Breaking News - தெலுங்கானா முதல்வரை காணவில்லை: ஐகோர்ட்டில் வழக்கு
தெலுங்கானா முதல்வரை காணவில்லை:
ஐகோர்ட்டில் வழக்கு
09.07.2020
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் 10 நாட்களாக எங்கிருக்கிறார் என தெரியாததால் அவர் குறித்த தகவல்களை வெளியிட மாநில அரசுக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஆட்சியில் உள்ளது.
இங்கு சந்திரசேகர ராவ் 10 நாட்களாக ஐதராபாத்தில் இல்லை என கூறி அரசியல் ஆர்வலர் நவீன் குமார் மாநில உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:முதல்வர் 25ம் தேதி 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மரம் வளர்க்கும் திட்ட நிகழ்ச்சி மற்றும் 28ல் நடைபெற்ற முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சிகளில் முக கவசம் அணியாமல் பங்கேற்றார்.
அதன்பிறகு 10 நாட்களாக முதல்வர் குறித்த எவ்வித தகவலும் இல்லை. பொது நிகழ்ச்சிகள் மட்டுமின்றி அவரது நடவடிக்கைகள் குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை.
முதல்வரின் அரசு இல்லத்தில் 30க்கும் மேற்பட்டோர் வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் முதல்வரின் உடல்நிலை குறித்த கவலை ஏற்பட்டுள்ளது. அவர் எங்கு என்ன நிலையில் இருக்கிறார் என அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.எனவே தற்போது முதல்வர் இருக்குமிடம் அவரது உடல்நிலை குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மாநில நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை விட அதிகம்
தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் கூடுதல் மழை பெய்துள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், புவியரசன் அளித்த பேட்டி:கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், இன்று லேசான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புஉள்ளது.
சென்னையின் சில பகுதிகளில், லேசானது முதல், மிதமானது வரை மழை பெய்யும்.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், புதுக்கோட்டை, 9; ஊத்துக்கோட்டை, கடையநல்லுார், 8; பண்ருட்டி, தியாகதுருகம், 7; பள்ளிப்பட்டு, 6; திருவாலங்காடு, அரிமளம், காவேரிப்பாக்கம், வளவனுார், 5; காஞ்சிபுரம், திருச்செங்கோடு, 4 செ.மீ., மழை பெய்துள்ளது.தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல், கேரளா, லட்சத்தீவு, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில், மணிக்கு, 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். இந்த பகுதிகளுக்கு, நாளை மறுநாள் வரை மீனவர்கள் செல்ல வேண்டாம்.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை, ஜூன், 1 முதல் ஜூலை, 7 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்தில் இயல்பான அளவை விட, 11 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது. புதுச்சேரியில், 30 சதவீதம் மழை குறைந்துள்ளது.திருநெல்வேலி, 60; சென்னை, 49; கடலுார், 38; நாமக்கல், திருவள்ளூர், 25; துாத்துக்குடி மாவட்டங்களில், 36 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. கரூர், 247; பெரம்பலுார், 118; ராமநாதபுரம், 204; சிவகங்கை, 48; திருச்சி, 76; புதுக்கோட்டை, 104;, திண்டுக்கல் மாவட்டங்களில், 78 சதவீதம் அதிக மழை பெய்துஉள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 61 ஆயிரம் பேருக்கு கொரோனா
வாஷிங்டன்,
சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்திற்கும் மேலாக உள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
நேற்று ஒரு நாளில் மட்டும் அமெரிக்காவில் 61,647 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் நேற்று ஒருநாளில் 890 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,58,731-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 134,853 ஆக உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரும் மாகாணங்களான டெக்ஸாஸ், கலிபோர்னியாவில் கொரோனா தொற்று அதிகமாகக் காணப்படுகிறது.
சுபம்
No comments
Thanks