

மண்டலம்- 8: சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதி







காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து, அனைத்து மண்டலங்களுக்குள் 50 சதவீத பஸ்கள் மட்டும் இயக்கப்படும்.

* காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பஸ் போக்குவரத்திற்கு தடை தொடரும்

* அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் தனியார் பஸ்களும் இயங்க அனுமதி

* பஸ்களில் உள்ள மொத்த இருக்கைகளில் 60 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி

* மண்டலங்களுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இ - பாஸ் தேவையில்லை. பஸ்களில் பயணிக்கவும் இ-பாஸ் தேவையில்லை

* அனுமதிக்கப்பட்ட இனங்களுக்கு தவிர, மண்டலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயுமான பஸ் போக்குவரத்து சேவைகளுக்கான தடை தொடர்கிறது.





* அரசால் தனியாக வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற பஸ்கள் இயக்கப்படும்.



பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்

நாளை பஸ்கள் இயக்கம் துவங்குவதை முன்னிட்டு அரசு பஸ் போக்குவரத்து துறை சார்பில் தமிழக அரசு வழிகாட்டுமுறை வெளியிட்டுள்ளது. இதன் விவரம் வருமாறு:

* பயணிகள் பின்புற படிக்கட்டில் ஏற வேண்டும்

* பஸ்களில் பயணிகள் மாஸ்க் அணிவது அவசியம்

* டிரைவர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு வெப்ப பரிசோதனை நடத்த வேண்டும்

* குளிர்சாதன வசதி பஸ்கள் இயக்கப்படாது, குளிர்சாதனம் அணைக்கப்பட்டு இயங்கலாம்

* பஸ்கள் மற்றும் பஸ் நிலையங்கள் கிருமி நாசினி கொண்டு ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்ய வேண்டும்.

* படிக்கட்டில் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


* சென்னையில் இருந்து பிற மாவட்டஙகளுக்கு செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை அவசியம். அறிகுறி இல்லாவிடினும் பரிசோதனை அவசியம். பரிசோதனையில் கொரோனா உறுதியானால், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள். இல்லாவிடில், வீடுகளில் 7 நாட்கள் வீடுகளில் தனிமைபடுத்தி கொள்ள வேண்டும்.


இ -பாஸ் முறை


*அனைத்து வகையான வாகனங்களுக்கும் மண்டலங்களுக்குள் இயங்க அனுமதிக்கப்படும். அவைகளுக்கு இ-பாஸ் தேவையில்லை

* வெளி மாநிலத்திற்கு செல்லவும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரவும், மண்டலங்களுக்கு இடையே சென்று வரவும் இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



அசாமில் வெள்ளம்: 6 பேர் பலி


கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர்.






மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், அசாம் மாநிலம் நல்பாரி, கோல்பாரா, நாகோன், ஹோஜாய், மேற்கு கார்பி, அங்லாங் மற்றும் டின்சுகியா மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 6 பேர் பலியாகி உள்ளனர். வெள்ளத்தால் மொத்தம் 3 லட்சத்து 70 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.





மேலும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. காம்பூரில் பாயும் கோபிலி நதியில் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டி செல்கிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மாநில முதல்வர் சர்பானந்தா சோனாவால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தினார்.


என்-95 முகக்கவசங்களுக்கு விலை நிர்ணயிப்பதால் உற்பத்தி தடைப்படும் - ஐகோர்ட்டில் அரசு பதில்

மும்பை: இந்தியாவில் என்-95 முகக்கவசங்களுக்கு உற்பத்தியாளர்கள் அதிக விலை நிர்ணயிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மருந்துகளின் விலையை கட்டுப்படுத்தும் ஒழுங்குமுறை நிறுவனமான, தேசிய மருந்து விலை ஆணையம், தற்போது விலையை கட்டுப்படுத்தினால் உற்பத்தி பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.






கொரோனா வார்டுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கான உயிர் காக்கும் கருவியாக என்-95 முகக்கவசம் உள்ளது. மருத்துவர்களுக்கான இந்த அத்தியாவசிய முகக்கவசத்தின் தேவை அதிகரித்திருப்பதால் ரூ.150-க்கு விற்கப்பட்ட இவை தற்போது ரூ.500 வரை விற்கப்படுகிறது. இந்த விலை ஏற்றத்தை குறைக்கக் கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ள தேசிய மருந்து விலை ஆணையம், என்95 உற்பத்தியாளர்களிடம் விலையில் 47% குறைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவித்தது.

மேலும் அந்த பதில் மனுவில் தேசிய மருந்து விலை ஆணையம் கூறியுள்ளதாவது: இந்த உயர்தர முகக்கவசம்களின் பற்றாக்குறையை உலகம் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளதால், தற்போது என்-95 முகக்கவசங்களுக்கு விலை நிர்ணயிப்பதோ, கட்டுப்படுத்துவதோ கூடாது என்று அரசாங்கத்திற்கு அறிவுறுத்தியுள்ளோம்,

இன்றைய தேதியில் என்-95 முகக்கவச உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர். இதனால் முகக்கவசங்களின் தேவைக்கும், விநியோகத்திற்கும் பெரிய இடைவெளி உள்ளது.

இந்த கட்டத்தில் விலையை கட்டுப்படுத்துவது உள்நாட்டு உற்பத்தியைத் துண்டிக்கக்கூடும், மேலும் இறக்குமதியும் வேறு நாடுகளுக்கு திருப்பப்படும். இந்நடவடிக்கை என்-95 முகக்கவசங்கள் கிடைப்பதை பாதிக்கலாம். எனவே N95 முகக்கவசங்களை ஒரு நியாயமான விலையில் விற்கும்படி உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.





எங்கள் அறிவுறுத்தலை கேட்டு என்-95 முகக்கவசங்களின் முக்கிய உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் விலையை கணிசமாக 47 சதவீதம் வரை குறைத்துள்ளனர்.மற்றவர்களும் இந்த ஆலோசனையைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஜூன் 2020 வரை மொத்தம் 2.44 கோடி என்-95 முகக்கவசங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. மே 27 வரை 1.06 கோடி முகக்கவசங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, விநியோகிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அளவில் தேவை அதிகம் இருப்பதால் இந்த முகக்கவசங்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதில் மனுவில் கூறியுள்ளனர்.
சவுதி, ஜெருசலேமில் மசூதிகள் திறப்பு

சவுதி அரேபியா மற்றும் ஜெருசலேம் நாடுகளில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக மூடப்பட்டிருந்த மசூதிகள் இன்று வழிபாட்டிற்காக திறக்கப்பட்டன.



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணாக உலகம் முழுவதும் வழிபாட்டு தலங்கள் , மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டன. கடந்த மார்ச் மாதம் பிற்பகுதியில் இருந்து சவுதி, ஜெருசலேம் நாடுகளில் மசூதிகள் மூடபட்டன.

இரண்டு மாத காலத்திற்கு பின்னர் சவுதியில் உள்ள 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மசூதிகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தல் புனிததலமான மெக்காவில் தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் சவுதி அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை அனைத்து மொழிகளிலும் கடை பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து தகவல்கள் அனுப்பி உள்ளன. அதில் வழிபாட்டு தலங்ககளில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளிவிட வேண்டும். முகமூடி அணிந்திருக்க வேண்டும். என்பன உள்ளிட்ட விதிமுறைகளை வெளியிட்டு உள்ளது.



மேலும் மெக்காவை தொடர்ந்து ஜூலை மாதம் இறுதி வரையில் மூட வாய்ப்புஇருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக சவுதியின் மூத்த அதிகாரி ஒருவர் ஹஜ் பயணத்திற்கு திட்டமிட வேண்டாம் என புனித பயணாளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். அதே நேரத்தில் மதீனாவில் உள்ள மசூதி பொதுமக்களுக்காக ஒரளவு திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெலுங்கானாவில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு
 




ஐதராபாத்: ஊரடங்கை ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் தளர்வுகளுடன் இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை 5வது கட்டமாக ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனை தொடர்ந்து, ம.பி., பஞ்சாப் தமிழகம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.




ம.பி.,யில் ஜூன் 15ம் தேதி வரையும், பஞ்சாபில் ஜூன் 30ம் தேதி வரையும், மேற்கு வங்கத்தில் ஜூன் 15ம் தேதி வரையும், தமிழகத்தில் ஜூன் 30ம் தேதி வரையும் மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், தெலுங்கானாவும் ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு மண்டலங்களை தவிர பிற பகுதிகளில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஊரடங்கை அமல்படுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளதாக தெலுங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.



ஆக்ராவில் மின்னல் தாக்கியதில் தாஜ்மஹால் சேதம்





ஆக்ரா: மின்னல் தாக்கியதில் உலக அதிசயமான தாஜ்மஹாலின் மேற்கூரை சேதமடைந்தது.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் யமுனை நதிக்கரையோரம் உலக பாரம்பரிய சின்னமான தாஜ்மஹால் உள்ளது. முகாலய மன்னர் ஷாஜஹான் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றான இது சுற்றுலாபயணிகளை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில் உ.பி.யில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. நேற்று பலத்த இடி மின்னலுடன் பெய்த மழையில் தாஜ்மஹாலின் வடக்குப்பகுதி நுழைவு வாயிலில் உள்ள பளிங்குகற்களால் ஆன மேற்கூரை இடிந்து சேதமடைந்ததாகவும் ஆனால் பிரதான பகுதியில் உள்ள கட்டடங்கள் எந்தவித சேதமடையவில்லை என இந்திய தொல்லியியல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகள் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.







இதே போன்று கட.ந்த 2018-ம் ஆண்டு இடிமின்னலுடன் பெய்த கனமழையால், தாஜ் மஹாலின், ராயல் கேட் மற்றும் தெற்கு பகுதி நுழைவாயில் துாண்கள் இடிந்து விழுந்தன.


பஸ்டாண்டா? காய்கறி சந்தையா? குழப்பத்தில் நெல்லை மக்கள்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நாளை முதல் மண்டல அளவில் 50 சதவீத பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டுள்ளது. டவுன் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் காய்கறி சந்தையாகி உள்ளது.






வேய்ந்தான்குளம் புதிய பஸ் ஸ்டாண்டில் இப்போதும் காய்கறி மொத்த மார்க்கெட் ஆகி லாரிகளில் சரக்கு இறங்கிய வண்ணம் உள்ளது. பஸ்கள் எங்கிருந்து கிளம்பும்.. பஸ் ஸ்டாண்ட் தயாராக உள்ளதா என எத்தகைய அறிவிப்பும் இல்லாமல் நெல்லை மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.





சென்னையில் ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு





சென்னை: சென்னையில் இன்று (மே 31) ஒரே நாளில் 804 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பில் 14,802 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை புது உச்சத்தை அடைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு, இன்றும் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,149 பேரில் சென்னையில் மட்டும் 804 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் செங்கல்பட்டில் 85 பேர், திருவண்ணாமலையில் 55 பேர், சேலத்தில் 49 பேர், திருவள்ளூரில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட வாரியாக பாதிப்பு:








மொத்த டிஸ்சார்ஜ் விவரங்கள்:










6 நாட்களில் 2,340 உள்நாட்டு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்






புதுடில்லி: ஊரடங்கிற்கு பின் கடந்த மே 25ல் உள்நாட்டு விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. அதன் மூலம் கடந்த 6 நாட்களில் 2,340 விமானங்கள் இயக்கப்பட்டதாக விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் நான்காம் கட்ட ஊரடங்கின் போது கடந்த மே 25ம் தேதி முதல் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிப்ரவரியில், ஊரடங்கு விதிக்கப்படாதபோது, இந்திய விமான நிலையங்கள் தினசரி 3,000 உள்நாட்டு விமானங்களை கையாண்டன. அதன் மூலம் தினமும் சுமார் 4 லட்சம் பயணிகள் பயணம் செய்ததாக சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது.






இந்நிலையில் இந்திய விமான நிலையம் வெள்ளிக்கிழமை வரை மொத்தம் 2,340 விமானங்களை இயக்கியுள்ளன. முதல் நாள் 428 விமானங்களும், செவ்வாயன்று 445, புதன்கிழமை 460, வியாழக்கிழமை 494 மற்றும் வெள்ளிக்கிழமை 513 விமானங்களும் இயக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை மட்டும் 529 விமானங்கள் மூலம் 45,646 பயணிகள் வந்து சென்றுள்ளனர் என்று விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி டுவிட்டரில் தெரிவித்தார்.


அமெரிக்காவில் பரவும் கலவரம்: போலீசார் கண்ணீர் புகை குண்டுவீச்சு





வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடந்த கலவரம் பல நகரங்களுக்கு பரவியுள்ளது. இதனையடுத்து போராட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும் ரப்பர் குண்டுகளையும் வீசினர்.






அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில், 25ம் தேதி, ஜார்ஜ் பிளாய்டு என்ற கறுப்பின இளைஞரை, சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீஸ் அதிகாரி ஒருவர், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினார்.இதில், ஜார்ஜ் பிளாய்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, போலீசாரின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மின்னபொலிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டங்கள் வெடித்தன. ஜார்ஜ் பிளாய்டை கொன்ற போலீஸ் அதிகாரி டெரெக் சவுவின், 44, கைது செய்யப்பட்டு, அவர்மீது, கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருடன் கூட இருந்த அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.





ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதை கண்டித்து, மின்னபொலிஸ் நகரில் போராட்டம் வெடித்துள்ளது. அதனை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் அதனை பொருட்படுத்தாமல், ஆயிரகணக்கானோர், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கட்டுப்படுத்த ராணுவத்தின் போலீஸ் பிரிவு தயார் நிலையில் வைக்கப்பட்டுளளது. இந்த போராட்டமானது, லாஸ் ஏஞ்சல்ஸ், வேகாஸ், டெக்சாஸ், டென்னீசி, புளோரிடா, கொலரடோ நகரங்களுக்கும் பரவியுள்ளது.





நியூயார்க்

நியூயார்க் நகரில் போலீஸ் வாகனங்களில் ஏறிக்குதித்த போராட்டக்காரர்கள், அங்கிருந்த கடைகளில் பொருட்களை அள்ளி சென்றதுடன், அடித்து நொறுக்கினர். கார்களை தீ வைத்து எரித்தனர்.கடைகள் மற்றும் வங்கிகளை அடித்து நொறுக்கினர். கலவரம் தொடர்பாக நூறுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைபட்டது.




ந்நிலையில், போராட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மேயர், உங்களின் பிரச்னைகள் கேட்டறிந்து தீர்த்து வைக்கப்படும். அனைவரும் வீட்டிற்கு செல்வதற்கான நேரம் வந்துவிட்டது எனக்கூறியுளளார்.





14 பேர் கைது

பிலெ டெல்பியாவில் அமைதியாக நடந்த போராட்டம், கார் தீ வைத்து எரிக்கப்பட்டதும் வன்முறையாக மாறியது. இரவு ரோந்தின் போது, ரிட்டன்ஹவுஸ் சதுக்கம் அருகே உள்ள கட்டடத்திற்கு தீவைக்கப்பட்டது. இதில் 13 போலீசார் காயமடைந்துள்ளனர். 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.வெள்ளை மாளிகை அருகே நடந்த போராட்டத்தின் போது, அங்கிருந்த தடுப்புகளை தள்ளிவிட்டனர்.


மியாமியில் வன்முறை

மியாமி பகுதியில் நடந்த போராட்டத்திலும் வன்முறை வெடித்ததால் போராட்டக்காரர்களை விரட்ட கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர். இதில்,3 போலீஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.இதனையடுத்து வன்முறையாளர்கள் கலைந்து சென்றனர்.

போலீசார் குவிப்பு


லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது, அங்கிருந்த சிறிய கடைகள் சூறையாடப்பட்டன. மேலும் பல கடைகளுக்கு போராட்டக்காரர்கள் குறிவைத்துள்ளனர். கடைகளில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை பெட்டி பெட்டியாக எடுத்து செல்கின்றனர். இதனால், தேசிய பாதுகாப்பு படையினரை அனுப்பி வைக்கும்படி கவர்னருக்கு மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


டெக்சாஸ்

டெக்சாசில் ஹூஸ்டன் மற்றும் டல்லாஸ் பகுதிகளில் போராட்டம் அமைதியாக நடந்தது.சிட்டி ஹால் மற்றும் போலீஸ் வாகனங்களை அடித்து சேதப்படுத்த முயன்ற கும்பலை போலீசார் கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் ரப்பர் பெல்லட்களை வீசி விரட்டினர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணியில் ஹூஸ்டன் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மின்னசோட்டாவில், கார்களை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால், போலீசார் ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் ஊற்றி அத னை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் பொது மக்களை அமைதியாக வீடுகளுக்கு செல்லும்படி வேண்டுகோள் விடுத்தனர்.
டென்வர், சியாட்டில், அட்லாண்டா போன்ற பகுதிகளிலும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போலீசார், கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.


டிரம்ப்பிற்கு நெருக்கடி

இந்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், வெள்ளை மாளிகையில் இருந்து நாட்டு மக்களிடம் பேச வேண்டும் என டிரம்ப்பிற்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டிரம்ப் உரை மூலம் தலைமை பண்பு மற்றும் ஒற்றுமையை காண்பிப்பதுடன், அமெரிக்காவில் வசிக்கும் ஆப்ரிக்கர்களின் ஆதரவை பெற முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அதற்கு டிரம்ப் ஆலோசகர் ஜார்ட் குஷ்னர் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது. இதனால், பிரச்னை அதிகரிக்கும் என அவர்கள் நம்புவதாக கூறப்படுகிறது.




தனியார் பேருந்துகள் நாளை ஓடாது - தனியார் பேருந்து உரிமையாளர் சம்மேளனம் தகவல்





தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 30-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள பொது பேருந்து போக்குவரத்து நடைமுறை குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் 50 சதவீத அரசு பேருந்துகள் நாளை முதல் இயங்கும் என அரசு அறிவித்துள்ள நிலையில், தனியார் பேருந்துகள் நாளை இயங்காது என தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர் மாநில சம்மேளனம் தெரிவித்துள்ளது.

60 சதவீத பயணிகளுடன் இயங்குவது சாத்தியம் இல்லை என்று அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது. காலாண்டு வரியைத் தள்ளுபடி செய்வது உள்ளிட்ட தங்களது கோரிக்கை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே பேருந்துகள் இயங்கும் என்றும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை





மதுரவாயலில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து ரூ.13 லட்சம் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் கிருமி நாசினி தெளிப்பதாக கூறி ஏடிஎம் மையத்தில் ரூ.13 லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
பணத்தை கொள்ளையடித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை மதுரவாயல் தனியார் வங்கி ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை நடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 




   மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
           
            https://nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks