Advertisement

Breaking News

Tourist Place of Kanniyakumari District -கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுற்றுலா தளங்கள் 



விவேகானந்தர் பாறை




 கன்னியாகுமரியில் கடல் நடுவில் உள்ள ஒரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் உள்ளது. இங்கு படகில் செல்ல வேண்டும். அலைகள் நிறைந்த கன்னியாகுமரி கடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் அனுபவம் ஆகும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் போக்குவரத்துக்கழகம் இந்த படகு சர்வீசை நடத்துகிறது. லாட்ஜ்களில் ரூ.200 முதல் ரூ.ஆயிரம் வரையிலான கட்டணத்தில் அறைகள் உள்ளது.
படகு கட்டணம் - ரூ.20, விவேகானந்தர் மண்டப நுழைவு கட்டணம் - ரூ.10. பள்ளி மாணவர்கள் அத்தாட்சி கடிதத்துடன் வந்தால் படகு கட்டணம் பத்து ரூபாயும், மண்டப நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. மண்டபத்திலுள்ள தியான அறையில் சற்று நேரம் அமர்ந்தால் மனஅமைதி கிடைக்கும். மண்டபத்தில் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் தொடர்பான பயனுள்ள புத்தகங்கள் கிடைக்கும்.

காந்தி மண்டபம்



 முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது. காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய ஒளி விழும். இங்கு பயணிகள் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. செசருப்பு பாதுகாக்க மட்டும் 50 பைசா கட்டணம்.
காந்தி மண்டபம் அருகே காமராஜர் மணி மண்டபம் உள்ளது. கன்னியாகுமரியில் சிப்பியால் செய்யப்பட்ட அலங்கார சாமான்கள் விசேஷம். ரூ.10 முதல் ரூ.500 வரை கிடைக்கும். இங்குள்ள சங்கிலி மண்டபத்தில் பயணிகள் பாதுகாப்பாக குளிக்கலாம். இந்த இடத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செசய்யலாம். குமரியிலுள்ள பகவதி அம்மன் கோயில் மிகவும் விசேஷமானது. இதன் கிழக்கு வாசசல் அடைக்கப்பட்டு, வடக்கு வாசல் திறந்திருக்கும். அம்பிகையின் மூக்குத்தி ஒளி கண்ணைப் பறிக்கும்.

பத்மனாபபுரம் அரண்மனை



 கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் செல்லும் வழியில் தக்கலை அருகே 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த அரண்மனை அமைந்துள்ளது. திருவிதாங்கூர் மன்னர்கள் கட்டிய இந்த அரண்மனை முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும்.
பழங்கால மன்னர் மற்றும் வாழ்க்கை முறையை படம் பிடித்து காட்டும் வகையில் இந்த அரண்மனை அமைந்துள்ளது. இங்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 50 கட்டணம் ஐந்து முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ரூ.10 வசூலிக்கப்படுகிறது. தக்கலையில் ரூ.150 முதல் வாடகை உள்ள லாட்ஜ்கள் உள்ளன.

மாத்தூர் தொட்டிப்பாலம்



திற்பரப்பில் இருந்து திருவட்டார் வந்த பின்னர் மாத்தூர் என்ற கிராமத்துக்கு செல்லும் ரோட்டில் தொட்டிப்பாலம் உள்ளது. ஆற்றுக்கு மேல், கால்வாய் விவசாயத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாய் இதிலுள்ளது விசேஷ அம்சம்.
ஆசியாவிலேயே இரண்டாவது நீள பாலம். அடிக்கடி சினிமா படப்பிடிப்பு நடக்கிறது. 1240 அடி நீளமும், 103 அடி உயரமும் கொண்ட இந்த பாலம் 29 பில்லர்களை தாங்கி நிற்கிறது. இதன் மீது நின்று பார்த்தால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை பசேலென காட்சி தரும். கட்டணம் கிடையாது. இங்கு தங்கும் வசதி இல்லை. அருகிலுள்ள மார்த்தாண்டத்தில் தங்குவதற்கு லாட்ஜ்கள் உள்ளன. மேலும், 18 அடி உயரமுடைய அனுமான் மற்றும் பெண் விநாயகர் சிற்பம் கொண்ட சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில், பாம்பை மூலவராகக் கொண்ட நாகர்கோவில் நாகராஜா கோயில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் ஆகியவை பிரசித்தி பெற்ற இடங்கள் ஆகும்.

திற்பரப்பு அருவி



பத்மனாபபுரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் திற்பரப்பு அருவி உள்ளது. கோடை காலத்திலும் சிறிதாவது தண்ணீர் கொட்டுவது இதன் சிறப்பம்சமாகும். இங்கு சிறுவர்கள் குளிக்க வசசதியாக சிறிய நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது. இயற்கையான சூழ்நிலையில் இந்த அருவி அமைந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.2. வீடியோ கேமரா கட்டணமாக ரூ.75-ம், போட்டோ கேமரா கட்டணமாக ரூ.5-ம் வசூலிக்கப்படுகிறது. இங்குள்ள லாட்ஜ்களில் ரூ.150 முதல் ரூ.300 வரை வாடகை வசூலிக்கப்படுறது.

பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்கா



கன்னியாகுமரி - கோவளம் சாலையில் 2 கி.மீ. தொலைவில் இந்த பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. இங்கு பல்வேறு நீர் விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை பூங்கா திறந்திருக்கும். பெரியவர்களுக்கு 240 ரூபாயும், சிறியவர்களுக்கு 180 ரூபாயும், வயதானவர்களுக்கு 120 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் மெழுகு பொம்மை அருங்காட்சியகம் கன்னியாகுமரியில் உள்ளது. பே வாட்ச் பொழுதுபோக்கு பூங்காவினுள் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவருவதாக அமைந்துள்ளது.

குகநாதசுவாமி கோயில்




ஆயிரம் ஆண்டு பழமையான இந்த கோயில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டதாகும். சோழர்களின் கட்டடகலை இந்த கோயிலில் பிரதிபலிக்கிறது. ரயில் நிலையத்திற்கு மிக அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது.

காமராஜர் நினைவகம்



காந்தி மண்டபத்திற்கு அருகில் பெருந்தலைவர் காமராஜர் நினைவு மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் 02-10-2000ல் நிறுவப்பட்டது.

அரசு அருங்காட்சியகம்



கடற்கரை சாலையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் சிற்பக்கலையை பிரதிபலிக்கும் அரிய சிலைகள், பழங்கால பொருட்கள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

அரசு பழ பண்ணை



கன்னியாகுமரியில் இருந்து 2 கி.மீ தொலைவில் நாகர்கோவில் சாலையில் அரசு பழ பண்ணை அமைந்துள்ளது. பல வகையான பழமரங்கள் மற்றும் செடிகள் இங்கு உள்ளன. திறந்திருக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 11 மணி வரை. மதியம் 1 மணி முதல் 3 மணி வரை. விடுமுறை : சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.

ஜீவானந்தம் மணி மண்டபம்



மார்க்சிஸ்ட் கட்சி தமிழகத்தில் பரவ காரணமானவர்களில் இவரும் முக்கியமானவராவார். 1957ம் ஆண்டு சென்னை வண்ணாரபேட்டை எம்.எல்.ஏ., ஆக இருந்தவர். 1998ம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி நாகர்கோவிலில் அவருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. அவரது உருவசிலை மற்றும் புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்புகள் இங்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

குமரி பகவதிஅம்மன் கோயில்



கன்னியாகுமரி கடற்கரையில் குமரி பகவதிஅம்மன் கோயில் அமைந்துள்ளது. சிவனுடன் நடைபெற இருந்த திருமணம் தடைபட்டதால் அம்மன் இங்கு கன்னியாக கோயில் கொண்டுள்ளாள். அம்மன் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். கடலில் இருந்து பார்த்தாலும் பிரகாசமாக தெரியும்.

கேரளாபுரம்



கேரளபுரம் தக்கலைக்கு அருகில் உள்ளது. இங்குள்ள கோயிலில் உள்ள விநாயகர் சிலை நிறம் மாறும் தன்மையுடையதாக உள்ளது. ஆறுமாத காலம் கருப்பாகவும், அடுத்த ஆறுமாத காலம் வெள்ளையாகவும் சிலை காட்சியளிக்கிறது.

மருந்துவாழ் மலை



கன்னியாகுமரியில் இருந்து 7 கி.மீ தொலைவில் மருந்துவாழ் மலை உள்ளது. இந்த மலை மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இதன் உயரம் 800 அடியாகும். ஹனுமான், லட்சுமணனுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மூலிகைக்காக மகேந்திர கிரியில் இருந்து இலங்கைக்கு சஞ்சீவி மலையை கொண்டு சென்ற போது கீழே விழுந்த சிறு துண்டு தான் மருத்துவமலை என கூறுகின்றனர். இந்த மலையில் பல்வேறு மூலிகைகள் கிடைக்கிறது.

முருகன் குன்றம்




கன்னியாகுமரியில் இருந்து 3 கி.மீ தொலைவில் முருகன் குன்றம் அமைந்துள்ளது. மிகவும் அமைதியான இந்த இடத்தில் சித்ரா பவுர்ணமி அன்று மக்கள் கூடுவர். மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் : மிகவும் எளிமையாக கேரள பாரம்பரிய முறையில் பகவதி அம்மன் கோயில் கட்டப்பட்டுள்ளது. இதன் மேற்கூரை ஆரஞ்சு வண்ண ஓடுகளால் ஆனது. கடும் தலைவலி இருப்பவர்கள் அம்மனுக்கு அரிசி, வெல்லம், சேர்த்து செய்யப்படும் மண்டையப்பத்தை படைத்தால் தலைவலி தீரும் என்ற நம்பிக்கை உள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து 75 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து 95 கி.மீ தொலைவிலும்பகவதி அம்மன் கோயில் உள்ளது. கோயிலிலேயே தங்கும் வசதியும் உள்ளது.

சொத்தவிளை பீச்



கன்னியாகுமரியில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இயற்கையான கடற்கரை பகுதி சோட்டவிளை பீச் ஆகும். சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு கடில்கள், கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள சாலையில் செல்வது மிகவும் ரம்மியமாக இருக்கும்.

செயின்ட் சேவியர் சர்ச்



நாகர்கோவிலில்  கோட்டாரில் அமைந்துள்ளது செயின்ட் சேவியர் சர்ச் . கி.பி 1600 ஆண்டு இந்த சர்ச் கட்டப்பட்டது. 1865ம் ஆண்டு மரியன்னைக்காக புதிய சன்னதி கட்டப்பட்டது. 1930ம் ஆண்டு இந்த சர்ச் கதீட்ரல் அந்தஸ்து பெற்றது. 1955ம் ஆண்டு சர்ச் கட்டடம் விரிவாக்கப்பட்டது. .

சுசீந்திரம் தனுமலையான் கோயில்



சுசீந்திரம் தனுமலையான் கோயில் கலை களஞ்சியமாக விளங்குகிறது. இந்த கோயிலில் பிரம்மா, விஷ்ணு, சிவன் சந்நிதிகள் உள்ளது சிறப்பம்சமாகும். மேலும் 18 அடி உயர அனுமான் சிலை மற்றும் பிரம்மாண்டமான பெண் விநாயகர் சிலை ஆகியவை பிரசித்தி பெற்றதாகும். 

பேச்சிபாறை அணை



கன்னியாகுமரியிலிருந்து 74 கி.மீ. தொலைவில் உள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலிக்கும் எல்லையாகஅமைந்துள்ள மலைத் தொடரை வைத்து இந்த அணை கட்டப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் பெரிய அணை இதுவேயாகும். 1894 ஆம் ஆண்டு கோதையாறு அணைத்திட்டம் தொடங்கப்பட்டு 1905 இல் சுமார் 27 இலட்சம் ரூபாய் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. கோதையாறு அணையே பேச்சிப்பாறை அணை எனப்படுகிறது. இத்தேக்கத்தில் 350 கோடி கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடிகிறது. இதன் மூலம் சுமார் 56,000 ஏக்கர் நிலம் பாசனம் பெற இயலுமென்று கூறப்படுகிறது. நாஞ்சில் நாட்டை நெற்களஞ்சியம் ஆக்குவதற்கு இந்த அணை பெரிதும் உதவுகிறது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். இங்கு படகு செலுத்துதல் சுகமான அனுபவமாகும். அணையின் எதிர்ப்புறம் வரை செல்ல குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

பீர் முகமது தர்கா



பீர் முகமது தர்கா தக்கலையில் அமைந்துள்ளது. தத்துவ அறிஞர் முகமது அப்பாவின் பெயர் இந்த தர்காவிற்கு வைக்கப்பட்டுள்ளது. முகமது அப்பா திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் பிறந்தவர். இவர் கேரள மாநிலம் பீர்மேட்டில் சிலகாலம் மதப்பணி செய்தார். பின் தக்கலையில் வந்து தங்கினார். சிறந்த கவிஞரான இவர் பல்வேறு தத்துவ புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவர் சேர மன்னர்களுடன் நல்ல நட்புறவாக இருந்துள்ளார்.

செய்குதம்பி பாவலர் நினைவகம்

தமிழ் இலக்கணம், இலக்கியத்தில் புலமை பெற்றவரான செய்குதம்பி பாவலர் 1874ம் ஆண்டு பிறந்தார். அவர் தமிழ் மாணவர்கள் மத்தியில் (ஒரே நேரத்தில் கேட்கப்படும் 100 கேள்விகளுக்கும் பதிலளித்தல்) சதாவதான நிகழ்ச்சியை செய்து காண்பித்து பாராட்டை பெற்றுள்ளார். 1950ம் ஆண்டு காலமான அவரது நினைவாக நாகர்கோவிலில் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.

திருவெற்றூர்

கன்னியாகுமரியில் இருந்து 70 கி.மீ தொலைவில் திருவெற்றூர் அமைந்துள்ளது. இங்குள்ள கோயில் சிற்பம் மற்றும் ஓவிய கலைக்கு பிரசித்தி பெற்றதாகும். கோயில் சுவர்களில் உள்ள சித்திரங்கள் காண்பதற்கு மிக அழகானவையாகும்.

உதயகிரி கோட்டை



தமிழகத்தின் பழங்கால நினைவுசின்னங்களில் உதயகிரி கோட்டையும் ஒன்றாகும். 1729 முதல் 1758ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது.1741ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மர் குளச்சலில் டச்சுகாரர்களை தோற்கடித்தார். டச்சுகாரரான டி லெனோயின் சமாதி இந்த கோட்டையினுள் உள்ளது. முதலில் மன்னர் மார்த்தாண்ட வர்மரால் சிறைபிடிக்கப்பட்ட ஐரோப்பிய கைதிகளில் ஒருவராக இருந்த லெனோய், பின்னர் மன்னரின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். மார்த்தாண்டரின் படைவீரர்களுக்கு ஐரோப்பிய போர்முறையை அவர் கற்று கொடுத்தார். கன்னியாகுமரியில் இருந்து 34 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோட்டை சுற்றுலா தலமாக விளங்குகிறது.

வள்ளி மலை கோயில்



மலை மீது அமைந்துள்ள சுமார் 300 படிகட்டுகளை கொண்ட இந்த கோயிலில் விநாயகர் மற்றும் காசி விஸ்வநாதர் சன்னதிகள் உள்ளன. கோயில் மலையை குடைந்து ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வட்டகோட்டை



கன்னியாகுமரியில் இருந்து 6 கி.மீ தொலைவில் கிரானைட் கற்களால் கட்டப்பட்ட வட்டகோட்டை உள்ளது. நாஞ்சில் நாட்டின் பாதுகாப்பு கொத்தளமாக மார்த்தாண்ட வர்மரால் இந்த கோட்டை கட்டப்பட்டது. செவ்வக வடிவில் கட்டப்பட்டுள்ள இந்த கோட்டை மூன்றரை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.கோட்டையின் மதில் சுவர்கள் 25 முதல் 26 அடி உயரம் கொண்டவையாக அமைந்துள்ளது. கோட்டையின் முன்புற சுவர் 29 அடி அகலமும், மூலைகளில் 18 அடியும், பின்புறம் 6 அடி அகலமும் கொண்டுள்ளது. இந்த கோட்டை மார்தாண்டவர்மர் ஆட்சியில் டி லெனோய் என்பவரின் ஆலோசனையில் கட்டப்பட்டதாகும்.

கீரிப்பாறை: காளிகேசம்:



பெருஞ்சாணி அணையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் கீரிப்பாறை இருக்கிறது. இது வரை பேருந்து செல்லும். கீரிப்பாறையின் கொடுமுடி காளிகேசம் என்ற இடத்தில் சிறு அம்மன் கோவில் உள்ளது.கீரிப்பாறையிலிருந்து மேலே செல்வதற்கு நல்ல வண்டித்தார்ச்சாலை உள்ளது. சிற்றுந்துகள் மூலம் போகலாம். இங்குள்ள ஆறு மலைச் சரிவுகளில் விழுந்தோடி வருவதைத்தான் காளிகேசம் என்கின்றனர். சிறுசிறு சரிவுகளில் அருவியாகவும் காட்சியளிக்கிறது. பாறைகளைக் குடைந்தும், அறுத்துக் கொண்டும் ஓடுவது பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறு அறுத்த பாறை ஒன்றில் பழங்குடியினர் இருந்த தற்கான ஆதாரங்கள் தென்படுகின்றன.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில்


முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். 'மந்தைக்காடு' என்ற பெயரே மருவி, 'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது. நாகர்கோவிலிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் மண்டைக்காடு எனும் ஊரில்,குளச்சலில் இருந்து மூன்று கி.மீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. திங்கள் சந்தை சென்று அங்கிருந்தும் பேருந்தில் செல்லலாம்.

சிதறால் மலைக் கோவில்

இச்சமணக் குகைக் கோயில், கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்திலிருந்து எழு கிலோ மீட்டர் தொலைவிலும்; கன்னியாகுமரி மாவட்டத் தலநகரான நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
இக்கோயில் மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்தின் வெள்ளாங்கோடு ஊராட்சியில் உள்ள சிதறால் கிராமத்தின் மலைப் பகுதியில் உள்ளது.நாகர்கோவிலிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.
முக்கடல் அணை
 


நாகர்கோவிலுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள முக்கடல் அணை நேற்று முழுகொள்ளளவை எட்டியது. நாகர்கோவில் நகராட்சி பகுதிக்கு முக்கடல் அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு, கிருஷ்ணன்கோவிலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்து குடிநீராக விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. முக்கடல் அணை 25 அடி கொள்ளளவு கொண்டது. மேலும் 25 அடிக்கு கீழ் மைனஸ் அளவில் 25 அடியும் உள்ளது.

உலக்கை அருவி


தமிழ்நாடு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஓர் இயற்கை அருவியாகும். இது ஒரு சிறந்த சுற்றுலாத் தலமுமாகும். கன்னியாகுமரியில் இருந்து ஏறத்தாழ 40 கிலோமீட்டர் தொலைவில் இது உள்ளது. தோவாளை தாலுக்காவிலுள்ள அழகியபாண்டிபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள இந்த அருவியில் எல்லா மாதமும் நீர் வந்து கொண்டு இருக்கும். காடுகள் வழியாகச் செல்லும் ஒதுக்கப்பட்ட பாதைகள் மூலமே இந்த அருவியை அடைய முடியும். அருவியில் குளிப்பதற்கும் இயற்கை அழகை ரசிப்பதற்குமாகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கே வருகின்றனர். அருவியை சுற்றிப் பசுமையான காடுகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியும். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பசுமை மாறா காடுகளும் மலைகளும் வற்றாத ஓடைகளும் காணப்படுகின்றன .இந்நீர்வீழ்ச்சி மலை அடிவாரத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது, எனவே உலக்கை அருவிக்கு செல்வதென்பது ஒரு சிறந்த மலையேற்ற பயிற்சி செய்வது போன்றதாகும்.
அருவித் தண்ணீர் வரும் இடம் பார்ப்பதற்கு ஓர் உலக்கை போல் இருப்பதால் இதற்கு உலக்கை அருவி எனப் பெயர் வந்தது என்பர்.

2 comments:

Thanks