Advertisement

Breaking News

வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 02 - Kamarajar- Part 02


பெருந்தலைவர்-காவியத் தலைவர்


நினைத்தாலே பிரமிப்பாகத் தான் இருக்கிறது - கர்மவீரர் காமராஜரைக் குறித்து!

தன்னைத் தானே கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடிந்த மனிதன் இந்த நாட்டையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதற்கு மிகச் சிறந்த எடுத்துகாட்டு காமராஜர் தான்!

பற்றுகள் இல்லாமல் அவர் வாழ்ந்த பத்திய வாழ்வு தான் அவரை பெருந்தலைவராக்கியது. இந்த தமிழ்நாட்டிற்கு ஒரு பொற்கால ஆட்சியை சாத்தியமாக்கிற்று.

பதவிகள் இருந்தும் பற்றற்று வாழ்வது துறவிலும் உன்னத துறவாகும்!

அதிகார பலங்கள் அபரிமிதமாய் வாய்த்திருந்த போதிலும் ஆத்மபலத்தை மட்டுமே பயன்படுத்தி வாழ்வதற்கு பெரிதும் பக்குவம் தேவை.

அவர் காந்திய யுகத்தால் கட்டமைக்கப்பட்ட தலைவரல்லவா...?

மெத்தப்படித்த மேதாவியான பண்டித ஜவஹர்லால்நேருவே காமராஜரின் யோசனைகளை கேட்டுப் பெற்றார் என்றால், சமூகத்தை படித்ததில், மனிதர்களை மதிப்பீடு செய்வதில், பட்டறிவில், அனுபவஞானத்தில் காமராஜர் ஓர் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்தார் என்பதுவன்றோ உண்மை!

வாராது போல் வந்த மாமணியாய் தமிழகத்தின் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்று அவர் ஆட்சி செய்த ஒன்பதே ஆண்டுகளில் ஒப்பற்ற பல திட்டங்களை செயல்படுத்தி தமிழகத்தை உன்னத நிலைக்குக் கொண்டு சென்றார்.

அந்த காலகட்டத்தில் தமிழகம் கல்வி எனும் ஒளிவெள்ளம் பாய்ச்சப்பெற்றது. தமிழகத்தை இன்று வரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் நீராதாரத்திட்டங்களான பல அணைகள் கட்டப்பட்டன. வைகை. மணிமுத்தாறு, கீழ்பவானி, அமாரவதி, சாத்தனூர், கிருஷ்ணகிரி, புள்ளம்பாடி, நொய்யாறு, ஆழியாறு... என்ற அணைகள் தான் இன்று தமிழகத்தை வாழவைத்துக் கொண்டுள்ளன, அவர் காலத்திற்குப் பின் இது போன்ற அணைகள் ஏன் உருவாக்கப்படவில்லை?




சில நூறு கோடிகளே அரசு வருவாயிருந்த ஒரு காலகட்டத்தில் நிகழ்த்த முடிந்த சாதனைகளை இன்று ஒரு லட்சம் கோடிக்கும் அதிகமான வரிவருவாய் பெறுகின்ற அரசுகளால் நிகழ்த்த முடியவில்லை.

குறைந்த பட்சம் ஏரி குளங்களைக் கூட தூர்வாறத் துப்பற்ற நிலைமைகளையே காண்கிறோம் - இத்தனைக்கும் ஆண்டுக்காண்டு ஏரி குளங்களைத் தூர்வாற பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டும் பலன் காண இயலவில்லை!




இது மட்டுமா? என்.எல்.சி உள்ளிட்ட எத்தனையெத்தனை மின் உற்பத்தி திட்டங்கள் ஏற்படுத்தப்பட்டன... அதற்கு பின் வந்தவர்களால் ஏன் முடியவில்லை?



பெரம்பூரில் ரயில்பெட்டித் தயாரிப்பு தொழிற்சாலை, திருச்சியில் பெல் தொழிற்சாலை, மணலியில் ஆயில்சுத்திகரிப்பு ஆலை, ஊட்டியில் போட்டோபிலிம் தொழிற்சாலை... போன்றவை லட்சக்கணக்கான குடும்பங்களை வாழ வைத்த திட்டங்களல்லவா?

தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் தீட்டப்பட்டது. பொது மக்களின் நன்கொடைகளைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டன.

இவ்வளவு சிறந்த நல்லாட்சியை தந்து கொண்டிருந்தவர் தானே விரும்பியல்லவா பதவியைத் துறந்தார். சுதந்திரத்திற்காக பாடுபட்ட காங்கிரஸ் தலைவர்களில் பலர் அதிகார போதையில் சிற்சில தவறுகளை செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், காங்கிரசின் நற்பெயருக்கு ஒரு களங்கம் ஏற்பட ஆரம்பித்துள்ளது எனத் தெரியவந்தவுடனேயே காமராஜர் அவர்கள் அகில இந்திய அளவில் ஒரு திட்டத்தை அறிவித்தார். அது உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைத் துறந்து களப்பணிகளில் ஈடுபட முன்வரவேண்டும். அதன் மூலம் மட்டுமே மீண்டும் மக்களிடம் நம் நற்பெயரை மீட்டெடுத்து தக்க வைக்க முடியும் என்றார்.

இது சாதாரணத்திட்டமா? அதிகாரத்தை துறப்பது என்பது எவ்வளவு சிரமமானது. கர்நாடகத்தில் எடியூரப்பாவை பதவி இறங்க வைக்க பா.ஜ.க மேலிடம் எவ்வளவு பகிரத பிரயத்தனங்களை மேற்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் காமராஜரோ ஏதோ செருப்பை கழட்டுவதை போல தன் பதவியை மிக இயல்பாகத் துறந்தார். அது அகில இந்தியாவின் அனைத்து முன்னணி தலைவர்களின் மனசாட்சியையும் உலுக்கியது.

காமராஜர் செயலின் எதிர்வினையாக ஒரிசா முதல்வர் பி.ஜூபட்நாயக், காஷ்மீர் முதல்வர் பக்ஷிகுலாம்முகமது, உத்தரபிரதேச முதல்வர் பி.ஏ.மண்டலாய் ஆகியோரும் முதலமைச்சர் பதவியைத் துறந்தனர். இதோடு முடியாமல் மத்திய அமைச்சர்களாயிருந்த மொரார்ஜிதேசாய், லால்பகதூர் சாஸ்திரி, எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம், பி.கோபால்ரெட்டி, கே.எல்.ஸ்ரீமாலி ஆகியோறும் பதவியைத்துறந்தனர்.

இறுதியாக பிரதமர் நேருவும் தன் பதவியை துற்க்க முன்வந்தபோது காமராஜர் அதனை உறுதியாகத் தடுத்துவிட்டார். 'அது இட்டுநிரப்பமுடியாத வெற்றிடம் எனவே நிச்சயம் நீங்கள் தொடரவேண்டும' என நேருவுக்கே கட்டளையிட்டார்.

உண்மையில், காமராஜர் இடத்தையும் அதற்குபின் இட்டு நிரப்பக்கூடிய யாரும் இல்லை என்பதே நிதர்சனமாயிருந்தது என்றாலும், அடுத்தவருக்கு அதிகாரம் செய்ய வழிவிட்டு கர்மமே கண்ணாய் தன்னை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்ட மகத்தான கர்மவீரர் காமராஜரே!

வலிமை இருந்த போதும்
மிக எளிமையோடு இருந்தார்.
தனை பெற்ற தாயை விட
தான் பிறந்த நாடு பெரிது என்றார்.

காமராஜர் ஓர் ஆபூர்வதலைவர். இனி இப்படியொரு தலைவன் கிடைக்க தமிழகம் நூறாண்டுகள் தவம் கிடக்க வேண்டுமோ?

தொடரும் ........

www.nmsfriendsassociation.blogsot.com

No comments

Thanks