வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம், தமிழக அரசு உத்தரவு: PCR Test
வெளிமாநிலங்களில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களுக்கு பி.சி.ஆர். சோதனை கட்டாயம், தமிழக அரசு உத்தரவு:
விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று தமிழக அரசு வெளியிட்டது. அதில் மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்தும்,வெளிநாடுகளில் இருந்தும் தமிழகம் வருவோருக்கு விமான நிலையத்தில் ஆர்டி-பிசிஆர் ((RT - PCR)) பரிசோதனை கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
விமான பயணிகள் தொடர்பாக தமிழக அரசு இன்று நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது. தமிழகத்துக்குள் விமானங்களில் பயணிப்போர், பிற மாநிலங்களில் இருந்து வருவோர், வெளிநாடுகளில் இருந்து திரும்புவோர் என தனித்தனியாக அதில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.
தமிழகத்துக்குள் விமான பயணம் மேற்கொள்வோருக்கான வழிகாட்டுதலில், விமானம் ஏறுவதற்கு முன்பு, தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படுவர், அதில் அறிகுறிகள் இருந்தால் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள்,விமான பயணத்துக்கு முன்பு தமிழக அரசிடம் இ-பாஸ் விண்ணப்பித்து பெற்றிருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு பயணிப்போருக்கு பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும் எனவும், இதேபோல் வர்த்தக பயணமாக சென்று 48 மணி நேரத்துக்குள் திரும்பி வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கான வழிகாட்டுதலில், மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து வருவோருக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டாயம், அதேநேரத்தில் 2 நாள்களுக்குள் ஐசிஎம்ஆர் சோதனை நடத்தி வழங்கிய சான்றை அவர்கள் அளித்தால் பரிசோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்டி பிசிஆர் பரிசோதனையில் கொரோனா இருந்தால் மருத்துவமனையில் சேர்க்கப்படுவர், இல்லையேல் 7 நாள்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கான வழிகாட்டுதலில், அனைவருக்கும் ஆர்டி - பிசிஆர் பரிசோதனை கட்டாயம், அதன்பிறகு 7 நாள்கள் கட்டண மையத்தில் தனிமைப்படுத்தப்படுவர், பரிசோதனையில் கொரோனா இருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவர், இல்லையென்றாலும் மையங்களில் 7 நாள் தனிமைக்குப் பிறகு மீண்டும் பரிசோதனை நடத்தப்படும் எனவும், அதில் இல்லையென்று முடிவு வந்தாலும், வீட்டிலோ அல்லது வீட்டில் இடவசதி இல்லையென்றால் கட்டண மையத்திலோ 7 நாள் தனிமைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து தனிநபர்களுக்கும் விமான நிலையத்தில் அழியாத மை கொண்டு முத்திரையிடப்படும் எனவும் அதில் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
www.nmsfriendsassociation.blogspot.com
No comments
Thanks