வரலாறு - பெருந்தலைவர்-காவியத் தலைவர் காமராஜர் பகுதி 12 - Kamarajar- Part 12
பெரியாருக்கு அர்ப்பணித்த பெருந்தன்மை
``நாட்டுப்புற ஜனங்களுக்கு மேல்படிப்பு ரொம்ப சுலபமா கிடைக்கணும். அதுதான் முக்கியம். நகரத்திலே இருக்கிறவன் எவ்வளவு தொகை கொடுத்தும் படிப்பான். கிராமவாசி எங்க போவான்? அவனால் மெட்ராஸ்லேயெல்லாம் வந்து தங்கி படிக்கிறது கட்டுப்படியாகாது.
சாதாரண பள்ளிக்கூட படிப்புக்கே அவன் ஆடு, மாடு, கோழியெல்லாம் விக்க வேண்டியிருக்கு...! மேல்மட்ட படிப்பையெல்லாம் கிராமப்புற காலேஜ்களுக்கும் பரவலாக்குங்க...! ஏழை வீட்டுப் பிள்ளைங்க அந்தந்த ஊர்லயே பெரியபடிப்பு படிக்கட்டும்...'' என்றார் காமராஜர்.
உடனே அதிகாரி சுந்தரவடிவேலு, இப்போது, கல்லூரிகளில் சேர்ந்து படிப்பவர்களில் நூற்றுக்கு அறுபது பேர், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்கள்'' என்றார்.
``அதைத்தானே நாம விரும்பினோம். அதுக்குத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டோம். ஒரு தலைமுறை படிச்சி மேல வந்துட்டான்னா அப்புறம் அவன் மூலம் அந்த கிராமமே மேல வந்திடுமில்லையா...? என்றார் காமராஜர்.
அதற்கு சுந்தரவடிவேலு பதில் அளிக்கையில்,நான் பெரியார் ஐயாகிட்டே இந்த விவரத்தைச் சொன்னேன்.
அவரு மிகுந்த மகிழ்ச்சியோடு இவ்வளவுக்கும் காரணம் காமராசர் தான்... அவருக்குத்தான் தமிழன் கடன்பட்டிருக்கிறான்...! அவர் மட்டும் இல்லேன்னா 1952-ல் இலேயே நம்ம தலைமுறையையே ஆச்சாரியார் குழிதோண்டிப் புதைத்திருப்பார்'' என்று பெரியார் ஐயா சொன்னார் என்றார்.
உடனே காமராஜா, ``அது எப்படின்னேன்? எல்லாம் பெரியார் ஐயாவாலே தானே நடக்குது.... அவர் சொல்றார் நாம செய்யிறோம்! காரணகர்த்தா அவருதானே...? இது... 1952இல் ஆரம்பிச்ச பிரச்சனையா என்ன? ஐயாயிரம் வருஷமா இருக்கற தாச்சே.
தெய்வத்தின் பேராலேயும் மதத்தின் பேராலேயும் நம்மள ஒடுக்கி வச்சிட்டானே... இப்படி இருக்கிறது என் தலையெழுத்துன்னு சொல்லிட்டானே! இதப்பத்தி யார் கவலைப்பட்டார்?''
``பெரியார் ஒருத்தர்தானே எல்லாத்தையும் தலையில் எடுத்துப் போட்டுகிட்டு பண்ணி கிட்டிருக்கார். அவரு மட்டும் இல்லேன்னா நம்ம புள்ளைங்க கதி என்னவாகியிருக்கும்...? அத்தனைப்பேரும் கோவணத்தோட வயல்லே ஏரோட்டிக் கிட்டிருப்பான்...!
இன்னிக்கு டெபிடி கலெக்டராகவும், ஜாயிண்ட் செகரட்டரியாவும்ல ஒக்காந்திருக்கான்...! நம்மகிட்ட அதிகாரம் இருக்கிறதாலே பெரியார் நெனச்ச காரியத்த ஏதோ கொஞ்சம் பண்ணிக் கொடுக்கிறோம்.
அவரு, எந்த அதிகாரத்தையும் கையில வச்சிக்காம ஊர், ஊரா திரிஞ்சி சத்தம் போட்டுக்கிட்டு வராரு...! அவராலேதான் நமக்கெல்லாம் பெருமை...!'' என்று உணர்ச்சி பொங்கக் காமராசர் கூறினார்.
``எவ்வளவு பெருந்தன்மை இவருக்கு! தான் செய்கிற எல்லா நலத்திட்டங்களையும் தந்தை பெரியாருக்கே காணிக்கை யாக்குகிற இவரது மேன்மைதான் என்னே?'' என்று எண்ணி அதிகாரி சுந்தரவடிவேலு பூரித்துப்போனார்.
No comments
Thanks