கோடையில் ஒரு குளு குளு சுற்றுலா மாத்தூர் தொட்டிப்பாலம் - Mathoor Thottipalam
கோடையில் ஒரு குளு குளு சுற்றுலா மாத்தூர் தொட்டிப்பாலம்
Mathoor Thottipalam
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் உள்ளது தொட்டிப் பாலம். இந்த பாலம் திருவட்டாறு அருகே இருக்கிறது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான பாலமாகவும் கருதப்படுகிறது. இந்த பாலம் பாரலீ நதியின் மீது கட்டப்பட்டு இருக்கின்றது. திருவட்டாறு அருகே இருக்கும் தொட்டிப் பாலம் சுற்றுலாத் தலங்களை கவரும் வண்ணமாக இருக்கின்றன.
திருவட்டாறு அருகே உள்ள மாத்தூர் என்னும் சிறிய கிராமத்தின் பெயரை இந்த பாலத்திற்கு சூட்டி இருக்கிறார்கள். வறட்சியிலிருந்து தப்பிக்கவும் விவசாயத்துக்குப் பயன்படுத்தவும் கட்டப்பட்டது மாத்தூர் தொட்டிப் பாலம். இதைத் தொங்கும் கால்வாய் என்றும் தொட்டில் பாலம் என்றும் கூட அழைக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
ஒரு காலத்தில் மலைப்பாங்கான காடுகளாகவிருந்த கணியான் பாறையென்ற மலையையும் கூட்டு வாயுப் பாறையென்ற மலையையும் இணைத்து, பறளியாற்று நீரைக் கொண்டு செல்வதற்காக அவ்விரு மலைகளுக்கும் நடுவே இப்பாலம் அமைந்துள்ளது.அப்பகுதிகளுக்கான நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்தினால் விவசாயம் செழித்து வளங்கொழிக்கும் பிரதேசங்களாக அப்பிரதேசங்கள் மாறுமென எண்ணிய பெருந்தலைவர் காமராஜரின் முயற்சியால் 1969 ம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது இந்த மாத்தூர் தொட்டிப் பாலமாகும். படிக்காத மேதை எனப் போற்றப்படும் காமராஜர் போன்ற நாட்டு நலனில் அக்கறையுள்ள பெருந் தலைவர்கள் இன்று கிடைத்திருந்தால் இந்திய தேசம் உலகுக்கு ஒரு முன்னோடி நாடாக இன்று இருந்திருக்கும்.
32 அடி சுற்றளவு கொண்டது. நீங்கள் என்றும் காணாத அளவிற்கு இந்தப் பாலம் வழியாகத் தண்ணீர், ஒரு மலையிலிருந்து மற்றொரு மலைக்கு எடுத்து செல்லப்படுகிறது. கால்வாய் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கத்தில் கால்வாய் மேல் கான்கிரீட் பலகைகள் போடப்பட்டுள்ளதால், மக்கள் அந்தக் கால்வாய் மீது நடந்து செல்கிறார்கள். தண்ணீர் செல்லும் பகுதியில் பெரிய பெரிய தொட்டிகளாகக் கட்டப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு தொட்டியும் ஏழு அடி அகலமும் ஏழு அடி உயரமும் உள்ளது. இரு மலைகளுக்கு இடையே தொட்டில் போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருப்பதால், இது தொட்டில் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.
அணையிலிருந்து வரும் நீர் முதலில் மாத்தூர் பாலத்திற்கும் அதன்பின் செங்கோடி மற்றும் வடக்குநாட்டுப் பாலங்கள் வழியாக தேங்காய்ப்பட்டணம் கிராமத்திற்கும் செல்கின்றது. மாத்தூர் தொட்டிப் பாலம் வழியாகக் கொண்டுசெல்லப்படும் நீர் கன்னியாகுமரி மாவட்டத்தின் கல்குளம், விளவங்கோடு ஆகிய இரு வட்டங்களில் உள்ள ஊர் மக்களுக்கும், இரு வட்டங்களில் உள்ள விவசாய நிலங்களின் நீர்பாசனத்துக்குப் பயன்படுகிறது.
மாத்தூர் தொட்டிப் பாலத்தால் பல ஹெக்டேர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. குறிப்பாக தரிசு நிலங்களை, விவசாய நிலங்களாக மாற்றியப் பெருமை மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு உண்டு.
வெறும் மூன்று அடி அகலத்தை மட்டுமேயுடைய ஒடுங்கிய மேற்பகுதியில பாலத்தின் ஒரு முனையில் இருந்து மறு முனைக்கு செல்லமுடியும். இரு மலைகளுக்குமிடையே அடர்ந்து காணப்படும் தென்னை, இரப்பர் மரங்கள், நீல வானம், சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் ஆறு என இயற்கை அன்னையின் அருட்கொடைகள் யாவும் ஒருங்கே தெரியும் காட்சியை விபரிக்க எவரிடமும் வார்த்தைகளிருக்காது. பாலத்தின் மேற்பகுதியில் நடப்போரின் பாதுகாப்புக் கருதி, நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டாலும் நில மட்டத்திலிருந்து நாம் நிற்கும் உயரத்தைக் எட்டி பார்க்கும் போது, நமது கட்டுப்பாடின்றி கால்கள் உதறத் தொடங்குவதைத் தடுக்க முடியாமல் போவதையும் கையிலிருக்கும் பொருட்கள் விழுந்துவிடுமோ என கை தன்பாட்டிலேயே அவற்றை இறுகப் பற்றிப் பிடிப்பதையும் உணரலாம். அனுபவித்த எவரும் அதை மறுக்கமாட்டார்கள்.
இப்போது ஒரு புகழ்பெற்ற தென்னிந்திய சுற்றுலா தலமாக மாறிவிட்டது மாத்தூர் தொட்டிப் பாலம். இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தை சுற்றி இருக்கும் இடங்கள் ஆண்டு முழுவது சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணமாக இருக்கிறது. பாலத்தின் மேல் நின்று பார்க்கும் போது விளைநிலங்களையும், மேற்கத்திய மலைத்தொடர்களையும், தென்னை, ரப்பர், வாழை மரங்களும், நெல் வயல்களும் கண்களுக்கு விருந்தாக இருக்கின்றன. எங்கு நோக்கினாலும் பசுமையாகவே காணப்படுகிறது. பாலத்திலிருந்து இறங்க படிகள் உள்ளன. அருகில் குழந்தைகள் விளையாட ஒரு சிறிய பூங்காவும் இருக்கின்றன.
தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் மிகச் சிறந்த சுற்றுலாத்தலமான இந்த மாத்தூர் தொட்டிப் பாலத்தை தமிழக அரசு மேலும் பொலிவுடன் பேணி பரமரிக்க வேண்டும் என்று மக்களின் சார்பில் வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.
இந்நேரத்தில் இந்த பாலம் கட்டி தந்த
கர்ம வீரர் காமராஜர் ஐயா அவர்களுக்கு எங்கள் நன்றியை சமர்ப்பணம் செய்கிறோம்.
www.nmsfriendsassociation.blogspot.com





No comments
Thanks