Advertisement

Breaking News

வரலாறு - நேதாஜி உயிருடன் இருந்ததை அன்றே சொன்ன முத்துராமலிங்கத் தேவர்! - Muthuramalinga Thevar


நேதாஜி உயிருடன் இருந்ததை அன்றே சொன்ன முத்துராமலிங்கத் தேவர்!



   முத்துராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908 – அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆன்மிகவாதியாகவும் சாதி எதிர்ப்புப் போராளியாகவும் சுதந்திரப் போராட்டத் தியாகியாகவும் விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பிரித்தானிய அரசை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலைசிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடி வருகின்றது. பசும்பொன்னில் மூன்று நாட்கள் கோலாகலமாக நடக்கும் தேவர் குருபூஜை விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பால்க்குடம் எடுத்தல், அலகு குத்துதல், முளைப்பாரி செலுத்துதல், முடிக்காணிக்கை செலுத்துதல், பொங்கல் வைத்தல், தீச்சட்டி செலுத்துதல், அபிஷேகம் செய்தல் ஆகிய செயல்களின் மூலம் தேவரை வணங்குகின்றனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தமிழக அமைச்சர்களும் வருடம்தோறும் கலந்துகொண்டு தேவரை வணங்குகின்றனர்.


நேதாஜி உயிருடன் இருந்ததை அன்றே சொன்ன முத்துராமலிங்கத் தேவர்!



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் உயிரிழக்கவில்லை. அவர் உயிருடன் தான் இருக்கிறார். நானே அவருடன் பேசினேன். தொடர்பிலும் இருக்கிறேன் என்று மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1949ம் ஆண்டு கூறியதாக முன்னாள் பார்வர்ட் பிளாக் எம்.எல்.ஏ ஏ.ஆர். பெருமாள் தான் எழுதிய நூலில் தெரிவித்துள்ளார்.

நேதாஜி குறித்த 64 ஆவணங்களை மேற்கு வங்க அரசு சமீபத்தில் வெளியிட்டது. அதன் மூலம் 1945ம் ஆண்டு விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்படுவது தவறு, அந்த ஆண்டுக்குப் பிறகும் அவர் உயிருடன் இருந்தது உண்மை என்பது தெளிவாகியுள்ளது.

இருப்பினும் இதுகுறித்து மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில் 1945க்குப் பிறகும் நேதாஜி உயிருடன் இருந்தார் என்பதை மறைந்த முத்துராமலிங்கத் தேவரும் அப்போதே கூறியிருப்பதாக ஏ.ஆர்.பெருமாளின் நூல் வெளிப்படுத்துகிறது.

பொதுக் கூட்டத்தில் அறிவித்த தேவர்

1949ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியபோது, தேவர் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில் நேதாஜி மரணமடையவில்லை. அவர் உயிருடன்தான் இருக்கிறார் என்று கூறினார் தேவர்.

முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

பெருமாள் எழுதியுள்ள முடிசூடா மன்னர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற நூலில் இந்தத் தகவல் இடம் பெற்றுள்ளது. அதில் பெருமாள் கூறுகையில், தேவர் பேசுகையில், நேதாஜி நலமாக இருக்கிறார். பாதுகாப்பாக இருக்கிறார். நமது தலைவர் இறந்து விட்டதாக வந்த தகவல் பொய்யானது. அவர் இறக்கவில்லை. அவர் சரியான சமயத்தில் மக்கள் முன் தோன்றுவார். மேலும் நானும் அவருடன் நேரடித் தொடர்பில் இருந்து வருகிறேன் என்று கூறியிருந்தார் தேவர்.

நேதாஜியை நேசித்த தமிழர்கள்



நேதாஜி தோற்றுவித்த இந்திய தேசிய ராணுவத்தில் முதலில் போய்ச் சேர்ந்து அவரது கரத்தை வலுப்படுத்தியவர்கள் தமிழர்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக முக்குலத்தோர்தான் அதிக அளவில் சேர்ந்தனர். அதிலும் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், அப்போதைய பர்மா, சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களும் பெருமளவில் அதில் இணைந்தனர்.

போஸ்

முக்குலத்தோர் சமூகத்தில் போஸ் என்ற பெயர் கிட்டத்தட்ட குடும்பப் பெயராகவே மாறிப் போனது. போஸ் என்ற பெயர் இல்லாத முக்குலத்து குடும்பத்தைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு நேதாஜியை நேசிப்பவர்கள் அவர்கள்.

ஐஎன்ஏ வாரிசுகள் உற்சாகம் 



நேதாஜி விமான விபத்தில் மரணமடையவில்லை என்று தாங்கள் நம்பி வந்தது உண்மையாகியுள்ளதற்கு இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து செயலாற்றியவர்களின் வாரிசுகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து முன்னாள் ஐஎன்ஏ போராளி யோகானந்தத்தின் மகன் திருஞானம் கூறுகையில், எனது தந்தை சமீபத்தில்தான் மரணமடைந்தார். அவர் நேதாஜி குறித்து நிறையச் சொல்லியுள்ளார். இப்போது அந்த ஆவணங்களைக் காண நான் கொல்கத்தா செல்லவுள்ளேன் என்றார்.

தேவர் வீட்டில் தங்கியிருந்த நேதாஜி


மதுரையைச் சேர்ந்த தேசிய நேதாஜி சங்கத்தின் தலைவரான வி.சுவாமிநாதன் புதிய தகவல் ஒன்றைத் தருகிறார். அவர் கூறுகையில், 1945 விமான விபத்தில் நேதாஜி இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அதன் பின்னர் அவர் தமிழகத்திற்குத் தப்பி வந்தார். பின்னர் விருதுநகர் மாவட்டம் புளிச்சிகுளத்தில் உள்ள தேவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் சில காலம் தங்கியிருந்தார். பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கு பத்மநாபபுரம் அரண்மனையில் சில காலம் தங்கியிருந்தார் என்றார்.

தேவரும், நேதாஜியும்
1939ம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறிய நேதாஜி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியை தோற்றுவித்தார். நேராக சென்னை வந்த அவர் மெரீனா கடற்கரையில் நடந்த கூட்டத்தில் பேசினார். 1939ம் ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி நடந்த அந்தக் கூட்டத்தில்தான் தமிழகக் கிளையை அவர் தொடங்கினார். முத்துராமலிங்கத் தேவரை தலைவராக அறிவித்தார்.

தென்னகத்து போஸ்

தேவரை புகழ்ந்து பேசிய நேதாஜி, தென்னகத்து போஸ் தேவர் என்றும் புகழாரம் சூட்டினார். தேவரின் தலைமையில் தமிழகத்தில் பார்வர்ட் பிளாக் கட்சி பொலிவு பெற்றுத் திகழ்ந்தது.

மதுரை வந்த நேதாஜி
பின்னர் தேவரின் அழைப்பை ஏற்று மதுரைக்கு செப்டம்பர் 6ம் தேதி வந்தார் நேதாஜி. தேவருடைய வீட்டில் அன்று முழுவதும் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Thanks