உலகச் செய்திகள் - நொறுங்கியது பாக்.,விமானம்:நுாற்றுக்கணக்கானோர் பலி?
நொறுங்கியது பாக்.,விமானம்:நுாற்றுக்கணக்கானோர் பலி?

கராச்சி :
பாகிஸ்தானில், 107 பேருடன் பறந்த விமானம், கராச்சி விமான நிலையம் அருகே, குடியிருப்பு பகுதியில் விழுந்ததில், நுாற்றுக்கணக்கானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானின் லாகூரிலிருந்து, கராச்சிக்கு, 98 பயணியர் உட்பட 107 பேருடன், பி.ஐ.ஏ., எனப்படும், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானம், மதியம் புறப்பட்டது, கராச்சி விமான நிலையத்தை, விமானம் நெருங்கியதும், அதில் கோளாறு எற்பட்டது.
இது பற்றி, கராச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்த பைலட், விமானத்தை உடனடியாக தரையிறக்க வேண்டும் எனக் கூறினார்.
இதையடுத்து, கராச்சி விமான நிலையத்தில், விமானத்தை தரையிறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விமானம் தரையிறங்கிய போது, எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. விமானம் விழுந்த பகுதியில் தீப்பிடித்தது. குடியிருப்புப் பகுதி என்பதால் ஆம்புலன்ஸ்கள் செல்வதிலும் கடும் இட நெருக்கடி ஏற்பட்டது.

மீட்பு பணியில்,போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
விமானம் விழுந்ததில், 8 - 10 வீடுகள் சேதடைந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானத்தில் இருந்தவர்கள், இடிந்த வீடுகளில் இருந்தவர்களின் கதி தெரியவில்லை. பெரும்பாலானோர் இறந்திருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதுவரை, நான்கு பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.பாகிஸ்தானில், கொரோனா பரவலால், ஒரு மாததத்துக்கு மேலாக தடை செய்யப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை, சில நாட்களுக்கு முன் துவங்கிய நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.
சீனாவை எளிதில் விட மாட்டோம் : டிரம்ப் மீண்டும் பாய்ச்சல்
வாஷிங்டன்: '
'கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது. இந்த விஷயத்தில், சீனாவை எளிதில் விட்டு விடமாட்டோம்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
'கொரோனா வைரஸ் உலகம் முழுவதற்கும் பரவ சீனா தான் காரணம்' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். நேற்று அவர் கூறியதாவது:
கொரோனா வைரஸ், சீனாவில் இருந்து தான், அமெரிக்காவுக்கு பரவியது.
இந்த விஷயத்தில் எங்கள் அதிருப்தியை ஏற்கனவே தெரிவித்துள்ளோம்.
மீண்டும் அதை பதிவு செய்ய விரும்புகிறோம்; இதை, அவ்வளவு எளிதாக விட்டு விட மாட்டோம். சீனாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான நடவடிக்கையை எடுப்போம்.

'அமெரிக்காவில் கடுமையான கட்டுப்பாடுகளை தொடர்ந்திருந்தால், வைரஸ் பாதிப்பை குறைந்திருக்கலாம்' என, சிலர் கூறியுள்ளனர்.
இவர்களை விஞ்ஞானிகளாக பார்க்க முடியாது. டிரம்பின் அரசியல் எதிரிகளாகவே பார்க்கிறேன்.
அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட, 30 நாடுகளுக்கு இடையே, வான் சேவை ஒப்பந்தம், 2002ல் கையெழுத்தானது.
இதன்படி, இந்த, 30 நாடுகளும், தங்களுக்கு இடையே பரஸ்பரம் நம்பிக்கையை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் விதமாக, தங்கள் பகுதிகளுக்குள் ஆயுதங்கள் ஏந்தாத கண்காணிப்பு விமானங்களை இயக்கலாம்.
ஆனால், ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறி வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவது என, நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
இதற்கிடையே, மிச்சிகன் மாகாணத்தில் கடுமையான மழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.நிவாரண பணிகளை முழு வீச்சில் மேற்கொள்ளும் வகையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மிச்சிகனில் அவசர நிலையை அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் புதிதாக 614 பேருக்கு கொரோனா
கொரோனா தாக்கம் அதிகரித்து சிங்கப்பூரில் மேலும் 614 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக இன்று (மே.,22) சுகாதாரதுறை அதிகாரிகள் கூறுகையில், சிங்கப்பூரில் மேலும் 614 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 30,426 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 4 பேர் சிங்கப்பூரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வெளி நாடுகளில் இருந்து வந்து தங்கி பணியும் தொழிலாளர்கள் என தெரிய வந்துள்ளது.
பிலிப்பைன்சில் ஒரே நாளில் 163 பேருக்கு
கொரோனா தொற்று
பிலிப்பைன்சில் கடந்த 24 மணிநேரத்தில் (ஒரே நாளில்) மேலும் 163 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 13,597 ஆக அதிகரித்தது. மேலும் நேற்று 11 பேர் பலியாகினர். இதுவரை கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 857 ஆக உள்ளது. 3000 க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்தனர்.
கத்தாரில் மேலும் 1,830 பேருக்கு கொரோனா
கத்தாரில் மேலும் 1,830 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இது தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று (மே.,22) தெரிவித்ததாவது : கத்தாரில் கொரோனா அதிகரித்து, ஒரே நாளில் புதிதாக 1,830 பேருக்கு நோய் தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 40,481 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 2 பேர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது.மேலும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 32,569 ஆக உள்ளது. 175 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் 14,753 பேருக்கு கொரோனா;
பலி 98 ஆக உயர்வு
தமிழகத்தில் இன்று (மே 22) மேலும் 786 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 14,753 ஆகவும், பலி எண்ணிக்கை 98 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் புதிதாக 786 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று மட்டும் 846 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்த டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,128 ஆனது. மொத்தமுள்ள 67 ஆய்வகங்கள் மூலமாக ஒரே நாளில் 12,653 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. தற்போது 7,524 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடில்லி:
பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் லாகூரில் இருந்து புறப்பட்ட விமானம், கராச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, கட்டுப்பாட்டை இழந்து வீடுகளின் மீது மோதி தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் 107 பயணிகள் உயிரிழந்திருக்கலாம் எனவும்,வீடுகளில் இருந்தவர்களும் உயிரிழந்ததிருக்க கூடும் எனவும் அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் பதவிவேற்றியுள்ளதாவது:
விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடையவும் பிரார்த்திக்கிறேன். இவ்வாறு பதிவேற்றியுள்ளார்.
ஊரடங்கினால் 68 ஆயிரம்
உயிரிழப்புகளை தவிர்த்துள்ள இந்தியா

புதுடில்லி:
ஊரடங்கினால் 14 முதல் 29 லட்சம் கொரோனா பாதிப்புகளையும், 37 முதல் 68 ஆயிரம் உயிரழப்புகளையும் இந்தியா தவிர்த்துள்ளதாக கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழுவின் தலைவர் வி.கே.பால் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பணிக்குழுக்களில் அதிகாரம் பெற்ற குழு தலைவர் வி.கே.பால் கூறியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டதால், கொரோனா வைரஸ் வழக்குகளின் வளர்ச்சி வேகத்திற்கு ஒரு பிரேக் போட முடிந்தது. ஊரடங்கினால் இறப்புகளின் வளர்ச்சி வீதமும் கணிசமாக குறைந்துவிட்டது. ஊரடங்கை செயல்படுத்த முடியாமல் அல்லது தாமதப்படுத்தி இருந்தால், பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்திருக்கலாம். மேலும், ஊரடங்கு அமல்படுத்தியதால், இந்தியா சுமார் 14 லட்சம் முதல் 29 லட்சம் வரையிலான பாதிப்புகளையும், 37 ஆயிரம் முதல் 68 ஆயிரம் உயிரிழப்புகளையும் தவிர்த்துள்ளது.
தற்போது மஹாராஷ்டிரா, குஜராத், தமிழகம், டில்லி மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 5 மாவட்டங்களில் மட்டுமே நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்புகளில் 80 சதவீத பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மொத்த மாநிலங்களில் 90 சதவீத பாதிப்புகள் 10 மாநிலங்களில் பதிவாகியுள்ளன, மீதமுள்ள 10 சதவீத பாதிப்புகள் நாட்டின் பிற மாநிலங்களில் உள்ளன. நகரங்களை பொறுத்தவரையில், மும்பை, டில்லி, சென்னை, ஆமதாபாத், தானே, புனே, இந்தூர், கோல்கட்டா, ஐதராபாத் மற்றும் அவுரங்காபாத் ஆகிய 10 நகரங்களில் சுமார் 70 சதவீத கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்
பசி கொடுமையால் இறந்த நாயை
சாப்பிட்ட நபர்

புதுடில்லி:
ஜெய்ப்பூர் சாலையில் அடிபட்டு இறந்து கிடந்த நாயின் சடலத்தை, பசிக்கொடுமையில் சிக்கிய ஒருவர் சாப்பிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது

இதுகுறித்து ஜெய்பூரை சேர்ந்த பிரதுமன் சிங் நருகா என்பவர் யூடியூப்பில், கடந்த 18ம் தேதி, வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். டில்லி நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சாஹபுரா பகுதியில், சாலையில், ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருக்கிறார். பின் அவர் அருகே சென்ற நருகா, அவருக்கு உணவும் நீரும் வழங்கினார். இந்த வீடியோவை கண்ட பலரும் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வீடியோவும் வைரலானது
இதனை தொடர்ந்து பேஸ்புக்கில், நருகா பதிவிட்டதாவது: பசியால் ஒருவர் இறந்த நாயின் உடலை சாப்பிட்டு கொண்டிருப்பதை சாலையில் பார்த்தேன். யாரும் அவருக்கு உதவ வாகனங்களை நிறுத்தவில்லை என்பது கவலை அளிக்கிறது. நான் அவருக்கு உணவும், நீரும் வழங்கினேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே
பணியாற்ற உள்ள பேஸ்புக் ஊழியர்கள்
ஓக்லேண்ட்;
அமெரிக்காவின் பிரபல சமூகவலைதளமான பேஸ்புக்கின் 50 சதவீத ஊழியர்கள் அடுத்த 5 முதல் பத்து ஆண்டுகளுக்கு வீட்டிலிருந்தே பணியாற்றுவார்கள் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா பரவியதையடுத்து பல்வேறு ஆன்லைன் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பாதுகாப்பு காரணமாக வீட்டிலிருந்தே பணியாற்ற அறிவுறுத்தியது. அதன்படி உலகின் மிகப் பெரிய சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த 2 மாதங்களாக அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் பணிபுரிகின்றனர்.
இந்நிலையில் கொரோனா பரவல் உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருப்பதால் அமெரிக்காவின் பேஸ்புக் நிறுவனத்தின் பாதி ஊழியர்களை அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்கு வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அந்நிறுவன சிஇஓ மார்க் ஜுக்கர் பெர்க் தெரிவித்துள்ளார். இதன்படி 48,000க்கும் அதிகமான அந்நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற உள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks