Advertisement

Breaking News

Breaking News - ஒரே நாளில் இந்தியாவில் 7,466 பேருக்கு தொற்று: பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது


ஒரே நாளில் இந்தியாவில் 7,466 பேருக்கு தொற்று: பாதிப்பு 1.65 லட்சத்தை தாண்டியது





புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.65 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 7,466 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 175 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில், ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கை, முதல்முறையாக 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (மே 29) காலை 9:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,58,333 ல் இருந்து 1,65,799 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,531 ல் இருந்து 4,706 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 67,692 ல் இருந்து 71,106 ஆக அதிகரித்துள்ளது.





கொரோனா பாதிப்புடன் தற்போது 89,987 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 7,466 பேருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டு உள்ளது. 175 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக ஒரே நாளில் தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,65,799 ஐ எட்டியதை தொடர்ந்து, இதன் மூலம், கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும் பலி எண்ணிக்கை 4706 ஆக அதிகரித்ததன் காரணமாக, பலியில் கொரோனா உருவான சீனாவையும் முந்தியது.



கொரோனா உயிரிழப்பிலும் சீனாவை முந்திய இந்தியா



புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கையில் சீனாவை முந்தி இந்தியா 13வது இடத்தை பிடித்துள்ளது.
2019ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் தவித்து வருகின்றன. அமெரிக்காவில் இதுவரை 17.68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1.03 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளில் அமெரிக்காவே முன்னிலையில் உள்ளது. முதன்முதலில் பரவிய சீனாவில் நோயின் வீரியம் படிபடியாக குறைந்து வந்தாலும், மற்ற நாடுகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.




இந்தியாவிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் இதுவரை 1.65 லட்சம் பாதிப்புகளுடன் 9வது இடத்திற்கு முன்னேறியது. முதலில் பரவிய சீனா தற்போது 15வது இடத்தில் உள்ளது. உயிரிழப்புகளை பொறுத்தவரையில், அதிலும் சீனாவை முந்தி இந்தியா 13வது இடத்தை பிடித்துள்ளது. சீனாவில் இதுவரை 4,634 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவில் பலி எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் 1.03 லட்சம் உயிரிழப்புகளுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.


அனைத்து மாநில மொழிகளிலும் நாட்டு மக்களுக்கு மோடி கடிதம்




புதுடில்லி: இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கு காலம் வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.இந்த சூழ்நிலையில் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு கடிதம் எழுத உள்ளார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த கடிதம் வெளியாகும் எனவும், இந்த கடிதம் நாளை காலை அனைத்து செய்தி தாள்களிலும் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.








15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ரெனால்ட் நிறுவனம் முடிவு

பாரிஸ்: கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் பிரபல வாகன தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தனது 15,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.




அந்நிறுவனத்தின் வாகன உற்பத்தி, மற்றும் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் செலவினங்களை கட்டுப்படுத்த உற்பத்தியை 20 சதவீதம் குறைத்து கொள்ள திட்டமிட்டுள்ளது. மேலும் சக கார் தயாரிப்பு நிறுவனங்களான நிஸான் மற்றும் மிட்சுபிஸியுடன் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு அடிப்படையில் உலக சந்தையில் விற்பனையை பிரித்து கொள்ள முடிவு செய்துள்ளது.




அதன் அடிப்படையில் வட அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானில் நிஸான் நிறுவனமும், ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ரெனால்ட் நிறுவனமும், தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவில் மிட்சுபிஸி நிறுவனமும் தங்களது சந்தையை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளன.


அரியானா,டில்லியில் லேசான நில அதிர்வு

டில்லி: டில்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.





இதேபோல் அரியானா மாநிலம் ரோஹ்தக் பகுதியிலிலும் நிலஅதிர்வு உணரப்பட்டது. அது ரிக்டரில் 4.6 ஆக பதிவானது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள மக்கள் பீதியடைந்தனர்.





மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்; மம்தா


கோல்கட்டா: மேற்கு வங்கத்தில் ஜூன் 1 முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.





கொரோனா பரவலால் நாடு முழுவதும் நான்கு கட்டங்களாக ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5வது கட்டமாக ஜூன் 1 தேதி முதல் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவது குறித்து பல்வேறு மாநில முதல்வர்கள் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஜூன் 1ம் தேதி முதல் வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படும் என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொளியில் உரையாடிய அவர் கோவில், மசூதி, குருத்துவாரா, தேவாலயம் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஜூன் 1 முதல் திறக்கப்படும் என தெரிவித்தார்.




இது குறித்து உரையாடிய மம்தா, 'ஒரு நேரத்தில் 10 பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவர் என்றும் விழாக்களுக்கும் பொதுநிகழ்ச்சிகளுக்கும் வழிபாட்டுத்தலங்களில் அனுமதி இல்லை ஜூன் 1 முதல் தேயிலை தொழிற்சாலைகள், சணல் தொழிற்சாலைகள், 100 சதவீத தொழிலாளர்களை கொண்டு இயங்கும், அனைத்து அலுவலகங்களும் 100 சதவீத பணியாளர்களை கொண்டு செயல்படும்' இவ்வாறு அவர் மேலும் தெரிவித்தார்.


சென்னையில் கொரோனா வார்டாக மாறிய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

சென்னை: சென்னையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளது





சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே எதிர்காலத் தேவையை கருத்தில் கொண்டு சென்னை பேசின்பிரிட்ஜ் அருகே கே.பி.பார்க் குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் இருந்த அடுக்குமாடி குடியிருப்பு கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக இக்குடியிருப்பு பகுதியில் உள்ள 824 வீடுகளில் 1,728 படுக்கைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன. தனித்தனி கழிவறை, மின்விசிறி, ஒலிபெருக்கி, மற்றும் தொலைபேசி வசதிகளோடு நோயாளிகளை கண்காணிக்க சி.சி.டி.வி., கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.





கடந்த 20 நாட்களுக்கும் மேலாக நடந்து வந்த பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி அதிகாரிகள், குறைவான அறிகுறிகளுடன் இருப்பவர்கள் இங்கு தங்கவைக்கப்பட உள்ளதாக தெரிவித்தனர்.


அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 15 முதல் 'நீட்' பயிற்சி




சென்னை : 'அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி ஜூன் 15-ல் துவக்கப்படும்' என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.மருத்துவ படிப்பிற்கு சேர 'நீட்' என்ற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதி இருக்கும் மாணவர்களுக்கு தனியார் நிறுவனம் வழியாக ஆன்லைனில் இலவச பயிற்சி வழங்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது




.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அரசின் இலவச ஆன்லைன் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தனியார் நிறுவன இணையதளத்தில் தங்கள்விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். ஜூன் 15ல் துவங்க உள்ள நீட் பயிற்சியில் அவர்கள் பங்கேற்கலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



கத்தாரில் ஒரே நாளில் புதிதாக 1,993 பேருக்கு கொரோனா

தோஹா : கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து கத்தாரில் மேலும் 1,993 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் பலியாகினர். இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.




கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கத்தாரிலும் நோய் தொற்றின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் ( ஒரே நாளில் ) புதிதாக 1,993 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 52,907 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 3 பேர் பலியானதை தொடர்ந்து, நாட்டில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.கொரோனா பாதிப்புக்கு 32,267 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 5,205 பேர் முழுமையாக குணமடைந்தனர். இதனால் நாட்டில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 20,000 ஆக உள்ளது.




புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். கொரோனா தொற்றால் தீவிர சிகிச்சையில் 216 பேர் உள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் கத்தாரில் 5,864 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. நாட்டில் இதுவரை பரிசோதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 212,897 ஆக உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


கொரோனா சோதனை மாதிரிகளை பறித்து சென்ற குரங்குகள்





மீரட்: ரஜினியின் அருணாச்சலம் படத்தில் குரங்கு ஒன்று ருத்ராட்சத்தை பறித்து செல்வது போன்று, உ.பி.,யில் கொரோனா பரிசோதனை மாதிரிகளை குரங்குகள் திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி.,மாநிலம் மீரட் மருத்துவ கல்லூரி வளாகத்தில், ஆய்வக பணியாளர் ஒருவர், நோயாளிகள் 3 பேரின் கொரோனா பரிசோதனை மாதிரிகளை எடுத்து சென்றுள்ளார். அப்போது அவரை தாக்கிய குரங்குகள் கூட்டம், கையில் இருந்த சோதனை மாதிரியை பறித்து சென்றுள்ளது. மரத்தில் சென்று உட்கார்ந்து கொண்ட குரங்குகளில் ஒன்று, சோதனை மாதிரியை கடித்து மென்றுள்ளது.




மேலும் கொரோனா மாதிரிகளை குரங்குகள் அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளதால், கொரோனா தொற்று மேலும் பரவக்கூடுமென உள்ளூர் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.




சாத்பூரா மலையை வெட்டுக்கிளிகள் தாண்டாது: மத்திய வேளாண் அதிகாரிகள் உறுதி




சென்னை : 'வட மாநிலங்களில் முகாமிட்டுள்ள வெட்டுக்கிளி படைகள் சாத்பூரா மலையை தாண்டாது' என தமிழக வேளாண் துறை அதிகாரிகளிடம் உறுதி அளிக்கப்பட்டு உள்ளது.

நம் நாட்டிற்குள் நுழைந்துள்ள வெட்டுக்கிளி படைகள் குஜராத் ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்களை பதம் பார்க்க துவங்கியுள்ளன.ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 1000 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளில் கிடைத்த தளர்வை பயன்படுத்தி தமிழக விவசாயிகள் நெல் உள்ளிட்ட உணவு தானியங்கள் பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்கள் சிறு தானியங்களை அதிகளவில் சாகுபடி செய்துள்ளனர். தமிழகத்திற்கும் வெட்டுக்கிளிகள் படை வரும் என சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் விவசாயிகளை பீதி அடைய செய்துள்ளது.






இதுகுறித்து தமிழக வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, வேளாண் துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ஆகியோர் வேளாண் பல்கலை கழகத்தின் பூச்சிகள் ஆராய்ச்சி மைய பேராசிரியர்களிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர்கள் 'தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் அரணாக உள்ளதால் அதை கடந்து தமிழகத்திற்குள் வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை' என்றனர்.
இதைதொடர்ந்து மத்தியவேளாண் துறை உயர் அதிகாரிகள் மற்றும் ராஜஸ்தானில் உள்ள வெட்டுக்கிளி முன்னெச்சரிக்கை மைய வல்லுனர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.'சாத்பூரா மலையை தாண்டி வெட்டுக்கிளிகள் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்வதற்கு வாய்ப்பில்லை' என அவர்களும் தெரிவித்து உள்ளனர். இந்த சாத்பூரா மலைத்தொடர் குஜராத் மாநிலத்தில் துவங்கி மஹாராஷ்டிரா மத்திய பிரதேசம் வழியாக சென்று சத்தீஸ்கர் மாநிலத்தில் முடிகிறது.

தற்போது இந்த மாநிலங்களில் வெட்டுக்கிளி பாதிப்பை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழக வேளாண் துறை அதிகாரிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.



விரைவில் மால்கள் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பியூஷ் கோயல்




புதுடில்லி: சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களை பெற்று விரைவில் மால்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் காணொளிக் காட்சி மூலம் பங்கேற்றார். அதில் அவர் பேசியதாவது: நாடு முழுவதும் ஊரடங்கு தளர்த்தபட்ட போதிலும், சில்லறை வணிகர்கள் கஷ்டங்களை எதிர்கொள்வதால், அத்தியாவசியம், அத்தியாவசியமற்ற என்ற பாகுபாடு இன்றி பெரும்பாலான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தன்னிறைவு இந்தியா திட்டத்தின் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் உத்தரவாதம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில் வர்தகர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.





பொருளாதாரம் மீண்டு வருவதை, பல அளவீடுகள் காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தில் ஏறக்குறைய 60% குறைந்த ஏற்றுமதிகள், தற்போது உயரத் தொடங்கியுள்ளன, மேலும் ஆரம்ப புள்ளிவிவரங்கள் மே மாதத்தில் சரிவு குறைவாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றன. மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு மால்களை திறக்க விரைவில் முடிவு எடுக்கப்படும். இ-காமர்ஸ் நிறுவனத்தின் சக்தியை நினைத்து வணிகர்கள் கலக்கம் அடைய தேவையில்லை. இந்த நெருக்கடியான காலத்தில் அருகில் இருக்கும் சிறு கடைகளின் முக்கியத்துவத்தை பொது மக்கள் உணர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள



                https://nmsfriendsassociation.blogspot.com


No comments

Thanks