Advertisement

Breaking News

மேற்குத் தொடர்ச்சி மலை - (Western Ghats)


    மேற்குத் தொடர்ச்சி மலை (Western Ghats)




இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா , கர்நாடகா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும்.

 இம்மலைத்தொடர் மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மஹாராஷ்டிரா , கோவா , கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று தமிழ்நாட்டில் கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் சதுர கிமீ ( 160000 km² ).   இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும்.



 இந்தியாவின் 50 அணைக்கட்டுகள், 126  ஆறுகள், 29 நீர்வீழ்ச்சிகள், கொடைக்கானல், ஊட்டி, மூணாறு உள்ளிட்ட பல சர்வதேச கோடை வாழிடங்கள் , சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் பல புகழ்பெற்ற கோயில்கள் , ஆண்டு முழுவதும்  மழைப்பொழிவைக் கொடுக்கும் முள்புதர் காடுகள், புல்வெளிப் பிரதேசங்கள், சோலைக்காடுகள், பசுமைமாறா காடுகள் உள்ளிட்ட இயற்கை அன்னையின் அனைத்து அதிசயங்களையும் பெற்றுள்ளது.

தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. கோவையில் சிறுவாணி "உலகின் இரண்டாம் சுவைமிகு நீர்" ,பவானி ,நொய்யல் என நதிகள் பிறக்கின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும்.


இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகாராஷ்ராவில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை, கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை,  தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு போன்றவை குறிப்பிடத்தகுந்தவைகளாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய கஸ்தூரிரங்கன் அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது எனக்கூறிய அறிக்கையை மத்திய அரசு தடை செய்தது. இந்தக்குழு தனது அறிக்கையை 2013, ஏப்ரல் 15 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் 37 சதவீதம் பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

விவசாய நிலங்கள், தோட்டங்கள், மக்கள் வசிப்பிடங்கள் என்று 58.44 சதவீதப் பகுதிகள் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. மீதமுள்ள மற்றப் பகுதிகளில் 90 சதவீதம் இயற்கைப் பகுதிகள் என்று அடையாளம் காணப்பட்டு, அவை அதிநுட்பமான சுற்றுச் சூழல் பகுதியாக (Ecologically Sensitive Area -ESA) கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்துள்ளது. இதன்படி குஜராத், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 188 வட்டங்கள் சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பகுதிக்குள் வருகின்றன. இவற்றில் சுமார் 4,000 கிராமங்கள் அடங்கி உள்ளன. மேலும் 40 இலட்சம் மக்கள் வசிக்கின்றனர்.
இந்தக் குழுவின் அறிக்கையின் படி கேரள மாநிலத்தில்தான் அதிக ஆக்கிரமிப்புகள் உள்ளன. இங்கு உள்ள 123 மலைக் கிராமங்கள் சுற்றுச்சூழல் பகுதிக்குள் வருகின்றன.



கஸ்தூரிரங்கன் குழுவின் முக்கியப் பரிந்துரைகள் வருமாறு:-


> மேற்குத் தொடர்ச்சி மலையில் 37 கதவீதம் பகுதி இயற்கை பாதுகாப்புப் பகுதி யாக விளங்குகிறது. இந்த பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மேலும் ஆக்கிரமிப்புகள் உருவாக அனுமதிக்கக்கூடாது.

> இப்பகுதிகளில் 20 ஆயிரம் சதுர மீட்டர் அல்லது அதற்கு மேல் எந்தவிதமான கட்டடங்களும் கட்டக்கூடாது.

> பாதுகாக்கப்பட்ட இந்தப் பகுதிகளில் 50 ஹெக்டேருக்கு மேல் நகரியங்களை அமைக்கக்கூடாது.
இந்தப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மணல் குவாரிகளோ, எந்த விதமான சுரங்கப் பணிகளோ மேற்கொள்ளக்கூடாது.

> சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைக்கக் கூடாது.
எண்ணெய் தொழிற்சாலை சிமெண்ட் தொழிற்சாலை, பூச்சிக் கொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை அமைக்கக் கூடாது.ஏற்கனவே செய்யப்பட்டு வரும் இத்தகைய தொழிற்சாலைகளை உடனே தடை செய்ய வேண்டும்.

 முறையான விதிமுறைகளுக்கு உட்பட்டு, சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில், காற்றாலை மின் திட்டங்கள், நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றை அமைக்கலாம். ஆனால், இதனை மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் கண்காணிக்க வேண்டும்.

இந்த மலைத் தொடரை ரஷ்ய நாட்டின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கூடிய உலகப் பாரம்பரிய இடங்கள் குறித்து ஆராயும் குழு ( UNESCO ) உலகப் பாரம்பரிய மலைத் தொடராக தேர்வு செய்துள்ளது.இதற்கான குழுக் கூட்டத்தில், அல்ஜீரியா, கம்போடியா, கொலம்பியா, எஸ்தோனியா, எத்தோப்பியா, ஈராக், ஜப்பான், மலேசியா, மாலி, மெக்சிகோ, கத்தார், ரஷ்யா, செனகல், செர்பியா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் தாய்லாந்து ஆகிய, 17 நாடுகள் உறுதியான ஆதரவு அளித்தன.

ஆனால் மனிதர்களின் ஆடம்பர மோகம், மேலைநாட்டு கலாச்சார மோகத்தால் உலக பாரம்பரியமிக்க இந்த மேற்கு தொடர்ச்சி மலை மெல்ல மெல்ல அழிந்து பாரம்பரியத்தை இழந்துவருவது வருத்தமளிப்பதாக உள்ளது. இதனை அரசும் , மக்களும் உணர்ந்து பாதுகாக்க வேண்டும்.

www.nmsfriendsassociation.blogspot.com

No comments

Thanks