Advertisement

Breaking News

Breaking News - பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்


பா.ஜ., முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன் காலமானார்





சேலம்: தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ. முன்னாள் தலைவர் கே.என். லட்சுமணன்,92 உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இவர் இரு முறை பா.ஜ. தலைவராகவும், 2001-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். சேலம் செவ்வாய்பேட்டையில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.







'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீடு நிறுத்தம் - ஜீ5 அறிவிப்பு





சென்னை : எதிர்ப்புகள் கிளம்பியதை அடுத்து 'காட்மேன்' வெப்சீரிஸ் வெளியீட்டை நிறுத்துவதாக ஜீ5 நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜெய்பிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் நடித்துள்ள வெப்சீரிஸ் 'காட்மேன்'. இதை தமிழரசன் படத்தின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன் இயக்கி இருந்தார். ஜீ5 ஓடிடியில் ஜுன் 12ல் வெளியிட இருந்தனர். அதற்கு முன்பாக இதன் டீசர் கடந்தவாரம் வெளியானது. அதில் இந்து கடவுள் நம்பிக்கையை அவமதிக்கும் வகையிலும், பிராமண சமூகத்தை இழிவுப்படுத்தி வசனங்களும், ஆபாச காட்சிகள் நிறைந்தும் இருந்தது சர்ச்சையானது.
இதற்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இந்த தொடரை தடை செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட இதன் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஜீ5 மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இதற்கிடையே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில் இந்து முன்னணியினர் புகார் அளித்தனர். இந்த வழக்கை ஏற்றுக்கொண்ட போலீசார், காட்மேன் தொடரின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உள்ளனர்.







இந்நிலையில் ஜீ5 நிறுவனம் டுவிட்டரில், ''எங்களின் காட்மேன் வெப்சீரிஸ் தொடர்பாக நிறைய கருத்துக்கள் வந்தன. அதன்காரணமாக இந்த தொடரின் வெளியீட்டை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். எந்த ஒரு மதம், சமூகம் மற்றும் தனிப்பட்டவர்களின் உணர்வுகளை புண்படுத்தும் நோக்கம் எங்களின் ஜீ5 நிறுவனத்திற்கோ, தயாரிப்பாளருக்கோ கிடையாது'' என பதிவிட்டுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை - பிரதமர் மோடி





புதுடெல்லி,
குறு, சிறு, நடுத்தர தொழில்துறைக்கு உதவ புதிய இணையதளத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்து பேசியதாவது:-
                        புதிய தொழில் வாய்ப்புகளை கண்டறிய champions.gov.in இணைதள உதவும். கொரோனாவுக்கு எதிராக போராட ஒவ்வொருவரிடமும் நல்லிணக்கம், கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவை.
கடினமான சூழ்நிலைகளில் இருந்து மக்கள் வெளியேற திருவிழாக்கள், இசை பெரிதும் உதவியுள்ளன.யோகா மற்றும் இசை மூலம் நமது உள்சக்தியை நாம் கட்டுப்படுத்தும் போது மக்கதான ஆற்றல் கிடைக்கிறது.

இசையில் நல்லிணக்கம் மற்றும் ஒழுக்கம் தேவைப்படுவது போல் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு ஒவ்வொரு குடிமகன்களுக்கும் நல்லிணக்கம் கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை. 130 கோடி இந்தியர்கள் கொரோனா தொற்றுக்கு எதிராக கைதட்டியும், இசை எழுப்பியும் உற்சாகப்படுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.


இந்தியாவில் ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா: பாதிப்பு 1.90 லட்சத்தை தாண்டியது





புதுடில்லி
: இந்தியாவில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 8,392 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில், கொரோனா உறுதிபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.90 லட்சமாக அதிகரித்துள்ளது. நேற்று (மே 30) ஒரே நாளில் 230பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 5,394 ஆக அதிகரித்தது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இன்று (ஜூன் 1) காலை 09:30 மணி நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், பலியானவர்களின் எண்ணிக்கையும் 5,394 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 91,818 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புடன் தற்போது 93,322 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.





கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8,392 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 230 பேர் உயிரிழந்துள்ளனர். 1,824 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா; இதுவரை 184 பேர் பலி






சென்னை:
தமிழகத்தில் இன்று (ஜூன் 1) புதிய உச்சமாக ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆகவும், பலி எண்ணிக்கை 184 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 23,495 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 9 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டையில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.






இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,322 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 19,961 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,212 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


சென்னையில் ஊரடங்கு நீட்டிப்பு : காவல் ஆணையர்

சென்னை: சென்னையில் வரும் 30ம் தேதி நள்ளிரவு வரையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப் படுவதாக சென்னை காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.





சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: கொரோனா நோய் தொற்று பரவும் விதத்தை தடுக்கும் விதமாக, தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி சட்டப்பிரிவு (2) தொற்று நோய் சட்டம் மற்றும் ஒழுங்கு முறை 1897-ல் கூறப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நடைமுறைப் படுத்தும் வகையில் 144 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பொது இடங்களில் 5 நபர்களுக்கு மேல் கூடுவதை தடை செய்யும் ஆணை நீட்டிக்கப்பட்டுள்ளது.



தடை உத்தரவை மீறுபவர்கள், இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுநலன் மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் வகையில் ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

கொரோனாவுக்கான மருந்து: ரஷ்யா அடுத்த வாரம் சோதனை


மாஸ்கோ: ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை வரும் ஜூன் 11ம் தேதி மனிதர்களுக்கு கொடுத்து சோதித்து பார்க்க உள்ளனர்.




கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. இங்கு தற்போது கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டிவிட்டது. 4,855 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பாதிப்பு எண்ணிக்கையை ஒப்பிடும் போது ரஷ்யாவில் சற்று குறைவாக உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் கடுமையான முயற்சி எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள கொரோனா மருந்தினை வரும் வாரத்தில், அதாவது ஜூன் 11ம் தேதி முதல் மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்க உள்ளனர். ரஷ்ய முதலீட்டு நிறுவனமான ஆர்டிஐஎப் நிதி உதவியுடன் கெம்ரார் என்ற மருந்து நிறுவனம் அவிஃபேவிர் என்ற ஆன்டிவைரல் மருந்தினை தயாரித்துள்ளது. இதற்கு ரஷ்ய மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. வரும் ஜூன் 11 முதல் நோயாளிகளுக்கு இம்மருந்து வழங்கப்படும் என ஆர்டிஐஎப் தலைவர் கிரில் திமித்ரியேவ் தெரிவித்துள்ளார்.






இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, ' இம்மருந்தின் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும். ஒரு மாதத்திற்கு 60 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். 1990ம் ஆண்டு ஜப்பான் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ஃபேவிபிரிவிர் எனப்படும் மருந்தில் சில மாற்றங்கள் செய்து அஃபிபேவிர் மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது' இவ்வாறு கிரில் திமித்ரியேவ் தெரிவித்தார்.


நடிகைகளுடன் ஜாலி.. ஐஏஎஸ் அதிகாரி கெட்டப்.. லட்சக்கணக்கில் பண மோசடி.. ஷாக் இளைஞர்!!!

ராமநாதபுரம்: அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி, லட்சக்கணக்கில் மோசடியும் செய்து, அந்த பணத்தில் 10-க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார் போலி ஐஏஎஸ் அதிகாரி ஒருவர். தற்போது அவரை ராமநாதபுரம் போலீசார் தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.





ராமநாதபுரத்தை சேர்ந்த தம்பதி தனராஜ் - டெய்சி. இருவருமே ஆசிரியர்களாக பணியாற்றி ரிடையர் ஆனவர்கள். இவர்களது மகன் சைமன். ஆந்திராவில் ஒரு மெடிக்கல் காலேஜில் பேராசிரியாக வேலை பார்த்து வருகிறார்.
டெய்சிக்கு ஜார்ஜ் பிலிப் என்பவர் அறிமுகமாகி உள்ளார். இவர் சென்னையில் உள்ள சுகாதாரத்துறையில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். அரசு பணியில் இருப்பதால், டிஎன்பிஎஸ்சியில் வேலை பார்த்து வரும் நவாப்பன் உள்ளிட்டோரை நன்றாக தெரியும், அவர்கள் மூலமாக நிறைய பேருக்கு அரசு வேலை வாங்கி தந்துள்ளதாக டெய்சியிடம் சொலி உள்ளார்.

இதைகேட்ட டெய்சியும் தன்னுடைய மருமகன், சகோதரியின் மகன், உறவினர் உட்பட 3 பேருக்கு அரசு வேலை வாங்கி தர முடியுமா என்று கேட்டுள்ளார். அதற்கு ஜார்ஜ்-ம் சரியென்று சொல்லி, ஆளுக்கு 5 லட்சம், அதாவது 3 பேருக்கும் 15 லட்சம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஒரு கையில் பணம், மறுகையில் அப்பாய்ண்ட்மென்ட் ஆர்டர் காப்பி தருவதாகவும் நம்பவைத்தார்.






அதன்படியே டெய்சியும், பணமும், சர்டிபிகேட்டுகளும் தயார் செய்து காத்திருந்தபோது, ஜார்ஜும், நவாப்பனும் ஒரு காரில் அதிகாரிகள் கெட்டப்பில் சென்றனர். சுழல் விளக்கு ஜீப்பில் இருவரும் இறங்கி வருவதை பார்த்த டெய்சியும் அதிகாரிகள் என்றே நம்பி பணத்தை தந்தார். பணி நியமன ஆணை எங்கே என்று கேட்டபோது, 2 பேருமே தாங்கள் வந்த ஜீப்பிலேயே எஸ்கேப் ஆகி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த டெய்சி, போலீசாருக்கு உடனே புகார் சொன்னார். இதையடுத்து, மாவட்டம் முழுதும் தீவிர கண்காணிப்பு நடத்தப்பட்டது. அப்போதுதான் எஸ்பி பட்டினம் பகுதியில் ஜார்ஜ், நவாப்பனை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் நாவப்பன் செங்கம் பகுதியை சார்ந்தவர் என்பதும், போலி ஐஏஎஸ் அதிகாரி போல வேஷமிட்டதும் தெரியவந்தது.

உயர் அதிகாரிகள் என்று போலி ஐடி, விசிட்டிங் கார்டுகளை காண்பித்தே பலரை நாவப்பன் மோசடி செய்ததும் தெரியவந்தது. இவருக்கு செங்கத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவர்தான் மோசடிக்கு உத.வி உள்ளார். இந்த மோசடி பணத்தை வைத்து கொண்டு, இவர்கள் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள், சின்னத்திரை நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளனர்.

அந்த போட்டோக்கள் எல்லாம் அவர்களது ஸ்மார்ட் போனில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. சினிமா படம் எடுக்க போகிறோம் என்று சொல்லியே அந்த நடிகைகளை வலையில் விழ வைத்துள்ளனர். கிட்டதட்ட 50-க்கும் மேற்பட்டோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக இவர்கள் ஏமாற்றி பணம் பறித்துள்ளது இப்போதைக்கு தெரியவந்துள்ளது. கைதானவர்களிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது


இலங்கையில் தவித்த 705 இந்தியர்கள் கடற்படை கப்பலில் தூத்துக்குடி வருகை

துாத்துக்குடி:இலங்கையில் இருந்து 705 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ்.ஜலஸ்வா கப்பல் இன்று துாத்துக்குடி துறைமுகம் வருகிறது.இந்தியாவில் இருந்து வேலைவாய்ப்பு, வணிகம்,கல்விக்காக இலங்கைக்கு சென்றவர்கள் கொரோனா ஊரடங்கால் அங்கிருந்து திரும்பமுடியவில்லை. மத்திய அரசின் ஏற்பாட்டில் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ்.,ஜலஸ்வா மூலம் அவர்கள் இன்று இந்தியா திரும்புகின்றனர்.



120 பெண்கள் உள்பட 705 பேர் வருகின்றனர். கடல்எல்லை தாண்டி மீன்பிடித்ததற்காக கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 11 பேர், போதைபொருட்கள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதாகி பின்னர் விடுவிக்கப்பட்ட 13 பேர் உள்பட 419 தமிழர்கள் உள்ளனர்.

ஆந்திரா, கேரளா, குஜராத் மற்றும் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். இன்று மாலை 6:00 மணிக்கு கொழும்பில் இருந்து கிளம்பிய கப்பல், நாளை (ஜூன் 2ல்) துாத்துக்குடி துறைமுகம் வருகிறது. துாத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துாரி உள்ளிட்டோர் வரவேற்று அவர்களுக்கு ஏற்பாடு செய்துள்ள வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.






ரஷ்யாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோனா

மாஸ்கோ : கொரோனா தாக்கம் காரணமாக ரஷ்யாவில் தொடர்ந்து பாதிப்புகள் அதிகரித்து ஒரே நாளில் 9,035 பேர் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகளின் மொத்த எண்ணிக்கை 4,14,878 ஆக அதிகரித்தது. இவ்வாறு அந்நாட்டின் சுகாதாரதுறை அறிவித்துள்ளது.




கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக உலகின் பல நாடுகளும் பாதிக்கப்பட்டு வருகிறது. லட்சக்கணக்கானவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். உலகளவில் கொரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அதை தொடர்ந்து, ரஷ்யா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளிலும் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 9,035 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்புகள் 414,878 ஆக அதிகரித்து மூன்றாம் இடத்தில் உள்ளன. பிரேசில் 2 வது இடத்தில் உள்ளது.

நேற்று ஒரு நாளில் 162 பேர் பலியாகினர். ரஷ்யாவின் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 4,855 ஆக உள்ளது. தொடர்ந்து சுமார் 1.75 லட்சம் பேர் வரை நோய் பாதிப்புகளில் இருந்து குணமடைந்தனர். மாஸ்கோவில் நோய் அறிகுறியுடையவர்கள் என பலருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


டாக்டர்களுக்கு அடிப்படை பயண கட்டணம் இல்லாமல் 50,000 விமான டிக்கெட்டுகள்: ஏர் ஏசியா

புதுடில்லி: கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு அடிப்படை பயணக் கட்டணம் இல்லாமல் 50,000 டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஏசியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.


கொரோனா ஒழிப்பில் அயராது பாடுபடும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இதை செய்வதாக ஏர் ஏசியா இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி அங்கூர் கார்க் தெரிவித்துள்ளார்.





இந்தியாவிற்குள் பயணம் செய்ய விரும்பும் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஜூலை மாதம் 1 முதல் செப்., 30 வரை இந்த சலுகையுடன் பயணிக்கலாம். இந்த சலுகையைப் பெற உரிய ஆவணங்களுடன் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டில் ஒரு வழிப் பயணத்திற்கான அடிப்படை பயணக் கட்டணம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படுகிறது. ஆனால், விமான நிலைய கட்டணங்கள், இதர வரிகள் போன்றவை செலுத்த வேண்டும் என்று ஏர் ஏசியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


லடாக் எல்லையருகே பறந்த சீன போர் விமானங்கள்: இந்திய கண்காணிப்பு





லடாக்: எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில், லடாக்கில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இருந்து இருந்து 30-35 கி.மீ., தொலைவில் சீன போர் விமானங்கள் பறந்து சென்றன. இதனை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், சீனாவின் எல்லையில் உள்ள ஹோடன் மற்றும் கர்குன்சா விமான படை தளங்களில் 10 முதல் 12 போர் விமானங்களை நிறுத்தியுள்ளது. தினசரி இந்திய எல்லை அருகே பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதனை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஹோடன் மற்றும் கர்குன்சாவில் இருந்து பயிற்சிக்கு கிளம்பும் சீன போர் விமானங்கள், லடாக் பகுதியில், எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே 30 - 35 கி.மீ., தொலைவில் பறந்து செல்கின்றன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

எல்லை பகுதியில் இந்திய சீன ராணுவ ஹெலிகாப்டர்கள் அருகருகே பறந்து சென்றதை தொடர்ந்து மே முதல்வாரத்தில் அந்த பகுதிக்கு சுகோய் 30 ரக போர் விமானங்களை இந்தியா அனுப்பி வைத்தது.





ஹோடன் போர் தளத்தில், கடந்த காலங்களில் பாகிஸ்தான் விமானப்படையினரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதால், அதனை இந்திய உளவுத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியின் இரு பகுதிகள், மற்றும் கல்வன் நாலா உள்ளிட்ட சீனாவின் நிலைகள் குறித்து கண்காணிக்க, இந்திய பாதுகாப்பு படையினர், ஆளில்லா போர் விமானங்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணத்திற்கு ஒப்புதல்: பிரகாஷ் ஜவடேகர்






புதுடில்லி: சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் வழங்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையில், பிரதமர் இல்லத்தில் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, நிவாரண நடவடிக்கைகள், பொருளாதார மீட்பு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர் மற்றும் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:






நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்த சலுகைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விவசாய பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு. பல்வேறு பயிர்களுக்கான கொள்முதல் விலை 50 சதவீதம் முதல் 83 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை வங்கிக்கடன் வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கான கடனுதவியில் 7 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம் 50 லட்சம் சாலையோர வியாபாரிகள் பயனடைவர்.





சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 லட்சம் சிறு, குறு தொழில் முனைவோர் பயனடைவர். 250 கோடி ரூபாய் வரை வியாபாரம் உள்ள நிறுவனங்களுக்கும், 50 கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள நிறுவனங்களுக்கும், சிறு தொழில்களுக்கான சலுகைகள் அளிக்கப்படும். சிறு, குறு தொழில் துறையில் மத்திய அரசு வழங்கும் சலுகைகள் மூலம் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஈரானில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

டெஹ்ரான்: இரண்டு மாதங்களுக்கு பிறகு ஈரானில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.





அங்கு ஒரே நாளில் 2,979 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட அலைவீசக் கூடும் என ஈரான் சுகாதார அமைச்சர் சயீத் நமாகி அச்சம் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த ஏப்ரல் மாதம் அதிகபட்சமாக 2,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் மக்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் கடுமையான சூழல்களை சந்திக்க வேண்டியது வரும் என்று நாட்டு மக்களை அவர் எச்சரித்துள்ளார்.





ஈரானில் இதுவரை 1,54,445 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 1,21,004 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை அந்நாட்டில் 7,878 பேர் பலியாகி உள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளிகள் திறப்பு : பெற்றோரிடம் கருத்து கேட்க அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.





உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொது தேர்வு வரும் 15ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் நடைபெற உள்ளது.






மேலும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆகஸ்ட் மாதம் மத்தியில் அல்லது செப்டம்பரில் முடிவு செய்யப்படும் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இதனிடையே கல்வியாண்டு துவங்குவது தாமதமாகி வருகிறது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

No comments

Thanks