Breaking News - 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று முதல்வர் ஆலோசனை
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: இன்று
முதல்வர் ஆலோசனை
09.06.2020
சென்னை: 10-ம் வகுப்பு தேர்வு குறித்து இன்று முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
'மாணவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கு ஏதும் நேர்ந்தால், யார் பொறுப்பு? பத்தாம் வகுப்பு தேர்வை தள்ளி வைப்பது குறித்த முடிவை, அரசே எடுத்தால் நல்லது' என, சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்து அரசு தரப்பில் விரிவான அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை, வரும்11-ம் தேதி தள்ளி வைத்துள்ளது.
இந்நிலையில் 10-ம் வகுப்பு தேர்வை தள்ளிவைப்பது மற்றும் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் பழனிசாமி, கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அதிகாரிகளுடன் நாளை (ஜூன் 9) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் உயர்நீதிமன்றத்தில் அரசின் முடிவு என்ன என்பது தெரியவரும்.
நாயின் வாயில் டேப் சுற்றி கொடுமை: கேரளாவில் மீண்டும் மிருகவதை
திருச்சூர்: நாய் விடாமல் குரைத்ததால் அதன் வாயில் டேப்பை சுற்றி கொடுமைக்கு ஆளாக்கி உள்ளனர்.
சமீபத்தில் கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று வெடிபொருள் நிரம்பிய தேங்காயை சாப்பிட்டதால் வாயில் படுகாயம் அடைந்து பரிதாபமாக உயிர் விட்டது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் உயிர் விட்டது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்நிலையில் நாய் ஒன்றின் வாயினை டேப்பினால் கட்டி கேரளாவின் திருச்சூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இரண்டு வாரங்களுக்கு முன் திருச்சூர் விலங்குகள் நல அமைப்புக்கு ஒரு போன் வந்துள்ளது. அதில் ஒல்லூர் பகுதியில் நாய் ஒன்று வாயில் டேப் ஒட்டப்பட்டதால் அது உணவு உண்ண முடியாமலும், நீர் அருந்த முடியாமலும் தவிப்பதாக தகவல் வந்தது. இதையடுத்து விலங்குகள் நல வாரிய அமைப்பினர் நாயைத் தேடி அலைந்துள்ளனர். பல நாட்கள் கழித்து தான் தற்போது தான் நாய் கண்டுபிடிக்கப்பட்டது. நாயின் வாயைச் சுற்றி பல அடுக்குகளாக டேப் பலமாக ஒட்டப்பட்டிருந்தது. வாயை திறக்க முடியாத அளவுக்கு ஒட்டப்பட்டதால் உண்ண முடியாமலும், நீர் அருந்த முடியாமலும் அது தவித்து வந்துள்ளது.
டேப் அழுத்தத்தால் அதன் நாசி எலும்புகள் பாதிப்பு அடைந்துள்ளன. தோல் பகுதியிலும் காயம் ஏற்பட்டுள்ளது. விலங்குகள் நல வாரிய அமைப்பினர் நாயை மீட்டியதும் அதன் வாயில் ஒட்டப்பட்ட டேப்பை கழற்றினர். டேப் கழற்றப்பட்டதும் சுமார் 2 லிட்டர் தண்ணீர் குடித்ததாக விலங்குகள் நல அமைப்பின் செயலாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும் ராமச்சந்திரன் கூறுகையில், ' உணவு, தண்ணீர் இல்லாமல் நாய்களால் சில வாரங்கள் வாழ முடியும். தற்போது கால்நடை மருத்துவமனையில் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதன் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தயவு செய்து விலங்குகளை துன்புறுத்தாதீர்கள்' இவ்வாறு கூறினார். நாய் குரைத்தது தொந்தரவாக இருந்ததால் யாரோ அதன் வாயில் டேப் ஒட்டியதாக தெரிகிறது.
இந்தியாவில் ஒரே நாளில் 9,983 பேருக்கு தொற்று: இதுவரை 2.5 லட்சம் பேருக்கு மேல் பாதிப்பு
புதுடில்லி: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.5 லட்சமாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,135 ஆகவும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 9,983 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 381 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 094 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 206 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 85,975 3,060
தமிழகம் - 31,667 -269
டில்லி - 27,654-761
குஜராத் - 20,070 -1,249
ராஜஸ்தான் - 10,599 - 240
உத்தர பிரதேசம் - 10,536 - 275
மத்திய பிரதேசம் - 9,401 - 412
மேற்கு வங்கம் - 8,187-396
கர்நாடகா- 5,452 - 61
பீஹார் - 5,088 -30
ஆந்திரா - 4,708 - 75
ஹரியானா - 4,448 - 28
காஷ்மீர் - 4,087 -41
தெலுங்கானா - 3,580 - 123
ஒடிசா- 2,856-09
பஞ்சாப்- 2,608-51
அசாம் - 2,565-04
கேரளா - 1,914 - 15
உத்தரகாண்ட் - 1,355-13
ஜார்க்கண்ட்-1,099 -07
சத்தீஸ்கர்1,073 -04
திரிபுரா-800-0
ஹிமாச்சல பிரதேசம் -413 - 05
சண்டிகர் -314-05
கோவா-300-0
மணிப்பூர்-172-0
நாகலாந்து-118-0
லடாக்-103-01
புதுச்சேரி- 99 - 0
அருணாச்சல பிரதேசம்-51-0
மேகாலயா-36-1
மிசோரம்-34-0
அந்தமான-33-0
தாதர் மற்றும்நாகர் ஹவேலி-20-0
சிக்கிம்-07-0
தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.,அன்பழகன் மீண்டும்
கவலைக்கிடம்: மருத்துவமனை தகவல்
சென்னை; 'கொரோனா தொற்றால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஜெ.அன்பழகன், 61, மீண்டும் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரிவிக்கிறது.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி, எம்.எல்.ஏ., - ஜெ.அன்பழகன்,61 இவருக்கு, சில நாட்களுக்கு முன் , மூச்சு திணறல் ஏற்பட்டதால், குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்ததில், கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கடந்த, 4ம்தேதி, வென்டிலேட்டர் வாயிலாக, 80 சதவீதம் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. பின்னர் ஆக்சிஜன் அளவு குறைக்கப்பட்டதால் அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது' என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஜெ.,அன்பழகனுக்கு இன்று காலையிலிருந்து தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு அதிகரித்துள்ளது. தற்போது அவரது இதயம், சிறுநீரகத்தின் செயல்பாடுகள் மோசமடைந்துள்ளன. ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது. எனினும்அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
'யானை தற்செயலாக வெடிமருந்து பழத்தை
சாப்பிட்டிருக்கலாம்': சுற்றுச்சூழல் அமைச்சகம்
புதுடில்லி : கேரளாவில் கர்ப்பிணி பெண் யானை வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை தற்செயலாக சாப்பிட்டு இருக்கலாமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் சைலன்ட் வேலி பகுதி காட்டு யானைகள் நிறைந்த இடம். இங்கிருந்து உணவு தேடி வெளியே வந்த பதினைந்து வயது மதிக்கத்தக்க கர்ப்பம் தரித்த யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. மனித மிருகங்கள் சிலர் வெடிபொருள் நிரப்பிய அன்னாசி பழத்தை யானைக்கு கொடுத்துள்ளனர். அப்பாவி யானை வாயில் பழத்தை போட்ட வேகத்தில், உள்ளிருந்த வெடிப்பொருள் வெடித்ததில் யானையின் வாய், தாடை, நாக்கு எல்லாம் சிதறியது. வயிற்றில் இருந்த ஒரு மாத குட்டிக்காக வேறு உணவு பொருட்களை சாப்பிட முயன்று எதுவும் முடியாமல் போகவே, வேதனையை மறக்க வெள்ளியாற்றில் இறங்கி வாய்ப்புண்ணால் ஏற்பட்ட எரிச்சலை தணிக்க முயற்சித்துள்ளது. ஆனால் மூன்று நாட்கள் அதே இடத்தில் நின்றிருந்த யானை மீட்க வனத்துறையினர் முயற்சித்த போது ஜல சமாதியானது தெரியவந்தது. நாட்டையை உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக கேரள அரசு, வனத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் டுவிட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது : பலமுறை உள்ளூர்வாசிகள் காட்டு பன்றிகள் பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க, சட்டவிரோதமாக வெடிமருந்து நிரப்பிய பழங்களை வைத்திருத்திருக்கலாம். கேரளாவில் கர்ப்பிணி பெண் யானை வெடிமருந்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை தற்செயலாக சாப்பிட்டு இருக்கலாமென முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. யானை கொல்லப்பட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் கேரள மாநில அரசுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
தெலுங்கானாவில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து:ஆல் பாஸ் என முதல்வர் அறிவிப்பு
கொரோனாவை கட்டுப்படுத்திவரும் நடவடிக்கையின் காரணமாக, தற்போதைய சூழ்நிலையில் 10 ம் வகுப்பு தேர்வை நடத்த இயலாத நிலை உள்ளதால், தேர்வு எழுதாமலே அனைவரும் தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜூன் 15 ம் தேதி 10 நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் குறையாத காரணத்தால் தேர்வை ஒத்திவைக்க கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் வழக்கு ஜூன் 11 ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒரு அங்குல நிலம் கூட போகாது': லடாக் பா.ஜ.,
எம்பி உறுதி
லடாக்: சீனாவுடனான எல்லை பிரச்னையில், பிரதமர் மோடி அரசின் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ஒரு அங்குல நிலம் கூட போகாது என லடாக் எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால் தெரிவித்துள்ளார்.
லடாக் மற்றும் சிக்கிமில், சீனாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளும் வழக்கமான ரோந்து பணிகளின் போது, சீன ராணுவத்தினர் இடையூறு ஏற்படுத்துவதாக, இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள சீனா, இந்திய ராணுவத்தினர் தான், எல்லை தாண்டி வருவதாக அபாண்டமாக கூறி வருகிறது. இதையடுத்து, இரு நாடுகளும் எல்லையோரம் ராணுவத்தை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலான பேச்சில், எல்லை பிரச்னையை பேச்சுவார்த்தை மூலம் சுமூகமாக தீர்க்க ஒப்புகொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் மூன்று நாள் பயணமாக, இந்தியா - சீனா படைகள் குவிக்கப்பட்ட கிழக்கு லடாக் பகுதிக்கு சென்ற லடாக் பா.ஜ.,எம்.பி ஜம்யங் செரிங் நம்கியால், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள பாங்கோங் த்சோ ஏரி ஒட்டிய பகுதியில் வசிக்கும் மக்களின் குறைகளை கேட்டறிந்ததுடன், மக்களின் பாதுகாப்பு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதியளித்தார்.
இது தொடர்பாக பா.ஜ.எம்.பி., நம்கியால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'எங்கள் அண்டை நாடுகளுடன் எந்தவொரு மோதலையும் நாங்கள் விரும்பவில்லை, அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பிரதமர் மோடியின் தலைமையில் மிகவும் திறமையான அரசாங்கம் நம்மிடம் உள்ளது. அவர் மிகவும் தேசபக்தி, ஆற்றல் மிக்கவர் மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் மிகவும் வலுவான தேசத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதியுடன் உள்ளார். பிரதமர் மோடியின் தலைமையில், ஒரு அங்குல இந்திய நிலம் கூட போகாது என்று நாட்டு மக்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது'
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா - சீன எல்லையில் பதற்றம் நீடித்த நிலையில், இது நம்கியாலின் இரண்டாவது பயணம் ஆகும். முன்னதாக மே 18ம் தேதி அன்று சுமூர், ஹான்லி, கொயுல், டெம்ஜோக், புச்சே, டங்டி மற்றும் சாகான் ஆகிய இடங்களுக்கு பயணம் செய்திருந்தார்.
டில்லி முதல்வருக்கு கொரோனாவா?
புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவருக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. அவர் உடல் நலத்தில் முழுக்கவனம் எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை உலக பட்டியலில் 6வது இடத்திற்கு நெருங்கி உள்ளது. இதுவரை மொத்தம் 2 லட்சத்து 56 ஆயிரத்து 611 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 206 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 135ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் டில்லி, மும்பை, சென்னை, என மெட்ரோ நகரங்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. டில்லியில் மொத்தம் 27 ஆயிரத்திற்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் . இது வரை 750 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு லேசான காய்ச்சல், இருமல் ஏற்பட்டு நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தன்னை தாமே தனிமைப்படுத்தி கொண்டார். மேலும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துள்ளார்.
இன்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனை முடிவிற்கு பின்னரே அவரது நிலை குறித்த உண்மை நிலவரம் வெளியே தெரியவரும். கெஜ்ரிவாலை பொறுத்தவரை அவருக்கு அடிக்கடி இருமல் தொந்தரவு ஏற்கனவே இருந்து வருகிறது. இதனால் மருத்துவர்கள் , கெஜ்ரிவால் ஆதரவாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
No comments
Thanks