Breaking News - வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறி! - மத்திய அரசு...
வாசனை, சுவை தெரியவில்லை எனில் அது கொரோனா அறிகுறி! -மத்திய அரசு...
24.06.2020
கொரோனா பாதிப்பு குறித்து மத்திய அரசு புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கொரோனா பாதித்தவர்களுக்கு வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும் என மத்திய அரசு கூறியுள்ளது. காய்ச்சல், இருமல், மூச்சுவிடுவதில் சிரமம், சோர்வு, வயிற்றுப்போக்கு, மற்றும் தொண்டையில் புண் ஆகியவை மற்ற அறிகுறிகளாகும்.
இது தொடர்பாக சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நேரடி தொடர்பு மூலமே ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு வைரஸ் பரவுகிறது. முக்கியமாக பேசும்போதும், தும்மல் மற்றும் இருமலின் போது வெளிப்படும் நீர்த்துளிகள் மூலம் வைரஸ் பரவுகிறது. இந்த நீர்த்துளிகள் தரையில் இருக்கும் போது, கண்ணுக்கு தெரியாத வைரஸ், அதனை தொடுபவர்கள் மூலம் கண்கள், மூக்கு மற்றும் வாய் மூலம் பரவுகிறது.
இந்த வைரசால் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. நீரழிவு, ரத்த அழுத்தம், இய பிரச்னை உள்ளவர்கள் அதிகம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை கொரோனா குறித்த அச்சம் விலக போவதில்லை. கொரோனா பாதித்தவர்களுக்கு திடீரென வாசனை மற்றும் சுவை அறியும் திறன் இல்லாமல் போகும் போன்ற அறிகுறிகள் தென்படும் என தெரிவித்துள்ளது.
பீலா ராஜேஷ் மாற்றம் ஏன் ?
அமைச்சர் விளக்கம்
சுகாதார செயலராக இருந்த பீலா ராஜேஷ், மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்த நடவடிக்கை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: பீலா ராஜேஷ் மாற்றத்தில் வேறு எந்த காரணமும் இல்லை. அவர் மாற்றப்பட்டது முழுக்க முழுக்க நிர்வாகம் சார்ந்த நடவடிக்கையே .
பீலா ராஜேஷ் மாற்றப்பட்டதற்கும் கொரோனா பரவலுக்கும் சம்பந்தம் இல்லை என்கிறது தமிழக அரசு. ”அதிகாரிகளை ஒரு பொறுப்பில் இருந்து இன்னொரு பொறுப்புக்கு மாற்றுவது அரசாங்கத்தின் வாடிக்கையான நிர்வாக நடவடிக்கை” என்று அமைச்சர் ஜெயகுமார் சொன்னார். கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள நிச்சயமான வழி இருக்கிறது என்றார் அமைச்சர். ”முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால், கொரோனா வரவே வராது” என்றார். ”எதை எடுத்தாலும் அரசியல் செய்யும் திமுக கொரானாவையும் விடவில்லை. ஆனால், கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்களை மக்கள் கோரன்டைன் செய்வார்கள்” என்றார் ஜெயகுமார்.
முக கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய 3 விஷயங்களை பின்பற்றினால், கொரோனா அரவே வராது. கொரோனாவில் யார் அரசியல் செய்தாலும், அவர்கள் மக்களால் தனிமைபடுத்தப்படுவார்கள். சூழலை பொறுத்து உரிய நேரத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய - சீன எல்லையில் நிலைமை
கட்டுப்பாட்டில் உள்ளது:
ராணுவ தளபதி
சீனாவுடனான இந்திய எல்லைகளில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கீழ்மட்ட அளவில் படைத்தலைவர்கள் அளிலான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன என ராணுவ தளபதி கூறினார்.
ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் மூலம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் அனைத்தும் களையப்படும். கடந்த வாரம் சீனத் தரப்பில் தொடங்கிய உயர்மட்ட தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து உள்ளூர் மட்டத்தில் படைத் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இரு தரப்பிலும் உள்ள வேறுபாடுகள் விரைவில் சுமூக நிலையை எட்டும் என நம்புகிறோம். நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனாவை கட்டுப்படுத்த மஹா அரசு
ஹோமியோபதி, ஆயுர்வேத மருந்துகளை
பயன்படுத்த முடிவு
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஹோமியோ மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த மஹா அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் மஹாராஷ்டிரா மாநிலம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு நாளுக்கு நாள் வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் மாநில அரசு திணறி வருகிறது. அலோபதி மருந்துகளுக்கு மாற்றாக ஹோமியோபதி மற்றும் ஆயுர்வேத மருந்துகளை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மாநில அரசு முடிவு எடுத்துள்ளது.
கொரோனா சிகிச்சையில் ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற ஹோமியோபதி மருந்தும், யுனானி மற்றும் ஆயுர்வேத மருந்துகளான அகஸ்திய ஹரிடகி, ஆயுஷ் 634, நல்லெண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்பட உள்ளன. கிராமப்புறங்களில் வசிக்கும் 55 வயதிற்கு அதிகமானவர்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் 30 என்ற மருந்து வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே மத்திய ஆயுஷ் அமைச்சகம் இம்மருந்தினை டில்லி, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட நகரங்களில் வழங்க திட்டமிட்டிருந்தது. இம்மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஆனால், ஆர்சனிக் ஆல்பம் 30 கொரோனாவை தடுக்கும் என்று ஆராய்ச்சி பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. பரிசோதிக்கப்படாத மருந்துகளை கொரோனாவுக்கு பயன்படுத்துவதால் பாதிப்பை மேலும் தீவிரமாக்கும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் ஒரே நாளில் 11,458 பேருக்கு
கொரோனா: பாதிப்பு 3 லட்சத்தை கடந்தது
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 11,458 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 08 ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 330 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 386 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் 4வது இடத்தில் இருக்கும் இந்தியா, 3வது இடத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனாவிலிருந்து அப்ரிடி மீள
வேண்டுகிறேன்: கம்பீர்
பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி, கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள வேண்டுகிறேன் என, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்த ஓய்வு பெற்ற பின்னும், பாக்., கிரிக்கெட் லீக் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வரும் ஷாகித் அப்ரிடி, தனது தொண்டு நிறுவனம் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளித்து வந்தார். இந்நிலையில், அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை அப்ரிடி டுவிட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், எம்.பி.,யுமான கவுதம் காம்பீர், அப்ரிடி குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: அரசியல் ரீதியாக அப்ரிடியுடன் கருத்து வேறுபாடு உள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். கொரோனா வைரசால் யாரும் பாதிக்கப்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவும் ஜப்பானும் இணையும்
நிலவு திட்டம்
இந்தியாவும் ஜப்பானும் இணைந்து நிலவின் தரைப்பகுதியில் ஆய்வூர்தியை இறக்கி ஆய்வு செய்யும் திட்டம் 2023ம் ஆண்டிற்கு பின் செயல்படுத்தப்படும் என்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்சா அறிவித்துள்ளது.
நிலவின் துருவப் பகுதியை ஆய்வு செய்யும் திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்படுத்த உள்ளன. இது தொடர்பான விஷயங்களை ஜப்பான் நிறுவனம் ஜாக்சா வெளியிட்டுள்ளது
நிலவின் மேற்பரப்பில் இறங்கும் லேண்டர், லேண்டரிலிருந்து வெளிப்பட்டு நிலவின் தரையில் ஆய்வு செய்யும் ஆய்வூர்தி ஆகிய இரண்டும் இத்திட்டத்தில் இடம் பெறுகிறது. இதன்படி லேலண்டரையும், ஆய்வூர்தியையும் ஜப்பான் வடிவமைக்கிறது. தரையிறக்கும் அமைப்பை இஸ்ரோ தயாரிக்க உள்ளது. ஜப்பானில் உள்ள மிட்ஸுபிஷி தயாரிப்பில் உருவாகும் எச் 3 ராக்கெட் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
நிலவின் துருவப் பகுதியில் தண்ணீர் இருக்கலாம் என கருதப்படும் நிலையில் நீரானது என்ன வடிவில் எந்த அளவு உள்ளது என்பதையும், எதிர்காலத்தில் அதை விண்வெளித் திட்டங்களுக்கு பயன்படுத்த முடியுமா என்பதையும் இஸ்ரோவுடன் இணைந்து ஆய்வு செய்ய இருப்பதாக ஜாக்சா அறிவித்துள்ளது.
மேலும் நிலவில் தரையிறங்கும் ஆய்வூர்தியானது, தண்ணீர் இருக்க கூடிய பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் அப்பகுதியில் உள்ள தனிமங்களை ஆய்வு செய்து ஹைட்ரஜனை கண்டறிந்தால், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தண்ணீர் இருப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் இவ்வாறு ஜாக்சா அறிவித்துள்ளது.
சென்ற முறை விக்ரம் லேண்டரை வெற்றிகரமாக நிலவில் இறக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கவில்லை. இந்த கூட்டு முயற்சி வெற்றி பெற்றால், ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு நிலவின் தரையில் வெற்றிகரமாக லேண்டரை இறக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும், ஜப்பானும் இடம் பெறும்
சுபம்
மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
No comments
Thanks