Advertisement

Breaking News

வரலாறு - கலையும் காமராஜரும் -காவியத் தலைவர் காமராஜர் பகுதி 19 - Kamarajar- Part 19

கலையும்  காமராஜரும்



கருணை உள்ளம் படைத்த பெருந்தலைவர் காமராஜரிடம் கலையுள்ளம் நிரம்பி வழிந்தது.
காந்தத்தை நோக்கி இரும்பு பாய்ந்து செல்வது போல் கலைஞர்கள் அனைவருமே பெருந்தலைவரை நாடிச் சென்றனர். கட்சிக் கண்ணோட்டத்திற்கு அப்பாற்பட்டு அனைத்துக் கலைஞர்களிடமும் அன்புடன் பழகிய பெருந்தலைவர் காமராஜர் அனைத்துக் கலைஞர்களையும் சமமாகப் போற்றினார்.
கலைஞர்கள் ஆர்வமுடன் அழைக்கும் எந்த ஒரு விழாவுக்கும் தட்டிக் கழிக்காமல் சென்று கலந்து கொள்வார். கலைஞர்களுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்க வேண்டும் என்பது தான் காமராஜரின் ஒரே நோக்கம். அவரது இந்தப் பெருந்தன்மை தான் அனைத்துத் தரப்புக் கலைஞர்களையும் அவர் மீது பாசம் கொள்ளச் செய்தது என்பது உண்மை.
கலைஞர்களில் குறிப்பாக சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன், கவிஞர் கண்ணதாசன், நடிகை சாவித்திரி ஆகியோர் காமராஜரின் தன்னலமற்ற சேவையால் ஈர்க்கப்பட்டு அவரது வழியில் நடைபோட்டவர்கள். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் காமராஜரின் சுட்டுவிரல் அசைவுக்குக் கட்டுப்பட்டு தீவிரக் கட்சிப் பணியாற்றினார்.
ஜெமினி கணேசன் - சாவித்திரி தம்பதியினர் பெருந்தலைவர் காமராஜர் மீது பக்தியும், ஈடுபாடும் கொண்டு விளங்கி வந்தார்கள். சீன யுத்தத்தின் போது பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் காமராஜர் கேட்காமலேயே யுத்த நிதியாக வழங்கியவர்கள் நடிகையர் திலகம் சாவித்திரி.
கவிஞர் கண்ணதாசன், காமராஜரைப் பற்றி காலத்தால் அழிக்க முடியாத பல காவியங்களை படைத்திருக்கிறார்.

முதியோர் ஓய்வூதிய திட்டம்
*******************************************


பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சரான பிறகு கும்பகோணத்துக்கு ஒருமுறை வந்திருந்தார். காமராஜர் காரில் இருந்து இறங்கும் நேரத்தில் ஒரு மூதாட்டி, அவரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி போலீஸ்காரரிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
இந்தச் சண்டையைப் பார்த்து விட்டார் காமராஜர். அவரை அனுமதிக்கும்படி போலீசாரிடம் சொல்ல, அந்த மூதாட்டி காமராஜரை நெருங்கினார். ஐயா, என்னைப்போல் வயசானவங்க தள்ளாத காலத்திலேயும் தலையில் கூடை தூக்கிப் பிழைக்க வேண்டியிருக்கு. எங்களுக்கு ஏதாவது செய்யணும் என்றார். ஆகட்டும் பார்க்கலாம் என்ற சொல்லிவிட்டுக் கிளம்பி விட்டார்.
சொல்லிவிட்டு நகர்ந்தாரே தவிர, அந்த மூதாட்டி சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் வந்து மோதின. கார் புறப்பட்டது. காரில் இருந்த அதிகாரிகளிடம் இந்த ஏழை மூதாட்டிகளுக்கு மாதம் எவ்வளவு ரூபாய் தேவைப்படும்? என்று விசாரித்தார்.
யோசித்த அதிகாரிகள் முதியோர்களுக்கு மாதந்தோறும் இருபது ரூபாய் செலவுக்கு தேவைப்படும் என்றனர். சென்னை வந்து சேர்ந்ததும் மாநிலத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் எத்தனை பேர் எனக் கணக்கு எடுக்க உத்தரவிட்டார்.
அந்த பட்டியல் கைக்கு வந்ததும், ஏழை-எளிய முதியோர்களுக்கு பணம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார். உடனடியாக முதியோர் ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது.

No comments

Thanks