Breaking News - தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா; மொத்தம் 70,977 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் ஒரே நாளில் 3,509 பேருக்கு
கொரோனா; மொத்தம் 70,977 பேர் பாதிப்பு
25.06.2020
தமிழகத்தில் நேற்று (ஜூன் 25) புதிய உச்சமாக ஒரே நாளில் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 70,977 ஆகவும், பலி எண்ணிக்கை 911 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் நேற்று மேலும் 3,509 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 151 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 70,977 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 88 பரிசோதனை மையங்கள் மூலமாக நேற்று ஒரே நாளில் 32,543 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. நேற்று வரையில் தமிழகத்தில் 10,08,974 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன.
நேற்று அரசு மருத்துவமனையில் 29 பேரும், தனியார் மருத்துவமனையில் 16 பேரும் என 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 911 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 39,999 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 30,064 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆக.,12ம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து
நாடு முழுவதும் கால அட்டவணைப்படி இயங்கும் அனைத்து ரயில்களின் சேவைகளும், ஆக.,12ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால், நாடு முழுவதும் மார்ச் 25 முதல் பயணியர் ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு தளர்வுகளுடன் அறிவிக்கப்பட்டபின், ஜூன் 1 முதல் குறிப்பிட்ட மார்க்கங்களில் மீண்டும் துவங்கின. முதற்கட்டமாக, 'துரந்தோ, சம்பர்க் கிராந்தி, ஜன் சதாப்தி, பூர்வா' விரைவு ரயில் உள்ளிட்ட, 100 ஜோடி ரயில் சேவைகள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுவதும் நேர அட்டவணைப்படி இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ஆக.,12ம் தேதி வரை இயக்கப்படாது என ரயில்வே அறிவித்துள்ளது. இதனையடுத்து, ஆக.,12 வரை பதிவு செய்யப்பட்ட, அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. சிறப்பு ரயில்கள் மட்டும் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவிடம் நிதி பெற்ற காங்கிரஸ் அதை எவ்வாறு பயன்படுத்தியது: ரவிசங்கர் கேள்வி
காங்., ஆட்சியில் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதியுதவி அளித்துள்ளது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: காங்கிரஸ்கட்சி இந்தியா சீனாவிடம் சரண் அடைந்து விட்டதாக கூறி வருகிறது. ஆனால் 2005-06ம் ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீன தூதரகம் ராஜிவ் அறக்கட்டளைக்கு நதி உதவி அளிக்கப்பட்டு வந்துள்ளது.
அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சீனாவிடம் இருந்து லஞ்சம் வாங்கியதா? சீனாவிடம் இருந்து பணம் பெறப்பட்டு இருந்தால் அந்த பணம் எவ்வாறு பயன் படுத்தப்பட்டது என்பதை காங்., விளக்க வேண்டும். காங்கிரஸ் எதையும் மறைக்கிறதா? காங்கிரசுக்கும் சீனாவுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுஉள்ளதா? என கூறினார்.
இதனை மறுத்துள்ள காங்., செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா உண்மையான பிரச்னைகளில் இருந்து நாட்டு மக்களின் கவனத்தை பா.ஜ.,திசை திருப்ப முயற்சிக்கிறது. என்றார்
இந்தியாவில் ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா: பாதிப்பு 4.7 லட்சமாக அதிகரிப்பு
இந்தியாவில் ஜூன் 24 ஒரே நாளில் 16,922 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.7 லட்சமாக அதிகரித்தது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 14,894 ஆக உள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் புதிதாக 16,922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 73 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. அதில், ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 514 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 லட்சத்து 71 ஆயிரத்து 697 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரசால் 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 894 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மாநில வாரியாக பாதிப்பு விவரம்
மாநிலம்- பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை- பலி
மஹாராஷ்டிரா - 1,42,900 - 6,739
டில்லி - 70,390 - 2,365
தமிழகம் -67,468 - 866
குஜராத்-28,943 -1,735
உ.பி.,-19,557-596
ராஜஸ்தான்-16,009-375
மேற்கு வங்கம்- 15,173-591
ம.பி.,-12,448-534
ஹரியானா-12,010-188
தெலுங்கானா-10,444-225
ஆந்திரா 10,331-124
கர்நாடகா-10,118- 164
பீஹார்-8,209-57
காஷ்மீர்-6,422-88
அசாம்-6,198-09
ஒடிசா-5,752-17
பஞ்சாப் 4,627-113
கேரளா-3,603-22
உத்தர்காண்ட்-2,633-35
சத்தீஸ்கர்-2,419-12
ஜார்க்கண்ட்-2,207-11
திரிபுரா-1,259-01
மணிப்பூர்-970-0
கோவா-951-2
லடாக்-941-01
ஹிமாச்சல பிரதேசம்-806-08
புதுச்சேரி461 -09
சண்டிகர்-420-06
நாகலாந்து-347-0
அருணாச்சல பிரதேசம் - 158- 0
மிசோரம்-142-0
தாத்ரா, நாகர் ஹவேலி, டாமன் டியூ - 120-0
விண்வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மர்மப் பொருள்
விண்வெளியில் புதிய மர்ம பொருள் ஒன்றை இத்தாலி நாட்டு விஞ்ஞானிகள் புவிஈர்ப்பு சென்சார் அலைகளைப் பயன்படுத்தி கண்டறிந்துள்ளனர்.
இத்தாலியின் பைசா நகரில் உள்ள ஐரோப்பிய புவியீர்ப்பு ஆய்வகத்தில் வானியல் ஆய்வில் ஈடுபட்டிருந்த போது சுமார் 800 ஒளி ஆண்டுகள் தொலைவில் புதிய இரண்டு பொருட்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் ஒன்று கருந்துளையாகவும் மற்றொன்று சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
முதலில் கூறப்பட்டது கருந்துளை என்று நிச்சயமாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது நம் சூரியனை விட 23 மடங்கு நிறை உடையது என்று சொல்லப்படுகிறது. இரண்டாவது கூறப்பட்ட மர்மப்பொருள் சிறிய கருந்துளை அல்லது நியூட்ரான் நட்சத்திரமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது சூரியனைப் போல 2.6 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இவை இரண்டிற்கும் அதிக வேற்றுமை இருப்பதால் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு மோடி இரங்கல்
பீகார் மற்றும் உ.பி.,யில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பீகாரில் பெய்த கனமழையாலும், மின்னல் தாக்கியும் ஒரே நாளில் 83 பேர் பலியாகி உள்ளனர். உ.பி.,யில் பலர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டதாவது: பீகார் மற்றும் உ.பி.,யின் சில மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்த சோகமான செய்தி வந்துள்ளது. மாநில அரசுகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
சீன பொருட்கள் புறக்கணிப்பு ; தீவிரமாகும் பிரசாரம்
சீன பொருட்களை புறக்கணிப்பதுடன், டில்லியின் ஹோட்டல் மற்றும் விருந்தினர் மாளிகைகளில் சீனர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா இடையேயான மோதலில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். சீனாவின் தொடர்ந்த அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சீன பொருட்களை இந்தியர்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும். அந்நாட்டில் இருந்து இறக்குமதியாகும் தரமற்ற பொருட்களை தவிர்த்து, நமது நாட்டில் உற்பத்தியை அதிகரித்து, இந்திய பொருட்களை பயன்படுத்துமாறும் பலதரப்புகளும் கோரிக்கை விடுத்து வருகிறது.
சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் தரமில்லாத பொருட்களையும், இந்திய மக்கள் புறக்கணிக்க வேண்டும். இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை பயன்படுத்துங்கள் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்டவர்களும் கூறியிருந்தனர். தொடர்ந்து, இரு தினங்களுக்கு முன் அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பினர், சீன பொருட்களை விற்பனை செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர்.
மேலும் டில்லியில் சீன பொருட்களை தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடத்தினர். இதனை யொட்டி, டில்லியில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் விருந்தினர் மாளிகை போன்றவற்றில் இனி சீனர்களுக்கு அனுமதி கிடையாது. அங்கு பயன்படுத்தப்பட்ட சீன பொருட்களையும் தவிர்க்க வேண்டும் என டில்லியின் ஹோட்டல் மற்றும் விருந்தினர் மாளிகையின் பொது செயலாளர் மகேந்திர குப்தாவுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டது.
அடுத்ததாக டில்லியின் பெரிய ஸ்டார் ஹோட்டல்களையும் தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் சேர அழைப்பு விடுக்க வுள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 10 ல் சீன பொருட்களை புறக்கணிக்க ஒரு தேசிய பிரசாரம் தொடங்கப்பட்டது. 'இந்தியன் குட்ஸ் - எங்கள் பெருமை' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த பிரச்சாரம், 2021 டிசம்பருக்குள் சீன உற்பத்தி பொருட்களின் இறக்குமதியை 1 டிரில்லியன் (13 பில்லியன் அமெரிக்க டாலர்) குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று CAIT ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் சீன பொருட்களை புறக்கணித்து, இந்தியாவின் தயாரிப்புகளை விற்று, வாங்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பீகார் மாநிலத்தில் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 83 பேர் பலியாயினர்.
பீகார் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மக்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.மேலும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கோபால்கஞ்ச் மாவட்டத்தில் மட்டும் அதிகபட்சமாக 13 பேர் வரை பலியாகி உள்ளனர். மேலும் நவாடா மாவட்டத்தில் 8 பேரும், சிவான் மற்றும் பாகல்பூர் மாவட்டத்தில் தலா 6 பேரும்,தர்பங்கா, மற்றும் பாங்கா மாவட்டங்களில் தலா 5 பேரும் பலியாகி உள்ளதாக தெரிவித்து உள்ளன.
முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் பீகார் மாநிலத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் , இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தது
நிவாரண நிதி அறிவிப்பு
இதனிடையே பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பலியான 83 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என கூறி உள்ளார்.
ஜனநாயகத்திற்காக போராடியவர்களை தேசம் மறக்காது: பிரதமர்
அவசர நிலை காலத்தின் போது, ஜனநாயகத்தை பாதுகாக்க தியாகம் செய்தவர்களை தேசம் எப்போதும் நினைவில் வைத்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதை முன்னிட்டு டுவிட்டரில் பிரதமர் வெளியிட்ட பதிவு 45 ஆண்டுகளுக்கு முன்பு , இதே நாளில் இந்தியாவில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டது. அப்போது, இந்தியாவில் ஜனநாயகத்திற்காக போராடியவர்கள் கொடுமைகளை அனுபவித்தனர். அவர்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். அவர்களின் தியாகத்தை தேசம் எப்போதும் மறக்காது என தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த டுவிட்டுடன் 2 நிமிடம் ஓடக்கூடிய வீடியோ ஒன்றையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.
அதில் பிரதமர் கூறியதாவது:
அவசர நிலை அமல்படுத்தப்பட்ட போது, எதிர்க்கட்சிகள், அரசியல் நடவடிக்கைகளுக்கு மட்டும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனைவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இழந்த ஜனநாயகம் வேண்டும் என மக்கள் கோபப்பட்டனர். ஒருவரிடம் இருந்து ஜனநாயக உரிமைகளை பறிக்கும் போது தான், அதன் மதிப்பை அவர் உணர்வார். அவசர நிலை காலத்தில், ஒவ்வொரு குடிமகனும், தங்களிடம் இருந்து சிலவற்றை பறித்து கொள்ளப்பட்டதாக உணர்ந்தனர் என தெரிவித்துள்ளார்.
கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து பின்வாங்கிய சீன படைகள்?
லடாக்கின் கல்வான் பகுதியில் இருந்து சீன படைகள் பின் வாங்கிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 15 ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். பலர் காயமடைந்துள்ளனர். சீன தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அந்நாடு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இதனால், எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இதனை குறைப்பதற்காக இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கல்வான் பகுதியில் சீன ராணுவம் பின் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 22ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையின் போது, கல்வான் பகுதியில் இருந்து தங்கள் வீரர்கள் பின்வாங்கி செல்வார்கள் என சீன ராணுவம் தெரிவித்ததாகவும், அதன்படி சில வீரர்கள் மற்றும் வாகனங்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா
ஆந்திர மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 477 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளை தொடர்ந்து அதிகப்படுத்திக் கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகிறது. தற்போது மாநிலத்தில் நோய் பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது. மாநிலத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 19,085 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் 477 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 10,884 ஆக உயர்ந்தது. 7 பேர் புதிதாக பலியாகினர். இதுவரை மொத்தமாக பலியானவர்களின் எண்ணிக்கை 136 ஆக அதிகரித்தது.
ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 118 பேர் குணமடைந்தனர். நோய் தொற்றுக்கு தற்போது 5,760 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று வரை 4,988 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தவர்களில் கர்னூல், கிருஷ்ணா மற்றும் குண்டூரில் தலா 2 பேர் மற்றும் கிழக்கு கோதாவரியில் ஒருவரும் அடங்குவர். ஆந்திராவின் 13 மாவட்டங்களைசேர்ந்தவர்கள் புதிதாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. அதன்படி, கர்னூலில் 72 பேர், குண்டூரில் 67 பேர், கிழக்கு கோதாவரியில் 64 பேர் ஆகும். மேலும் வெளி மாநிலம் மற்றும் பிறநாடுகளில் இருந்தும் திரும்பியவர்கள் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.
ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி: நட்டா திடுக்
காங்கிரஸ் - சீனா இடையே ரகசிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் ராஜிவ் அறக்கட்டளைக்கு சீனா நிதி வழங்கியுள்ளதாக பா.ஜ., தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் முறையில் நட்டா பேசியதாவது: கடந்த 2017 ம் ஆண்டில், டோக்லாமில் இந்தியா - சீனா படைகள் நேருக்கு நேர் சந்தித்து கொண்டன. அப்போது, டில்லியில், இந்தியாவிற்கான சீன தூதரை, ராகுல் ரகசியமாக சந்தித்தார். தற்போது, கல்வானில் நடந்த மோதலின் போதும், நாட்டை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது.
கடந்த 2005 - 06 ம் ஆண்டில், சீனாவும் சீன தூதரகமும், ராஜிவ் அறக்கட்டளைக்கு 300 ஆயிரம் அமெரிக்க டாலர் நிதி வழங்கியுள்ளது. இது தான் காங்கிரஸ் மற்றும் சீனா இடையே ரகசிய ஒப்பந்தம். இவ்வாறு அவர் கூறினார்.
சுபம்
No comments
Thanks