வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 01 - Kamarajar- Part 01
விருதுபட்டியில் பிறந்த விசித்திர மனிதர்
ஜூலை 15 காமராஜரின் பிறந்த நாள்.
இருண்டு கிடந்த இந்திய தேசத்தில் கருப்பு காந்தியாக வந்து பிறந்தவர் காமராஜர். அவரது நிறம் தான் கருமை. உள்ளமெல்லாம் களங்கமில்லா வெள்ளை மலர்த்தோட்டம். அந்த வெள்ளை மலர்த்தோட்டம் தான் சிவப்பு ரோஜாவை சூடியிருந்த நேரு பெருமகனாரை சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்த்தது. ஏழைகளை நேசித்த ஏழைப்பங்காளன் அவர்.
விருதுநகர் என்று இன்று அழைக்கப்படுகிற அன்றைய விருதுபட்டியில் 1903-ம் ஆண்டு ஜூலை 15-ல் பிறந்தார். காமாட்சி என்பது அவரது பெற்றோர்கள் வைத்த பெயர்.
வாழ்க்கையில் சிலபேர் போராடுவார்கள் சில நேரங்களில் போராடுவார்கள். ஆனால் காமராஜரோ போராட்டமே வாழ்க்கையாக வைத்து கொண்டவர். அந்த போராட்டம் கூட தனக்காக அல்ல, தேசத்தின் மக்களின் நலனுக்காகவே.
அவரது நாற்பது ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் மூவாயிரம் நாட்கள் ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் இரும்பு கம்பிக்குள் சிறைவாசம் இருந்தவர்.
1964 மே 27-ல் ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு தேசம் திகைத்து நின்றது. அப்போது காமராஜரின் சாதுர்யத்தால், ராஜதந்திரத்தால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆக்கப்பட்டார்.
அப்போது ஓர் அமெரிக்க பத்திரிகை ‘‘நேருவுக்கு பிறகு இந்தியா துண்டு துண்டாகிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் திரைக்கு பின்னால் இருந்து ஒரு விசித்திர மனிதர் இந்தியாவை காப்பாற்றி விட்டார்’’ என எழுதியது.
அந்த விசித்திர மனிதர் காமராஜர். இந்தியா மட்டுமல்ல உலகமே அப்போது அவரை விசித்திரமாகப் பார்த்தது.
முதல் அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார் காமராஜர். பொறுப்பேற்ற முதல் நாளிலேயே கோப்புகளை பார்க்க அமர்கிறார். அவருக்கு முன்னால் கோப்புகள் இரண்டு வரிசைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இது என்ன இரண்டு வரிசை? என அவர் கேட்க ‘‘முதல் வரிசையிலே உள்ளவை முக்கியமானவை. அடுத்து உள்ளவை முக்கியமில்லாதவை’’ என்று அவரது உதவியாளர் சொல்கிறார். ‘‘முதல்வருக்கு வரும் கோப்புகளில் முக்கியம் இல்லாதவையும் உண்டா? எனக்கு வரும் ஒவ்வொரு கோப்பும் முக்கியமானவைதான். நான் உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும். இது தான் முக்கியம்’’ என்றார்.
படிக்காத மேதை என்ற அந்த வார்த்தைக்கு சரியான இலக்கணமாக திகழ்ந்தவர் காமராஜர்.
குஜராத் மாநிலத்தில் ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தது. நேருவும் காமராஜரும் கலந்து கொண்டார்கள். அதில் காமராஜர் பேச வேண்டும் என்பது நேருவின் விருப்பம்.
செயல்வீரரான காமராஜர் பேசுவதை அதிகம் விரும்பாதவர். அந்த நேரத்திலும் மறுத்து விட்டார். அதற்கான காரணத்தையும் சொன்னார். இங்கு இந்தி பேசுபவர்கள் கூடியிருக்கின்றார்கள். நான் தமிழில் பேசி அவர்களுக்கு புரியப்போவதில்லை என்றார்.
ஆனாலும் நேரு தொடர்ந்து வற்புறுத்தினார். இறுதியில் பேச வேண்டிய கட்டாயம்.
பெருந்திரளான கூட்டத்தை பார்க்கிறார் பெருந்தலைவர் காமராஜர். சிறிது நேரம் பேசி விட்டு அமர்கிறார். அப்போது அங்கிருந்த தமிழ்நாட்டு பத்திரிகையாளர் ஒருவர் இந்திக்காரரிடம் காமராஜர் பேசியபோது கை தட்டினீர்கள், அவரின் தமிழ்ப்பேச்சு உங்களுக்கு பிடித்திருந்ததா? என்று கேட்கிறார்.
அப்போது அவர் சொன்ன பதில் அவரது விழிகளை வியக்க வைத்தன. ‘‘ஒரு நல்ல மனிதர் பேசுகிறார் என்றால் நல்லதைத்தானே பேசுவார். அதற்கு என்ன மொழி தெரிந்திருக்க வேண்டும். அந்த உத்தமர் பேசிய மொழி புரியாவிட்டால் என்ன. அவரின் நல்ல எண்ணம் எங்களுக்கு தெரியுமே’’ என்றார். பத்திரிகையாளரின் விழிகள் வியப்பால் விரிந்தன.
இப்படி இனமொழி எல்லைகளை கடந்து அனைவரின் இதயங்களிலும் இடம் பிடித்த விசித்திரங்களின் விசித்திரம் அவர். தூய்மை, வாய்மை, நேர்மை இந்த மூன்று சொற்கள் இருக்கும் வரைக்கும் காமராஜர் பெயர் நிலைத்திருக்கும்.
தேசம் கண்ட அற்புதமான ஒரு தலைவர்.
ReplyDeleteThe Real King Maker...