Advertisement

Breaking News

Breaking News - தமிழகத்தில் 24 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இதுவரை 197 பேர் பலி


தமிழகத்தில் 24 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு; இதுவரை 197 பேர் பலி





சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 2) ஒரே நாளில் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,586 ஆகவும், பலி எண்ணிக்கை 197 ஆகவும் அதிகரித்துள்ளது.


தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 55 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 24,586 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 73 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,094 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 12 பேரும், செங்கல்பட்டில் ஒருவரும் என மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது.




இன்று ஒரே நாளில் 536 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,706 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,680 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,378 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 20,857 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,351 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


ஜி-7 உச்சி மாநாடு:பிரதமர் மோடிக்கு டிரம்ப் அழைப்பு

வாஷிங்டன்: நடைபெறவுள்ள ஜி-7 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.





முன்னதாக, ஜூன் மாதம் இறுதியில் நடைபெறும் ஜி7 மாநாட்டை செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.ஜி7 நாடுகள் அமைப்பில் மிகப் பெரிய பொருளாதாரத்தை கொண்ட வளர்ச்சி அடைந்த நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன், கனடா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. கொரோனா பரவல் காரணமாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கலந்து கொள்ள இயலாது என தெரிவித்த நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் பேசியபோது ஜி-7 நாடுகளின் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார். இதனை தொடர்ந்து, இந்திய-சீன பிரச்னை, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு; இதுவரை 5,598 பேர் பலி






புதுடில்லி:
இந்தியாவில், ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.98 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 204 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,598 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 2) காலை 09:15 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,98,706 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,598 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95,526 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,171 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





மாநில வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்


மாநிலம் - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை - உயிரிழப்பு
மஹாராஷ்டிரா - 70,013 - 2,362
தமிழகம் - 23,495 - 184
டில்லி - 20,834 - 523
குஜராத் - 17,200 - 1,063
ராஜஸ்தான் - 8,980 - 198
மத்திய பிரதேசம் - 8,283 - 358
உத்தர பிரதேசம் - 8,075 - 217
மேற்கு வங்கம்- 5,772 - 325
ஆந்திரா - 3,783 - 64
கர்நாடகா- 3,408 - 52
தெலுங்கானா - 2,792 - 88
கேரளா - 1,326 - 10

புதுச்சேரி- 74 - 0


அமெரிக்காவில் போராட்டத்திற்கு மண்டியிட்டு ஆதரவளித்த போலீசார்


மின்னபொலிஸ்: அமெரிக்காவில் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு போலீசார் சிலர் மண்டியிட்டு தங்கள் ஆதரவினை தெரிவித்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.






கருப்பின இளைஞரின் மரணத்திற்கு நீதி கேட்டு 7 வது நாளாக அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. காலிபோர்னியா மாகாணத்தில் ஓக்லி, ப்ரெண்வுட் பகுதிகளில் நடந்த அமைதிப் போராட்டத்தின் போது போலீசார் மண்டியிட்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி உள்ளனர். போலீசாரின் இந்த செயலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆராவாரம் செய்து வரவேற்பு அளித்தனர்.
அமெரிக்காவின் மின்னபொலிஸ் நகரில் போலீஸ் அதிகாரி தாக்கியதில் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து நீதி கேட்டும், இனப்பாகுபாட்டிற்கு எதிராகவும் அமெரிக்கா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டென்வர் நகரில் நூற்றுக்கணக்கான மக்கள் அரசு கட்டடத்திற்கு எதிரே அமர்ந்து மண்டியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





லாஞ்ஏஞ்சல்ஸ் நகரில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டனில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் குவிக்கப்பட்ட நிலையிலும் போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில் ஜார்ஸ் பிளாய்டின் மரணத்திற்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாக நியூயார்க் நகரத்தின் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன.இதனிடையே மக்கள் ஒன்றாக திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதால் கொரோனா தொற்று தீவிரமடையும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தீவிரப் புயலாக மாறும் 'நிசர்கா'


மும்பை: அரபிக் கடலில் உருவாகியுள்ள நிசர்கா புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாறும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.





தீவிரப் புயலாக மாறும் நிசர்கா என்றும் மஹாராஷ்டிரா மாநிலம் மற்றும் குஜராத் மாநிலம் இடையே மஹா., ராய்காட் மாவட்டம் அலிபாக் அருகே புதன் பிற்பகல் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த நுாற்றாண்டில் மும்பையை தாக்கும் முதல் புயல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புயல் வடக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தை கரையை கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்தில் கோவா, கர்நாடகா மாநிலத்தில் கடலோர பகுதி மத்திய மஹாராஷ்டிரா, மராத்வாடா ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்யும், மும்பை, பால்கர், தானே, ராய்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும்.

புயலின் தாக்கத்தால் மும்பை கடல் பகுதியில் வழக்கத்தை விட ஒரு மீட்டர் முதல் 1.5 மீட்டர் வரை உயரத்தில் அலைகள் எழும். இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புக வாய்ப்பு உள்ளது. புயலின் போது மரங்கள் வேருடன் சாயும், மின்கம்பங்கள் சாயும். ஓட்டு வீடுகள், தகரவீடுகள் மிகுந்த சேதமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது






தேசிய பேரிடர் மீட்புப் படையின் 45 பேர் கொண்ட 30 குழுவினர் மஹாராஷ்டிரா மாநிலம் மற்றும் குஜராத் மாநிலத்தில் பாதிக்கப்பபட கூடிய பகுதிகளில் மீட்புப் பணிக்கு தயாராக உள்ளனர். குஜராத் மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் 20,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவர்.

இந்நிலையில் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அனைவரின் நலனுக்காக பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


விவகாரத்து மூலம் ரூ.24 ஆயிரம் கோடி பெற்று உலக பணக்காரரான பெண்!






பெய்ஜிங்: ஷென்சென் காங்தாய் என்ற சீன மருந்து நிறுவன தலைவர் டு வெய்மென், தனது மனைவியை விவாகரத்து செய்ததால், ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அவர் பெயருக்கு மாற்றியுள்ளார்.

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் டு வெய்மென்(56). கல்லூரியில் வேதியியல் படித்த இவர், 1987-ல் ஒரு கிளினிக்கில் வேலைக்கு சேர்ந்தார். 95-ல் ஒரு பயோடெக் நிறுவனத்தில் விற்பனை மேலாளரானவர், 2004-ல் காங்தாய் பையாலஜிகல் புராடக்ட்ஸ் என்ற மருந்து நிறுவனத்தை தொடங்கினார். 2009-ல் மின்ஹாய் என்ற நிறுவனத்தை வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். 2017-ல் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்நிறுவனத்தின் இன்றைய சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கும் மேல் ஆகும்.

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் திட்டத்தை இந்நிறுவனம் அறிவித்தபோது, காங்டாய் பங்குகள் கடந்த ஆண்டில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்தது. பிப்ரவரியிலிருந்து நிறுவனத்தின் வளர்ச்சி ஏற்றத்திலேயே காணப்படுகிறது.

இந்நிறுவனத்தில் மே 2011 முதல் 2018 வரை அவரது மனைவி யுவான் லிபிங்(49) இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்போது அவர் துணை நிறுவனமான பெய்ஜிங் மின்ஹாய் பயோடெக்னாலஜி நிறுவனத்தின் துணை பொது மேலாளராக உள்ளார்.





கருத்து வேறுபாடு காரணமாக லிபிங்கை, டு வெய்மென் கடந்த மாதம் விவாகரத்து செய்தார். அதன் காரணமாக தனக்கு சொந்தமான பங்குகளிலிருந்து 161.3 மில்லியன் பங்குகளை தனது முன்னாள் மனைவி யுவான் லிப்பிங்கிற்கு மாற்றினார். அப்பங்குகளின் சந்தை மதிப்பு சுமார் ரூ.24 ஆயிரம் கோடி ஆகும். இதன் மூலம் உலக பணக்காரர்கள் வரிசையில் யுவான் லிப்பிங் இடம்பிடித்துள்ளார்.

விவாகரத்தினால் டு வெய்மென்னின் நிகர சொத்து மதிப்பு ரூ.49 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.23 ஆயிரத்து 300 கோடியாக குறைந்துள்ளது. விவாகரத்து செய்தியால் நிறுவனத்தின் பங்குகளும் இன்று (ஜூன் 2) 3.1% வீழ்ச்சியடைந்துள்ளன.


அழுத குழந்தைக்கு பால் கொடுத்த நர்ஸ் ; குவியும் பாராட்டு

கோல்கட்டா : கோல்கட்டாவில் பிறந்த குழந்தை பசியால் அழுதது. குழந்தையின் தாய் பால் கொடுக்க இயலாத நிலையில், நர்ஸ் ஒருவர் பால் கொடுத்து குழந்தையின் பசியை தீர்த்தார். இவரது மனிதாபிமானத்தை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.





மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் கர்ப்பிணி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த பெண்ணால் தன் குழந்தைக்கு பால் கொடுக்க முடியவில்லை. இந்நிலையில் திடீரென இரவு நேரத்தில் குழந்தை பசியால் அழுதது. பொதுவாக இதுபோன்ற நிலைமைகளில் அந்த வார்டில் உள்ள மற்ற சில தாய்மார்கள் குழந்தைக்கு பால் கொடுத்து பசியாற்றுவர். ஆனால் கொரோனா பாதிப்புகளால் அதையும் செய்யமுடியாது என தெரிவிக்கப்பட்டது.






நேரம் ஆக ஆக குழந்தையின் அழுகுரல் அதிகரித்தது. இதனால் அந்த மருத்துவமனையில் பணியாற்றும் உமா என்ற நர்ஸ் அந்த குழந்தைக்கு பால் கொடுத்தார். அதனால் பசியாறிய குழந்தை அழுகையை நிறுத்தியது. குழந்தைக்கு பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது நர்சின் கணவர் போன் செய்துள்ளார். அப்போது குழந்தை குறித்த தகவலை கூறியபோது ,பாதுகாப்புடன் குழந்தையை பராமரித்துக்கொள்ளுமாறு அவர் கணவர் கூறியதாக தெரிவித்தார். மேலும் எல்லாவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் குழந்தைக்கு பால் கொடுப்பதாகவும், காலையில் வீட்டுக்கு வந்துவிடுவதாகவும் நர்ஸ் அவருக்கு பதிலளித்தார். செவிலியரின் இந்த செயல் அனைவர் மத்தியிலும் பாராட்டுக்களைப் பெற்றுவருகிறது


தெலுங்கானா கவர்னர் தமிழிசைக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதல்வர் சந்திரசேகரராவ்

ஐதராபாத் : 
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கு  (ஜூன்.,2) அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.




தெலுங்கானாவின் கவர்னரான தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று (ஜூன்.,2) தனது பிறந்தநாளை கொண்டாகிறார். ராஜ்பவனில் கவர்னர் தமிழிசையை சந்தித்து அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் மலர் கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். முதல்வர் வாழ்த்துக்களை ஏற்று, கவர்னர் கூறியதாவது : சுதந்திர போராட்டத்திற்கு பிறகு மாநில இயக்கம் நீண்ட போராட்டமாக இருக்கிறது. தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப்பட்ட இதே நாளில் எனது பிறந்தநாள் வருவது மிகுந்த மகிழ்ச்சி. தெலுங்கானாவை சிறப்பான பாதையில் வழிநடத்தும் முதல்வருக்கு எனது பாராட்டுகள் என கூறினார்.






தொடர்ந்து பேசிய முதல்வர் சந்திரசேகரராவ், தெலுங்கானா மாநிலத்தின் உரிமைக்காகவும், மாநிலத்தின் நன்மைக்காக பலர் தங்களது உயிரை தியாகம் செய்தனர். அந்த தியாகிகளுக்கு இந்நாளில் அஞ்சலி செலுத்திய பின் கொடி ஏற்றி வைக்கப்படும். இவ்வாறு கூறினார். மேலும் முதல்வருடன் ராஜ்யசபா உறுப்பினர்களான டாக்டர் கே. எம்.எல்.ஏ.க்கள் ஜீவன் ரெட்டி, நாகேந்தர், ரைத்து பந்து மாநிலத் தலைவர் பல்லா ராஜேஸ்வர் ரெட்டி, எம்.எல்.சி.க்கள் கர்னே பிரபாகர், சீனிவாஸ் ரெட்டி, திட்ட ஆணையத்தின் துணைத் தலைவர் பி.வினோத் குமார், டி.எஸ்.ஐ.சி தலைவர் கடாரி பாலா மல்லு, டி.எஸ்.சி.எஸ்.சி தலைவர் மாரெடி சீனிவாஸ் ரெட்டி ஆகியோரும் கவர்னர் தமிழிசைக்கு வாழ்த்து கூறினர்

மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

No comments

Thanks