Palm Tree - பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!
பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!
வரலாற்று சுவடுகள் !!!
பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்!
இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி முதல் நுனிவரை அனைத்தும் பயன்தருவதால், இன்றைய நவீனப் பார்வையில் இது பண மரம். யானையைப் போல் பனை இருந்தாலும் ஆயிரம் பொன்! வீழ்ந்தாலும் ஆயிரம் பொன்! “பனை மரத்துல அப்படி என்ன விசேஷம்…? பனைவெல்லம், பனங்கற்கண்டு, நுங்கு, பதநீர் இவ்வளவு தானே….!” என்றால் அது நம் அறியாமை. பனைமரத்துல 801-விதமான பொருட்கள், பலன்கள் கிடைக்குதுன்னு அன்றே பட்டியல் போட்டிருக்கார் திருக்குடந்தை அருணாச்சலபுலவர், ‘தலாவிருட்சம்’ என்ற நூலில்!
இன்னும் கொஞ்சம் விவரமாக இன்றைய நவீன விஞ்ஞானப் பார்வையில் பனையை ஆராய்ந்தால் இதில் ஆயிரம் பலன்களை அனுபவிக்கலாமோ என்று தோன்றுகிறது.
ஆனால், என்ன செய்வது? உள்ள பலன்களையே நமக்கு அனுபவிக்க பிராப்தமில்லை. ஏனெனில், பனையை அனுபவிக்க ஒரு பாரம்பரிய விவசாயத் தொழில் சார்ந்த அறிவு மற்றும் அனுபவத் தொடர்ச்சி வேண்டும்.
“அந்த காலத்துல விவசாயிகள் 90% பேருக்கு பனைமரம் ஏறுவது அத்துப்படியாயிருந்தது. அப்புறம் அதுக்கான ஆட்கள்னு உருவானார்கள். பிறகு பனைமரம் ஏறுவது கேவலமாக பாரத்த காலம் உருவானது. இப்ப அதுக்கும் ஆளில்லாமல் போனதால் எதுக்கும் பயன்பாடு இல்லாமல் பனை மரத்தை பட்டுப்போக விட்டுடறாங்க..” என்றார். உலகத்திலேயே அதிக பனை மரங்களைக் கொண்ட பூமி தமிழ் மண் தான்! இன்றைக்கு 100 க்கு மேற்பட்ட நாடுகளில் பனைமரங்கள் உள்ளன. ஏனெனில், இது ஆதிகாலத்து தாவரம். இதன் பூர்வீகம் தமிழகம். இதை தமிழர்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலெல்லாம் நட்டு வைத்து பரவலாக்கி பிரபலப்படுத்தினர்.
இப்போதும் இலங்கையில் பனை விவசாயத்திற்கு பிரதான முக்கியத்துவமுண்டு. இதற்காகவென்றே தனித்துறையை உருவாக்கி ஒரு அமைச்சரை நியமித்து செயல்படுமளவுக்கு சிறப்பான வருமானமும் பனைமர வளர்ப்பில் பார்த்து வருகிறது இலங்கை அரசு. பனங்கள்ளு, பதநீர் போன்றவை அங்கே முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை பானம். பனை மரத்திலிருந்து கிடைக்கும் இயற்கை பானம், பனை வெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கிலிருந்து உருவாக்கப்படும் சத்துமாவு, பனம் பருப்பு போன்றவை உள்நாட்டு சந்தையில் முக்கியத்துவம் கொண்டவை மட்டுமல்ல, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றது.
இதேபோல் நமது பக்கத்து மாநிலமான கேரளாவிலும் பனைமரத்துக்கு ஏக மவுசு தான்! இதற்கு பாரம்பரியத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பற்றே காரணம். பனை என்பது சேர வம்ச மன்னர்களால் போற்றப்பட்ட மரம். சேர மன்னர்கள் பனம் பூவை மாலையாக தங்கள் தோள்களில் அணிந்தார்கள்! இன்றைய மலையாளிகள் என்பவர்கள் ஆதிகாலத்தில் தமிழர்களாக அறியபட்டவர்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளாக தென் தமிழக மக்களின் வாழ்வாதாரமாகத் திகழ்ந்தவை பனை மரங்களே. தமிழனின் பிறப்பு தொடங்கி இறப்பு வரை, சமயச் சடங்குகள் தொடங்கி வீட்டு விசேஷங்கள் வரை, கல்வி தொடங்கி கலாச்சாரம் வரை பனைமரப் பண்பாடே எங்கும் எதிலும் வியாபித்திருந்தது.
தென் தமிழகத்தில் இன்னும் கூட இந்து சமய விழாக்களில் பனை ஒலைத் தோரணங்களும் அலங்காரங்களும் செய்யப்படுகின்றன. கிறிஸ்த்தவர்களின் ஞாயிறு குருத்தோலை விழாக்கள் இன்றும் பிரசித்தம்.
சங்க இலக்கியங்களும், ஐம்பெருங் காப்பியங்களும், தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களும், திருக்குறள் ஈறாக நாம் பெற்ற அனைத்து தமிழச் செல்வங்களும் பனைமர ஓலைச்சுவடிகளினால் தான். பனை இல்லையேல் நமக்கு மொழியில்லை, வரலாறில்லை, ஏன் பாரம்பரியமே இல்லை, என்பதை உணரும்போது மெய்சிலிர்க்கிறது.
அதனால் தான் தன் கடைசி நாட்களில் நம்மாழ்வார் பனை மர மீட்புக்கென்றே பாடுபட்டார். “பனைகாக்க நெடும் பயணம்” என அவர் கிராமம், கிராமமாக பலர் சூழச்சென்று பரப்புரை செய்தார்.
“பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும்
பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும்”
என்பதே அன்று நம்மாழ்வார் தலைமயில் திரண்ட விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வைத்த முழக்கம்.
ஒரு காலத்தில் நாம் பனை மரத்தால் பெற்ற பலன்களை பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. பிரபல சமூகவியல் ஆய்வறிஞர். ஆ.சிவசுப்பிரமணியன் “பனைமரமே பனைமரமே” என்ற நூலில் பனையின் அடிதொடங்கி நுனிவரை, ‘என்னென்ன பகுதிகள், என்னென்ன பலன்கள்’ என சுருக்கமாக தந்துள்ளார்.
1. குருத்தோலை ; தோரணங்கள், அழகுசாதனபொருட்கள்
2. சாரை ஓலை ; கூடை, பெட்டி, பாய், கைவினைப்பொருட்கள்
3. பச்சைமட்டை ; வேலி, நார், முறம், செருப்பு, காய்ந்த பின்பு எரிப்பொருள்
4. பனங்காய் ; நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு
5. பனை ஈர்க்கு ; சொளகு, இடியாப்பதட்டு, திருகணை
6. பாளை ; பதநீர், கள், பனைவெல்லம், கற்கண்டு
7. சில்லாட்டை ; பன்னாடை, எரிபொருள், துடைப்பம்
8. ஓலை ; கூரைவேய, மீன்பிடிவலை செய்ய, பதநீர், கஞ்சியை ஊற்றி குடிக்க, நிலத்தில் உவர்தன்மை நீக்கும் உரமாக, ஈர்க்கு எடுக்க, கலைப்பொருட்கள் செய்ய
9. உச்சிகொண்டை பகுதி ; மரத்தொட்டி செய்ய, பாசன குளங்களில் மடையாக
10. பத்தைமட்டை ; தட்டி அடிக்க, தரைதேய்க்கும் பிரஷ்ஷாக
11. நடுமரம் ; வீடுகட்டும் விட்டமாக, உத்திரமாக ஏற்றம் அமைக்க, மாட்டுவண்டிகட்ட
12. அடிமரம் ; வட்ட வடிவிலான நீர்தொட்டி
இதையும் கடந்து நிறைய சொல்லலாம். அந்த காலத்தில் அரிசி மற்றும் தானியங்களை இடிக்கும் உலக்கை பனை மரத்திலிருந்து செய்யப்பட்டதே! கப்பல் கட்டவும், பாலங்கள் அமைக்கவும் பனைமரங்கள் பயன்படுகின்றன. பனைமர ஓலைகளில் செய்யப்படும் கைவினை கலை ப்பொருட்களை பட்டியலிட்டாலே அவை 100 ஐ கடக்கும்.
ஆக பனை மரத்தைப் போல பயன்பாடுள்ள இன்னொரு மரத்தை சொல்ல முடியாது. இதனால் தான் இதனை நம் முன்னோர் பல சிவத் தளங்களில் தல விருட்சமாக அடையாளப்படுத்தியுள்ளனர். கற்பகத்தரு என்றனர்.
பரசுராமரின் தோளில் கலப்பையும், கையில் பனை மரக் கொடியும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?
ஆற்றங்கரைகளிலும், குளங்களின் மேற்பரப்பிலும், கடற்கரை மணற்பாங்கான இடங்களிலும் சாரிசாரியாக பனைமரங்களை நம் முன்னோர்கள் நட்டு வைத்தார்கள். காரணம், பனைமர வேர்கள் மண் அரிப்பை தடுக்கும்! 100 அடிகளுக்கும் கீழே சென்று தண்ணீர் வளத்தை அரணாகக் காக்கும்.
இயற்கைச் சூழலை பாதுகாக்க, பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு அரணாக உலக அளவில் சூழிலியாளர்கள் பனைமரத்திற்கே முதலிடம் தருகிறார்கள்.
ஏனெனில், பனை மரத்தடியில் பூச்சிகள், கூட்டுப்புழுக்கள் அடைக்கலமாகும். பனை மரக் கிளையில் தூக்கணாங் குருவிகள் கூடுகட்டும், பனைமரத்தில் தொங்கும் வௌவால்கள் கணக்கிடலடங்கா கொசுக்களை கவ்வி விழுங்கும், இன்னும் மைனாக்கள், ஆந்தைகள், வானம்பாடிகள், பருந்துகள் என பனைமரத்தை புகழிடமாக கொண்ட பறவையினங்கள் பற்பல. இன்றைக்கு நாம் பனைமரத்தை காக்க தவறியதால் இந்தப் பல்லூயிர்களையும் சேர்த்தே இழந்து கொண்டிருக்கிறோம்.
சுதந்திரம் பெற்றபோது அன்றைய விரிந்து பரந்த தென்னகத்தில் சுமார் 30 கோடி பனைமரங்கள் இருந்தன. இன்றைய தமிழகத்தில் அதிகபட்சம் மூன்றரைக் கோடி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அன்றைக்கு பனைமரம் பல லட்சம் விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும், பல லட்சம் அற்புதமான கைவினை கலைஞர்களுக்கும் வாழ்வு தந்தன. ஏன் மன்னர்கள் பலரும், ஆங்கிலேயர்களும் இதன் வருமானத்தில் வரி வாங்கி ஆட்சி செய்துள்ளனர். நெடுங்காலமாக நம் முன்னோர் பருகிய பானங்கள் அனைத்தும் பனைவெல்ல சுவையன்றி வேறல்ல! – காபி, தேநீர் உட்பட பனைவெல்லம் சேர்த்தே பருகப்பட்டன. அன்று வெள்ளைச்சீனி கிலோ 6 ரூபாய்க்கு விற்ற காலத்தில் பனைவெல்லம் கிலோ 3 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால், இன்று பனைவெல்லம் அரிதாகி விட்டதால் ரூ 300 தந்து வாங்க வேண்டியதாகிவிட்டது.
பனைவெல்லத்தில் அதிகமான கால்சியம், இரும்பு, மெக்னீசியம், விட்டமின்கள் உள்ளன. எலும்பிற்கு பலம், உடலுக்கு குளிர்ச்சி, மொத்தத்தில் ஆரோக்கியம். ஆனால் வெள்ளைச் சீனியோ சல்பர்டை ஆக்சைடு, சோடியம் ஹைட்ரோசல்பேட், பாலிஎலக்ரோலைட், பாஸ்போரிக் ஆசிட், பிளிச்சிங் பவுடர் போன்றவை சேர்கப்பட்ட நச்சு. சக்கரைவியாதி தொடங்கி சகலவியாதிகளுக்குமான மூலக்கூறு.
ஆனால், பனைவெல்லம் பயன்பாடு படிப்படியாக மட்டுப்படுத்தப்பட்டு, வெள்ளைச்சீனி பயன்பாடு திட்டமிட்டு வளர்க்கப்பட்டது. கரும்பிலிருந்து கிடைக்கும் மொலாசஸ் மதுபான உற்பத்திக்கு ஆதாரமாக இருக்கிறது. இன்றைக்கு தமிழகத்தில் டாஸ்மாக் மது ஆறாக பெருக்கெடுத்து ஓடுவதன் பின்னணியோடு பனைமரப் பயன்பாட்டிற்கு வைக்கப்பட்ட தடைகளை புரிந்து கொள்ள வேண்டும்.
மதுபான வியாபாரிகள், மதுபான உற்பத்தியாளர்கள், இவர்களால் ஆதாயம் பெரும் அதிகாரவர்க்கத்தினர் பனைமரத்தை பகையாக பார்த்தனர். பனை மரத்திலேறி பதநீர் இறக்கிய தொழிலாளர்கள் கூட கள் இறக்கியதாக கைது செய்யப்பட்ட சம்பவங்கள் அநேகம். இந்த அவமானங்களை தாங்க முடியாமல் பனைமரம் ஏறும் தொழிலை கைவிட்டனர் பலர்.
சகித்து கொண்டு பணி செய்த பனை ஏறி தொழிலாளிகளும் தங்கள் அடுத்த தலைமுறையை இத்தொழிலுக்கு தர மனம் ஒப்பவில்லை. விளைவு பனைமரம் ஏறும் கலையை கற்றவர்கள் மிகவும் அரிதாகிவிட்டனர்.
பனைமரங்கள் இருந்தும் அதன் பலனை அறுவடைசெய்யவோ, பயனடையவோ வாய்ப்பற்ற நிலையில் பல ஊர்களிலும் இன்று பனைமரத்தை செங்கல் சூளைகளுக்கு பலிகடாவாக்கி கொண்டுள்ளனர் மக்கள்.
கொங்கு மண்டலத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பனைமரங்கள் வீழ்த்தப்பட்டு செங்கற்சூலைகளுக்கு போகின்றன. இராமநாதபுரத்தில் 2 கோடிக்கு மேற்பட்ட பனைமரங்களும், பனைசார்ந்த தொழில்களும் செழித்தோங்கிய காலம் ஒன்றிருந்தது. வானம் பார்த்த பூமியான வறட்சி மாவட்ட விவசாயிகளுக்கு பனை மரமே வாழ்வு தந்தது.
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துகுடி மாவட்டங்களில் பனைமரங்கள் பூத்துகுலுங்கிய இடங்களிலெல்லாம் இன்று ரப்பர் தோட்டங்களும், கற்றாலைகளும் காணக்கிடைக்கின்றன. இந்தப் பகுதியில் பனை ஓலைகளைக் கொண்டு கண்கவர் அழகுப் பொருட்களை செய்த அந்த எண்ணற்ற எளிய கைவினைஞர்கள் – அற்புதமான கலைஞர்கள் – ஆதரிப்பாரின்றி வேறு, வேறு தொழில்களுக்கு சென்றுவிட்டனர். ஆயினும் கோயில் திருவிழாக்களில் இன்றும் விற்கப்படும் பனை ஓலை அழகுப் பொருட்கள், திருவிழா அலங்காரங்களைக் கொண்டு, “அடடா இந்த கலைகளும், கலைஞர்களும் இப்போதும் எஞ்சியிருக்கிறார்களே” என்று சந்தோசம் ஏற்படுகிறது.
‘பனங்கள்’ என்பதை ஒரு ஆபத்தாக அடையாளப்படுத்தியதால் பனைமரத்தின் ஓட்டுமொத்தப் பயன்பாடுமே இல்லா தொழிக்கப்படும் அவலம் இன்னும் தொடரத்தான் வேண்டுமா? பன்நெடுங்காலமாக பனங்கள் என்பது பல நோய்களுக்கு தீர்வாக இயற்கை மருத்துவத்தால் அணுகப்பட்டுள்ளது. இதற்கு சங்க இலக்கியங்கள் தொடங்கி சமீபகால பெரியார் எழுத்துக்கள் வரை எண்ணற்ற ஆதாரங்களை காட்டலாம்.
பனைமரங்கள் உள்ள நமது பக்கத்து மாநிலங்களிலும் சரி, பனைமரங்கள் தழைத்தோங்கும் 108 நாடுகளிலும் சரி பனையிலிருந்து கிடைக்கும் பானத்திற்கு தடையில்லை. அதை இயற்கை பானமாகத்தான் அங்கீகரித்துள்ளனர். நமது இந்திய அரசின் அரசியலமைப்புச் சட்டப்படியுமே கூட பனையிலிருந்து கிடைக்கும் இயற்கையான பானம், உணவாகத்தான் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
நமது பாரம்பரியத்திலுமே கூட பனங்கள் என்பதை மன்னர்களும், புலவர்களும், அரசபடையினரும், குடியானவர்களும் சாப்பிடும் வழக்கம் இயல்பானதாகவே பார்க்கப்பட்டுள்ளது.
பனைமரத்திலிருந்து எடுக்கப்பட்ட பானத்தை நான்கு மணி நேரத்திற்குள் பருகிவிட்டால் அது தேவாமிர்தம் அல்லது ஊட்டசத்துமிக்க அருமருந்தென்றே சொல்லலாம். நான்கு மணி நேரத்திற்குப் பிறகு அது மெல்ல, மெல்ல புளிக்கத் தொடங்கும். புளிப்பின் வீரியம் கூடினால் அதில் போதையின் அம்சம் ஏற்பட்டுவிடுகிறது. இது உடலுக்கு கேடல்ல. ஆனால், அளவுக்கு மீறும் போதோ, அல்லது பனங்கள்ளோடு விரும்பத்தாகவற்றை போதை ஏறுவதற்காக சேர்ப்பதாலோ தான் பிரச்சினை ஏற்படுகிறது.
பனங்கள் புளிக்காமல் இருக்க சுண்ணாம்பு சேர்த்தால் அது உடலுக்கு ஊட்டசத்தாகும் பதநீராகிவிடும். இன்றைய கேடுகெட்ட பன்னாட்டு குளிர்பானங்களுக்கு சிறந்த மாற்றாக இதை பிரபலப்படுத்தினாலே போதும் இந்தியாவில் ரூ 1000 கோடி அளவுக்கு இதற்கொரு சந்தையை உருவாக்க முடியும். டாஸ்மாக் மதுவில் கிடைக்கும் வருமானத்தை விடவும் அதிக வருமானத்தை இது அரசுக்கு ஏற்படுத்தி தரும். அனைத்து பள்ளி, கல்லூரி, வர்த்தக நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், பெட்டிகடைகள்… என எங்கெங்கும் பதநீர் விற்பனை செய்யபட வேண்டும். இதனால் லட்சோபலட்சம் விவசாயிகளும், விவசாயக்கூலிகளும், வியாபாரிகளும் பயன்பெறுவார்கள்.
மதுவை அரசாங்கமே விற்கலாம் என்று நியாயப்படுத்தப்பட்டுள்ள இந்தக்காலத்தில், அது ஏன் ஆல்கஹால் அதிகமுள்ள அயல்நாட்டு பாணி மதுவாக மட்டும் இருக்கவேண்டும்? என்பது தான் தமிழ்நாட்டில் பாரம்பரியமாக பனை விவசாயத்தில் ஈடுபட்டு வரும் பல லட்சம் விவசாயிகள் மற்றும் பனையேறி தொழிலாளர்களின் கேள்வியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் பனை மீட்பை ஒரு இயக்கமாக, பிரச்சாரமாக பல இயக்கங்கள் செய்து வருகின்றன.
குறிப்பாக நல்லசாமி தலைமையிலான விவசாயசங்கம் இதற்காக தொடர்ந்து இடையறாது போராடி வருகிறது. இதுபோல திருவண்ணாமலை கூக்கூ அமைப்பு, திருநெல்வேலி சிட்டுகுருவி பாதுகாப்பு இயக்கம், பூவலகின் நண்பர்கள், நம்மாழ்வாரை பின்பற்றும் சூழலியலாளர்கள், அமைப்புகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆங்காங்கே பனை விதைகளை நட்டு வருகின்றனர். ஜல்லிகட்டுக்கு இளைஞர் படை திரண்டது போல பனை மீட்புக்கும் அதைவிட வீரியமாக எதிர்காலத்தில் திரளக்கூடும். தமிழக அரசாங்கத்தின் தேசிய மரமாக பனைமரம் உள்ளது. வெறும் பெயரளவுக்கு இருந்தால் போதுமா?
பனங்கள்ளை பாதுகாப்பு அரண்களோடு அரசே இறக்கி, பதப்படுத்தி விற்பனை செய்யுமானால் – அது முறைப்படுத்தப்பட்ட தொழிலாக அங்கீகாரம் பெறும் எனில், அது தமிழ்நாட்டின் விவசாயத்திற்கும், பனைசார்ந்த தொழில் வளர்ச்சிகளுக்கும் பெரும் பொருளாதார வளம் சேர்க்கும். அத்துடன் பனை விவசாய மீட்பும், பனைசார் தொழில்கள் மீட்பும் நம் பாரம்பரிய மீட்போடு தொடர்புடையது. நமது பாரம்பரியத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதோடு சம்பந்தப்பட்டது.
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks