Advertisement

Breaking News

கட்டுன மனைவியை பாம்பை விட்டு கொலை செய்த கொடூர கணவன்!



தமிழகத்தில் ஜூலை 1-ல் பள்ளிகள் திறப்பு?




பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என்றும் பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள்...

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி அளிப்பதா என்பது குறித்து மதிப்பெண்களை கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என்றும் பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி துவங்கும் என்று அறிவிக்கப்பட்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்க்ளா என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், மதிப்பெண்கள் வந்த பிறகு அவர்கள் எப்படி தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்பது குறித்து அரசு கூர்ந்து கவனித்து அரசு முடிவெடுக்கும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: “நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் ஜூன் மாதம் 2வது வாரத்தில் தொடங்க உள்ளது. இதில் 7,300 மாண்வர்களுக்கு 9 கல்லூரிகளில் 35 நாட்கள் பயிற்சி வழங்கபடும். இந்த ஆண்டு குறைந்தது ஒரு 100 பேராவது மருத்துவக் கல்லூரிக்கு செல்கிற வாய்ப்பு உருவாகும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உருவாகியிருக்கிறது.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்த பின், பள்ளிகள் திறப்பு மற்றும் மாணவர் சேர்க்கை தேதி அறிவிக்கப்படும்.

தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரப்பூர்வமாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

பத்தாம் வகுப்பு பொதுதேர்வு, ஜூன் 15-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைய உள்ளது. அதற்கு அடுத்த நாள் ஜூன் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அடுத்த நாள் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை நாட்களாக உள்ளன. அதனால், தமிழகத்தில் ஜூலை 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிகளைத் திறப்பது குறித்து ஆலொசனை நடத்தி விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டாஸ்மாக் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம்; ஊழியர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும்; தொமுச வேண்டுகோள்

ஊரடங்கு நேரத்தில் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளில் திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டதால் , ஊழியர்கள் தரப்பு நியாயத்தைக் கேட்க வேண்டும் என தொழிலாளர் முன்னேற்ற சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த மார்ச் 23-ம் தேதி டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி அரசு உத்தரவிட்டது. அதன் பிறகு, பாதுகாப்பற்ற நிலையில் உள்ள கடைகளில் இருந்த மதுபானங்களை வேறு இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது கோடிக்கணக்கான மதிப்பிலான மது பாட்டில்கள் முறைகேடாக விற்கப்பட்டன. இதில் கிடைத்த வருவாய் டாஸ்மாக் ஊழியர்களிடம் இருந்தது. இந்த சட்டவிரோத மது விற்பனையில் காவல்துறையினர், அரசு அதிகாரிகள் உட்பட பலரும் முக்கியப் பங்கு வகித்ததாகத் தகவல்கள் வெளியாகின. மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பிறகு, கணக்கில் வராத அந்தப் பணத்தை, ‘ஆப்டர் சேல்ஸ்’என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களில் பலர் அரசிடம் செலுத்தினர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக
விற்பனையான மதுபாட்டில்களுக்கு உரிய தொகை தவிர, அந்தத் தொகைக்கு 50 சதவிகித அபராதமும், 24 சதவீத வட்டியும் அத்துடன் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் கிர்லோஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். அதாவது, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் என்றால், அந்த ஒரு லட்சம் ரூபாய் போக, கூடுதலாக ரூ.50,000 அபராதமும், 24 சதவீத வட்டியும் 18 சதவிகிதம் ஜி.எஸ்.டியும் செலுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் தொ.மு.ச மாநிலத்தலைவர் ஆ.ராசவேல் டாஸ்மாக் மேலாண்மை இயக்குனருக்கு எழுதிய கடிதத்தில், ''இந்தக் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது. மேலும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கொடுக்க பணியாளர்களுக்கு முறையாக விளக்கம் கேட்கும் குறிப்பாணை ஏதும் வழங்காமல் நேரடியாக தண்டனை வழங்குவது இயற்கை நியதிக்கு (AGENT OF NATURE JUSTICE) எதிரானது. மாத ஊதியமாக 12000 ரூபாய்க்கும் குறைவாக பெற்று வரக்கூடிய இவர்களிடம் லட்சக்கணக்கான ரூபாய் அபராதம் கட்ட வேண்டுமென வற்புறுத்தி வருவது தொழிற்சங்க மற்றும் தொழிலாளர் நல சட்டத்திற்கு எதிரானதாகும். எனவே இதனை தாங்கள் மாறிய பரிசீலனை செய்திட வேண்டும். பணியாளர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கு, அவர்கள் தங்களின் நியாயத்தை எடுத்துரைக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்கள் மீது தொழிற்சங்க சட்டம், தொழிலாளர் நல சட்டத்தின்படி மேல் நடவடிக்கை மேற்கொள்வது நியாயமானதாக இருக்கும்'' என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் கடைசி ராஜா சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்!




திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து மணிமுத்தாறு செல்லும் வழியில் உள்ளது சிங்கம்பட்டி ஜமீன். கி.பி 1100ல் உருவான இந்த சிங்கம்பட்டி ஜமீனின் 31வது ராஜாவாக முருகதாஸ் தீர்த்தபதி இருந்து வந்தார். தமிழ்நாட்டில் 72 பாளையங்களுள் சிங்கம்பட்டியும் ஒன்றாக இருந்து வந்தது. தமிழகத்தின் 72 பாளையங்களில் 24ஐ சிங்கப்பட்டி ஜமீனே தலைமை தாங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

1936ம் ஆண்டில் தந்தை சங்கர தீர்த்தபதி மறைவுக்கு பிறகு தனது 6 வயதில் முருகதாஸ் தீர்த்தபதிக்கு முடிசூட்டப்பட்டது.

இந்தியாவில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டபோது சிங்கம்பட்டி ஜமீனிற்கு சொந்தமாக 80,000 ஏக்கர் நிலம் இருந்ததாக கூறப்படுகிறது.

ஜமீன் முறை ஒழிக்கப்பட்டாலும் கூட சிங்கம்பட்டி ஜமீனிற்கான மரியாதை எப்போதும் காக்கப்பட்டே வந்துள்ளது. அப்பகுதி மக்களும் ஜமீனிற்கு உரிய மரியாதையை அளித்தே வந்துள்ளனர். மக்களுக்கும், ஜமீனுக்குமான பந்தம் ஆண்டாண்டுகளாக தொடர்ந்து வரும் ஒன்றாகும்.

சொரிமுத்து அய்யனார் கோவில் விழாவில் ராஜா:

பிரசித்தி பெற்ற சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி அமாவாசை திருவிழாவின் போது சிங்கம்பட்டி ஜமீமுக்கு அளிக்கப்படும் மரியாதை சொல்லில் அடங்காதது.

இந்தியாவின் கடைசி ராஜா:


ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட்டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் முருகதாஸ் தீர்த்தபதி தான் எனவும் கூறப்படுகிறது.

இவ்வளவு பெருமைக்குரிய சிங்கம்பட்டி ஜமீன் தீர்த்தபதி முருகதாஸ் இன்று தனது 89வது வயதில், வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரின் மறைவையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த சோகமடைந்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருக்கும் காலகட்டம் என்பதால் இறுதி ஊர்வலத்தில் பெரிய அளவிலான மக்கள் கூட்டம் கூடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது, அவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எளிய வாழ்க்கை:


2016ம் ஆண்டு ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி கூறுகையில், 1935ம் ஆண்டு ஜமீனில் Buick, Dodge, Hutch Back, Chevrolet மற்றும் ஒரு Ford என 5 கார்கள் இருந்தன, ஆனால் அப்போது ஒட்டுமொத்த மதுரை ஜில்லாவிலும் சேர்த்து 4 கார்களே இருந்தன என்றார். தற்போது மாருதி ஸ்விஃப்ட் காரை பயன்படுத்திவருவதாக கூறினார்.

அதே போல அக்காலகட்டத்தில் 160க்கும் மேற்பட்ட பணியாட்கள் இருந்தனர், ஆனால் தற்போது ஒரு சில ஆட்கள்களே ஜமீனில் வேலைபார்த்து வருவதாகவும் கூறியிருந்தார்.

தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெறவேண்டும் - தமிழக அரசு அறிவிப்பு



சென்னை:


கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதற்கிடையே, நாளை முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி அறிவித்தார். இதையடுத்து, நாடு முழுவதும் விமான டிக்கெட்டுக்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது.
இந்நிலையில், உள்நாட்டு விமான பயணம் பற்றி தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

பயணிகளின் உடல்நிலை, தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வருகிறார்களா? என்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

தவறான தகவல் அளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இருப்பின் சிகிச்சை அளிக்கப்படும். இல்லையெனில் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பும் விமான பயணிகள், தமிழக அரசின் இ-பாஸ் பெற வேண்டியது அவசியம். இ-பாஸில் 8 விதிமுறைகள் விதிக்கப்பட்டிருக்கும்.

விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

சொந்த வீடு இல்லாதவர்கள் பணம் செலுத்தி தனிமைப்படுத்தும் மையத்தில் சேர வேண்டும்.

திருச்சியில் இருந்து நாளை விமானங்கள் இயக்கப்படும். சென்னை மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு விமான சேவை என தகவல்.

விமான நிலைய வாசல்களில் மாவட்ட ஆட்சியர்கள் சோதனை மையம் அமைக்க வேண்டும்.

பயணிகள் செல்லும் காரில் ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். பயணிகளின் உடைமைகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். தேவையான பயணிகளுக்கு சக்கர நாற்காலி வழங்கப்படும்.

தமிழகம் வரும் விமான பயணிகளுக்கு வெப்ப பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு தினமும் எத்தனை விமானங்கள் வரலாம்.. போகலாம்.. தமிழக அரசு அதிரடி நிபந்தனை!

சென்னை: பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.





நாடு முழுவதும 4வது முறையாக லாக்டவுன் அமலில் உள்ள போது தொடர்நது தளர்வுகளை மத்திய அரசு தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்து, ரயில், விமான சேவைகளை தொடங்கி அனுமதி அளித்துள்ளது. முதற்கட்டமாக பயணிகள் விமான சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது.

இந்நிலையில் விமான சேவைகளுக்கு அனுமதி அளிப்பதை மத்திய அரசு மாநில அரசுகளிடம் விட்டுவிட்டது. பல மாநில அரசுகளின் அறிவுறுத்தல்படி படிப்படியாக விமான சேவை இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், பிற மாநிலங்ளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழக அரசு சில கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவு விமானங்களை இயக்க அனுமதி அளித்துள்ளது.

பயணிகள் விமான போக்குவரத்து செயலர் பிரதீப் சிங் கரோலாவுக்குத் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு எவ்வளவு விமானங்களை வேண்டுமானாலும் இயக்கிக்கொள்ளலாம் எனக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 25 விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்வது குறித்த வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு விமானத்தில் வருவோர் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் உள்நாட்டு விமான பயணிகள் கீழ்க்கண்ட இணையதள முகவரிக்கு சென்று https://tnepass.tnega.org - பதிவு செய்து இ-பாஸ் பெறலாம்.

பிற மாநிலங்களில் இருந்து வரும் விமானப் பயணிகள் கையில் தனிமைப்படுத்தப்படும் நாள் தொடர்பாக ரப்பர் ஸ்டாம்ப் முத்திரை பதிக்கப்படும் என்றும் 14நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தவறான தகவல் கொடுக்கும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.


டெல்லியில் மேலும் 9 சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு





புதுடெல்லி:


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுக்க பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மக்கள் கடைப்பிடிக்கிறார்களா? என்பதை அந்தந்த நாடுகளின் ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸ்காரர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கண்காணித்து வருகின்றனர்.

இந்தியாவில் நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவமான மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (சி.ஆர்.பி.எப்.) பணியாற்றி வரும் வீரர் ஒருவருக்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது
மருத்துவ உதவியாளரான அவர் விடுமுறையில் இருந்து முகாமுக்கு திரும்பியபோது நடத்திய சோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் அந்த முகாமில் உள்ள அனைத்து வீரர்களும் டெல்லியில் உள்ள மருத்துவமனையில் தனிமைப்படுத்தப் பட்டனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் சி.ஆர்.பி.எப். சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

இந்நிலையில், மேலும் 9 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதையடுத்து, கொரோனாவால் பாதிப்பு அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 220 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர். 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 2 பேர் பலியாகி உள்ளனர்.

80கிமீ தூரம் மணமகன் வீட்டிற்கு நடந்தே சென்று திருமணம் செய்து கொண்ட மணப்பெண்!

ஊரடங்கால் தனது திருமணம் தள்ளிப்போகும் என அஞ்சிய மணப்பெண் ஒருவர் மாப்பிள்ளை வீட்டிற்கு 80 கிமீ நடந்தே சென்று கரம்பிடித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரை சேர்ந்த 20 வயது பெண் கொல்தி. இவருக்கும் அதே மாநிலம் கன்னூஜ் மாவட்டத்தை சேர்ந்த வீரேந்திர குமார் என்பவருக்கும் கடந்த 4ம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் போக்குவரத்து வசதிகள் இல்லை என இவர்களது திருமணம் தள்ளிவைக்கப்பட்டது.

இதற்கிடையே இருவரும் தினமும் செல்போன் மூலம் பேசி வந்துள்ளனர். ஊடங்கு முடிந்துவிடும் என நினைத்த கொல்திக்கு, மீண்டும் ஊரடங்கு நீட்டக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் தனது திருமணம் மீண்டும் தள்ளிப்போகும் என அஞ்சிய அவர், யாருக்கும் தெரியாமல் கான்பூரில் இருந்து மணமகன் வீட்டிற்கு நடந்தே செல்ல முடிவெடுத்துள்ளார்.

இதனையடுத்து சுமார் 80 கிமீ தூரம் நடந்தே சென்ற கொல்தி கனுஜ் மாவட்டத்தில் உள்ள மணமகன் வீட்டிற்கு சென்றடைந்தார். மணப்பெண் கொல்தியின் வருகையை எதிர்பார்க்காத மணமகன் வீரேந்திரக்குமார் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அவர்கள் இருவருக்கும் அருகில் உள்ள கோயிலில் எளிமையாக திருமணம் நடைபெற்றது. அப்போது மணமக்கள் இருவரும் முகக்கவசம் அணிந்தபடி திருமணம் செய்துக் கொண்டனர்.

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,869 ஆக அதிகரித்துள்ளது.


புதுச்சேரியில் மது விலைகள் 25 சதவீதம் அதிகரிப்பு




புதுச்சேரி: 
புதுச்சேரி்யில் நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்பட உள்ளதாக மாநில கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25 ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த 17 ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வருமானவரி இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன.

தமிழகத்திலும் நேரக்கட்டுப்பாடு மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் மது கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே புதுச்சேரியில் மது கடைகள் திறப்பதற்கு அனுமதி தரப்படாமல் இருந்து வந்தது. இதன்காரணமாக தமிழக எல்லையை ஒட்டி உள்ள விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட பகுதிகளுக்கு புதுச்சேரி மாநில மக்கள் மது வாங்க குவிந்தனர்.

புதுச்சேரியிலும் மது கடைகளை திறப்பது குறித்து முடிவு செய்ய கடந்த 18-ந் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் 20-ந் தேதி மது கடைகள் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்தார்.

இதனையடுத்து கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம், கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

தொடர்ந்து அவர் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்திற்குட்பட்ட பகுதிகளில் நாளை முதல் (25 ம்தேதி) மதுகடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மது பானங்கள் மீது 25 சதவீதம் வரையில் வரிகள் உயர்த்தப்பட்டு உள்ளதால் அதன் விலை அதிகரித்துள்ளது. இந்த வரி உயர்வு அடுத்து வரும் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


கட்டுன மனைவியை பாம்பை விட்டு கொலை செய்த கொடூர கணவன்!




கேரள மாநிலத்தில் மாற்றுத்திறனாளி மனைவியை விஷ பாம்பை விட்டு கொலை செய்ததாக கணவனை போலீசார் 

கேரள மாநிலம்
கொல்லம் மாவட்டத்தில் உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்தவர் உத்ரா (25). பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணான இவருக்கும், தனியார் வங்கியில் வேலை பார்க்கும் சூரஜ் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் மகன் உள்ளார்.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தனது கணவருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்த உத்ரா, தனது காலில் ஏதோ கடித்ததாக சத்தம் போட்டு திடீரென அலறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அணலி வகை பாம்பு கடித்திருப்பதாக உறுதிபடுத்தினர். தொடர்ந்து, 16 நாட்கள் சிகிச்சை பின்னர் வீடு திரும்பிய உத்ராவை மீண்டும் பாம்பு கடித்ததால், உடல் முழுவதும் நீல நிறமாக மாறி வாயில் நுரை தள்ளிய படி கடந்த 7ஆம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார்.

ஒரே பெண்ணை இரண்டு முறை எப்படி விஷ பாம்பு கடிக்கும் என்பதால் உத்ரா மரணத்தில் மர்மம் நீடித்து வந்தது. இதுகுறித்து உத்ராவைன் உறவினர்கள் கூறுகையில், இரண்டாவது மாடியில் உள்ள ஏ.சி. ரூமில் உத்ரா படுத்திருந்ததாகவும், ஜன்னல்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும் போது எப்படி பாம்பு கடிக்கும் எனவும் கேள்வி எழுப்பினர். அத்துடன், சம்பவம் நடந்த தினத்தன்று, சூரஜ் மட்டும் அதிகாலை 5.30 மணிக்கே எழுந்து வெளியில் சென்றுவிட்டதாக தெரிவித்த அவர்கள், திருமணத்தின்போது 100 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் என வரதட்சனை கொடுக்கப்பட்ட போதும், கூடுதலாக வரதட்சனை கேட்டு உத்ராவை சூரஜ் கொடுமைப்படுத்தியதால் அவரே திட்டமிட்டு உத்ராவை கொலையை செய்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்திருந்தனர்.


அத்துடன், முதன்முறை பாம்பு கடிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே படுக்கை அறை அருகில் பாம்பு ஒன்றை பார்த்து உத்ரா அலறியதாகவும், அப்போது அங்கு வந்த சூரஜ் பாம்பை வெறும் கைகளால் பிடித்து சாக்குப் பையில் போட்டு எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிகிறது. எனவே, பாம்புகளை கையாளும் வித்தை சூரஜ்ஜிற்கு தெரிந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, உத்ராவின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சூரஜ் மற்றும் அவரது நண்பரும் பாம்பு பிடிப்பவருமான சுரேஷ் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தடுப்பு மருந்து தயார்: சோதனை வெற்றி - சீனா அறிவிப்பு!




கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் வெற்றியடைந்துள்ளதாக சீனா
சீனாவை மையமாக கொண்டு உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா கொள்ளை நோயால் சர்வதேச அளவில் 50 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. எனினும், இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லை.
வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, சீனா, அமெரிக்கா இடையே கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டறிவதில் சீனா ஈடுபட்டுள்ளது. அதற்கான தடுப்பூசியை சீனா கண்டுபிடித்ததும் அதை உலகின் பொது சொத்தாக்குவோம் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி முதல்கட்ட சோதனையில் வெற்றியடைந்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது. ஆன்லைன் மருத்துவ ஆய்விதழான ‘தி லான்செட்’ இதழில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 18-60 வயதிலான 108 தன்னார்வலர்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர்களை 3 குழுவாக பிரித்து, வெவ்வேறு அளவுகளில் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களில் டி-செல்கள் எனப்படும் சில நோயெதிர்ப்பு உயிரணுக்கள் உருவானதாகவும், நோய்த்தடுப்புக்கு தேவையான ஆன்டிபாடிகள் தடுப்பூசி போடப்பட்ட 28 நாட்களில் உயர்ந்ததாகவும் தெரிவித்துள்ள சீனா, இணையத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவுகளை யார் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்து போடப்பட்டவர்களின் உடலில் எந்தவித தீவிரமான மாற்றங்களும் கண்டறியப்படவில்லை என்பதால், இந்த தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக் கொண்டுள்ளதாக எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ள சீனா, Ad5-nCoV என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. முதல்கட்ட சோதனை மனிதர்களுக்கு வெற்றியடைந்ததால், அடுத்தக்கட்ட சோதனைக்கு அதிகளாவிலான தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்க சீனா முடிவுசெய்துள்ளதாகவும் தெரிகிறது.

முன்னதாக, அமெரிக்காவில் முதன்முறையாக மனிதர்கள் மீது சோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி சாதகமான முடிவை தந்துள்ளதாக அந்நாட்டின் பயோடெக் நிறுவனமான மாடர்னா இன்க் தெரிவித்துள்ள நிலையில், தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்துள்ளதாக சீனா அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், தரவுகளின்படி இந்த தடுப்பூசி எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்பது தெளிவாக தெரிவிக்கப்படவில்லை. மூன்று வெவ்வேறு வகையான அளவுகளில் கொடுக்கப்பட்ட மருந்தில் அதிகப்படியான (டோஸ்) அளவில் கொடுக்கப்பட்ட மருந்து நல்ல பலனை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், அதிகப்படியான அளவு கொண்ட மருந்தை கொடுத்தவர்களுக்கு ஊசி போடப்பட்ட இடத்தில் வலி, காய்ச்சல், தலைவலி, சதை வலி போன்றா பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் வீரர்களை குவித்தது சீனா




லடாக் :
 இந்தியாவின் லடாக் எல்லையில் சீனா தொடர்ந்து தனது வீரர்களை குவித்து வருவதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் போக்கு நீண்டு வருகிறது. நாட்டில் சிக்கிம் மற்றும் லடாக் போன்ற எல்லை பகுதிகளில் எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் நிலைகளில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. லடாக் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக அதிகப்படியான பாதிப்புகள் பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு சீன அரசின் அலட்சியமே காரணம் என பல தரப்புகளும் குற்றம் சாட்டி வருகிறது. இதை தொடர்ந்து, இந்திய எல்லை பகுதிகளில் அத்துமீறி தாக்குதல்களை நடத்துவது, எல்லை பகுதிக்குள் வீரர்கள் நுழைவது, ட்ரோன்கள் மூலம் நமது பகுதிகளை கண்காணிப்பது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் சீனா 100 க்கும் மேற்பட்ட அத்துமீறல்களை செய்துள்ளது.





படைகள் குவிப்பு

இந்நிலையில் லடாக் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட சீன வீரர்களை அந்நாட்டு அரசு குவித்து வருகிறது. சீனாவின் இந்த செயல்களால் அந்த பகுதி பரபரப்பாக உள்ளது. பாங்காங் டிசோ பகுதியில் தற்போது சீனா வீரர்கள் தங்கும் டெண்ட்களை அமைத்துள்ளது. 100 டென்ட் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஆயிரத்திற்கும் அதிகமாக வீரர்கள் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதி நவீன ஆயுதங்களை சீனா அங்கு குவித்து வைத்திருப்பது தெரிகிறது. சீனாவின் இந்த அதிரடி நடவடிக்கையால் அந்நாட்டு அரசு போரை தொடுக்க விரும்புவதாக தெரிகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி அந்த பகுதிகளில் பங்கர்கள் என்னும் பதுங்கு குழிகளையும் 100 க்கும் மேற்பட்ட அளவில் அமைத்து வருகிறது. இதற்கான பணிகள் கடந்த 2 வாரங்களாக தீவிரமாக நடந்து வருகிறது. இதுபோல் இந்தியா - சீன எல்லைகளில் குறிப்பாக 4 இடங்களை அந்நாட்டு அரசு குறி வைக்கிறது. இதற்கு முன்பு அந்த பகுதிகளில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது. அதிகமாக பாங்கொங் திசோ, டிரிக் ஹைட்ஸ், புர்ட்ஸ் மற்றும் டிச்சு ஆகிய நான்கு இடங்களில்தான் அதிகமாக சீனா அத்து மீறி உள்ளது. லடாக் எல்லையில் சீனா குறி வைத்துள்ளதால் அந்த பகுதியில் ராணுவ தளபதி நரவானே அங்கு சோதனை நடத்தினார். லடாக்கின் லே எல்லையில் சோதனை நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது. லடாக் பகுதியில்இந்தியாவும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. இதனால் எப்போது வேண்டுமாலும் பிரச்சனை வெடிக்கலாம் எனதெரிகிறது.

ஏற்கனவே சிக்கிம் எல்லையில் இரு நாடுகளுக்குமிடையே கடந்த வாரம் பிரச்னையால் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. சிக்கிம் மாநிலத்தின் நகு லா பகுதியில் சண்டை வந்தது. கடந்த வாரம் இந்திய எல்லைக்குள் சீன அரசு போர் விமானங்களை அனுப்பியதும் அத்துமீறியதும் குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிவேக இணைய சேவையை பதிவு செய்த ஆஸ்திரேலியா





ஆஸ்திரேலியாவில் அதிவேக இணைய சேவை பதிவுசெய்யப்பட்டதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மோனஷ் பல்கலைக்கழகம், ஸ்வின்பர்ன் பல்கலைக்கழகம், மற்றும் ஆர்எம்ஐடி பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களின் தரவுகள் இணைய வேகத்தை விநாடிக்கு 44.2 டெராபைட்ஸ் என பதிவு செய்தன.

இந்த வேகத்தில், பயனாளர்கள் 1,000 ஹை டெஃபினிஷன் படத்தை ஒரு விநாடிக்குள் பதிவிறக்கம் செய்ய முடியும்.

பிரிட்டனின் தகவல் பரிமாற்றம் ஒழுங்குமுறை அமைப்பான ஆஃப்காமின் சமீபத்தில் செய்த ஆய்வின் தரவுகள் படி பிரிட்டனில் பிராட்பேண்ட் வேகத்தின் தற்போதைய வேகம் விநாடிக்கு 64 மெகாபைட்கள் ஆகும்.

ஆஸ்திரேலியா, இணைய சேவை வேகத்தின் அடிப்படையில் பட்டியலிடப்படும் நாடுகளில், எப்போதும், ஓரளவு இணைய வேகம் கொண்ட நாடாகத்தான் இருக்கும். மேலும் அங்கே இணைய சேவை மெதுவாக உள்ளது என்ற புகாரே பயனாளர்களிடமிருந்து அடிக்கடி வரும்.

இந்த புதிய அதிவேக இணைய சேவை ஏற்கனவே இருந்த தகவல் பரிமாற்ற சாதனங்களில் உள்ள 80 லேசர்களுக்கு பதில், மைக்ரோ-கோம்ப் எனப்படும் சின்ன பொருளை மாற்றியதன் மூலம் பெற முடிந்தது.

இந்த மைக்ரோ-கோம்ப் எனப்படும் சின்ன சாதனம் ஆய்வகத்திற்கு வெளியே ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த தகவல் பரிமாற்ற கட்டமைப்பில் பொருத்தப்பட்டது.

உலகில் ஆப்டிகல் ஃபைபர் பிராட்பேண்ட்களில் உள்ள ஆப்டிகல் சிப் மூலமாக உருவாக்கப்படும் அதிவேக இணைய சேவை இதுவே ஆகும்.

வரும்காலத்தில் இணைய சேவை எப்படி இருக்கும் என்பதற்கான கற்பனையை இந்த கண்டுபிடிப்பு கொடுத்துள்ளதாக ஆஸ்திரேலிய குழு கூறுகிறது.

ஆரல்வாய்மொழி அருகேவனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைதுசெல்போனில் இருந்த புகைப்படங்களால் பரபரப்புஆரல்வாய்மொழி,





ஆரல்வாய்மொழி அருகே வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது செல்போனில் இருந்த புகைப்படங்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2 பேர் சிக்கினர்

குமரி மாவட்டம் பூதப்பாண்டி, சுசீந்திரம், தேரூர், மணக்குடி உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் சிலர் பறவைகளை வேட்டையாடுவதாகவும், அச்சங்குளத்தில் சிலர் வலைவிரித்து மீன்பிடிப்பதாகவும் வனத்துறைக்கு புகார்கள் வந்தன. பூதப்பாண்டி வனச்சரகர் திலீபன் உத்தரவின் பேரில் வனவர் பிரசன்னா தலைமையில் வனக்காப்பாளர்கள் பிரபாகர், கிருஷ்ணமூர்த்தி, வேட்டை தடுப்பு காவலர்கள் ஜெகன், பிரவீன், ராஜன், இந்திரன் ஆகியோர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர்.

அங்கு அச்சங்குளத்தில் வலைவிரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்த அச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (வயது 26), மாணிக்கராஜ் (38) ஆகிய இருவரையும் பிடித்து ஆரல்வாய்மொழியில் உள்ள பூதப்பாண்டி வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு இருவரிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது.

அதிர்ச்சி தகவல்கள்

அப்போது சிவகுமாரின் செல்போனை வாங்கி வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, ஆமை, மலைபாம்பு, உடும்பு உள்ளிட்டவற்றை சமைத்து சாப்பிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்று இருந்தன. இதனால் வனத்துறையினர் இடையே பரபரப்பு ஏற்பட்டது.

இதைக்கண்டு அதிர்ந்த வனத்துறையினர், சிவகுமாரிடம் துருவி துருவி விசாரித்தனர். முதலில் மழுப்பலாக பதில் அளித்த சிவகுமார், வனத்துறையினரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார்.

2 பேர் கைது

அதாவது, பொற்றையடி மருந்துவாழ்மலையில் தன்னுடைய நண்பர் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதுடன், அதனை செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படமாக எடுத்து வைத்துக் கொண்டோம் என்று கூறினார். இதையடுத்து போலீசார் தினேசையும் பிடித்தனர்.

வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து சாப்பிட்டதாக சிவகுமார், தினேஷ் ஆகிய இருவரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பாதுகாக்கப்பட்ட பகுதியில் வலைவிரித்து மீன்பிடித்த மாணிக்கராஜூக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

சாமிதோப்பில் வைகாசி திருவிழா தொடங்கியதுகொடியேற்ற நிகழ்ச்சி எளிமையாக நடந்ததுதென்தாமரைகுளம்,




சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கொடியேற்றம் எளிமையாக நேற்று காலை நடந்தது.

திருவிழா கொடியேற்றம்

குமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை, ஆவணி, வைகாசி மாதங்களில் 11 நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம். இந்த வருடம் வைகாசி திருவிழா, கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் அமலில் உள்ள நிலையில் நேற்று தொடங்கியது. அதாவது அரசு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி எளிமையான முறையில் காலையில் கொடியேற்றப்பட்டது. கொடியேற்றுவதற்காக 5 பேர் மட்டும் தலைமைப்பதிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பும், அய்யாவுக்கு பணிவிடையும், 5 மணிக்கு கொடிப்பட்டம் தயாரிக்கும் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. கொடியை பால ஜனாதிபதி ஏற்றி வைத்தார். தலைமை பதியின் வெளிப்பகுதியில் குறைந்த அளவிலான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று கொடியேற்ற நிகழ்ச்சியை கண்டுகளித்து தரிசனம் செய்தனர்.

11 நாட்கள்

தொடர்ந்து பக்தர்களுக்கு இனிமம் வழங்கப்பட்டது. தலைமை பதியின் முன்பகுதியில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு காலை, மதியம் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் உச்சிப்படிப்பும், இரவு யுகப்படிப்பும் நடந்தது. விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின்பேரில் தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், ஜாண்கென்னடி ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழா நாட்களில் தினமும் காலை, மதியம், இரவு பணிவிடையும், நண்பகல் உச்சி படிப்பும், இரவு யுகப்படிப்பும் நடக்கிறது.

No comments

Thanks