Advertisement

Breaking News

வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 05- Kamarajar- Part 05


பந்தா எதற்கு?காமராஜர்


 திருமணம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக காமராஜர் வெளியூர் சென்றிருந்தார். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை அழைத்துச் செல்ல திருமண வீட்டைச் சேர்ந்த ஒருவர் காத்திருந்தார்.
அவரிடம் காமராஜரின் கார் டிரைவர் ``திருமணம் நடக்கும் இடத்திற்கு எப்படி போக வேண்டும்'' என்று கேட்டார்.
உடனே அவர், ``நான் உங்கள் கார் முன்னாடி மோட்டார் சைக்கிளில் செல்கிறேன்.
என்று பின்னாடியே வாருங்கள்!'' என்று கூற
டிரைவரும் ஒத்துக் கொண்டார். கார் புறப்பட்டது.
சிறிது நேரத்தில் காமராஜர் தன் டிரைவரைப் பார்த்து ``அது யார் நம்ம காருக்கு முன்னால் நமக்கு வழிவிடாத போறது?'' என்று கேட்டார்.
அதற்கு டிரைவர், ``திருமண வீட்டுக்குக்கு வழிகாட்ட நான்தான் அந்த நபரை காருக்கு முன்னாடி போகச் சொன்னேன்'' என்றார். உடனே காமரார் வண்டியை நிறுத்தச் சொன்னார். கார் நின்றதும் அந்த மோட்டார் சைக்கிள் நபர் திரும்பி வந்தார்.
அவரிடம் காமராஜர், ``நீங்க கல்யாண வீட்டுக்கு சீக்கிரம் போங்க, எனக்கு அந்த வீட்டுக்கு வர்ற வழி தெரியும். என் கார் முன்னால் போக வேண்டாம்'' என்று கடுமையாக கூறிவிட்டார்.
அவர் போய் மறைந்ததும் டிரைவர் பக்கம் திரும்பிய காமராஜர் ``திருமண வீட்டுக்கு வழி தெரியலைன்னா என்னைக் கேட்டால் சொல்கிறேன். இல்ல.. உள்ளூர்ல தெரிஞ்ச ஆள் இருக்காங்க!
அதை விட்டுட்டு அந்த ஆளை கார் முன்னாடி போகச் சொன்னால் நாம பந்தாவா போறோம்னு மக்கள் நம்மைப் பத்தி நினைப்பார்களே!'' என்று கூறினாராம் அந்த மக்கள் தலைவர்.
தன் கார் முன்னாடி ஒரு மோட்டார் சைக்கிள், வழிகாட்ட சென்றது கூட காமராஜர் விரும்பவில்லை.

'பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!'


  கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.
அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.
"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.
"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."
"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.

தாழ்த்தப்பட்ட ஜாதியை சேர்ந்த டாக்டர் ஊசி போட்டு எந்த நோயாளியாவது செத்துருக்கானா? - பெருந்தலைவர் காமராஜர்.
ஜாதி ஏற்றத்தாழ்வுக்கு எதிராக சாட்டையை சுழற்றி அனைத்து ஜாதியினருக்கும் கல்வி கிடைக்கச் செய்த பெருந்தலைவர்

ஏழைப் பங்காளர்:



காமராஜர் பெரும் பதவிகளை விகத்த போதிலும் ஏழைகளைக் கண்டு அவர்களது குறைகளைக் கேட்டு அவற்றிற்கு தீர்வு காண்பதில் பெரு மகிழ்ச்சியடைந்தார். ஒருமுறை அவர் பேசிய பொதுக் கூட்டத்திற்காக எழுப்பப்பட்ட மேடையில் விளக்கு அலங்காரம் மிகுதியாக இருந்தது.
இதைக் கண்ட காமராஜர் "மக்கள் மேடையிலே என்னைப் பார்த்துப் பயனில்லை. நான் தான் அவர்களைப் பார்க்க வேண்டும். அவர்கள் பகுதியில் விளக்கில்லாமல் நான் அவர்களைப் எப்படி பார்க்க முடியும்.
அவர்களை வெளிச்சத்தில் பார்த்தால் தான் அவர்களுடைய எண்ணத்தின் பிரதிபலிப்பை அவர்களது முகத்தில் நான் பார்க்க முடியும். அவர்களது குறைகளை நான் தீர்க்க முடியும்'' என்று கூறி அலங்கார மேடை அமைத்தவர்களைக் கடிந்துரைத்தார்.
ஏழைச் சிறுவர்கள் உள்ள கஷ்ட நஷ்டங்களை உணர்ந்தவர் காமராஜர். அதனால் ஏழைச் சிறுவர்களின் படிப்பில் முக்கிய கவனம் செலுத்தினார்.
தொடக்கப் பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் திட்டம் தீட்டப்பட்டது. பொது மக்களின் நன்கொடைகளைக் கொண்டு ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டன.
ஏழை, பணக்காரன், உயர்சாதி, கீழ்சாதி என்ற ஏற்றத் தாழ்வு உணர்வு இல்லாமல் "நாம் எல்லோரும் சமம்'' என்ற எண்ணத்தை கள்ளங்க கபடமற்ற பிஞ்சு நெஞ்சங்களில் வளர்க்க காமராஜரின் இத்திட்டங்கள் உதவின.
ஏழை மக்களின் துயரைத் துடைக்கத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட காமராஜர் ஓர் ஏழைப் பங்காளர்.

படிக்காத மேதை :



காமராஜர் படிக்காத மேதை. ஆனால் படித்தவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கினார். காமராஜர் பள்ளியில் கல்வி பயிலவில்லை. அனுபவத்தால் அறிவு பெற்றவர்.
அவர் சட்டம் பயிலவில்லை. ஆனால் மக்கள் நல்வாழ்விற்கு வழிவகுக்க பல நல்ல சட்டங்களைத் தீட்டினார். காமராஜருக்கு தமிழ் தவிர ஆங்கிலமும், இந்தியும் தெரியும். மூன்று மொழிகளிலும் அவர் பேசுவார்.
பள்ளியில் முறையாக கற்று தேர்ச்சி பெற்ற அறிஞர்களிடம் இல்லாத அரிய நூல்கள் காமராஜரின் நூலகத்தில் இருந்தன. அவர் படித்த ஆங்கில நூல்கள் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தும்.
ஒருமுறை அவர் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளித்த போது அவரது ஆங்கில மொழியறிவு வெளிப்பட்டது.
இரண்டாக உடைந்த காங்கிரஸ் கட்சி மீண்டும் இணைந்தது பற்றி "மெர்ஜர்'' என்ற ஆங்கிலச் சொல்லை ஒரு நிருபர் பயன்படுத்த அச்சொல் தவறு என்றும் "ரியனியன்'' என்ற சொல்தான் பொருத்தமானது என்றும் அவருக்குச் சுட்டிக்காட்டினார். இங்கு அவரது ஆங்கில அறிவு நமக்கு புலப்படுகின்றது.

No comments

Thanks