Breaking News - சாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம்
சாத்தான்குளம் மரணம்: சி.பி.ஐ., விசாரணை இன்று துவக்கம்
10.07.2020
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் தந்தை ஜெயராஜ் 63, மகன் பென்னிக்ஸ் 31, கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இன்று சி.பி.ஐ., விசாரணையை துவக்குவதாக, மத்திய அரசுத் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவிக்கப்பட்டது.
போலீஸ் தாக்குதலில் சாத்தான்குளம் ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோர் இறந்தது குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரிக்கிறது. ஜூன் 30ல் தமிழக அரசு தரப்பில், வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது குறித்த அரசாணை சமர்ப்பிக்கப்பட்டது.
நேற்று நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் அமர்வு காணொலியில் விசாரித்தது.தமிழக அரசுத் தரப்பில், 'சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் 10 பேரை கைது செய்துள்ளனர். கொலை வழக்காக மாற்றி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கைதானவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, கீழமை நீதிமன்றத்தில் மனு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசுத் தரப்பில்,'சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிந்துள்ளது. சி.பி.ஐ., கூடுதல் எஸ்.பி., சுக்லா தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை டில்லியிலிருந்து இன்று (ஜூலை 10) தமிழகம் வந்து விசாரணையை துவக்குகிறது,'என தெரிவிக்கப்பட்டது.தமிழக அரசு தரப்பில், 'சி.பி.ஐ.,விசாரணைக்குத் தேவையான உதவிகள் செய்யத் தயார்,' என தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள்: சி.பி.சி.ஐ.டி., சேகரித்த ஆதாரங்கள், ஆவணங்களை சி.பி.ஐ.,பயன்படுத்திக் கொள்ளலாம். கைதானவர்களில், அவசியம் கருதி தேவையானவர்களை மட்டும் உரிய காலத்திற்குள் போலீஸ் காவலில் எடுக்க சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி.,நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில் சி.பி.ஐ., மற்றும் சி.பி.சி.ஐ.டி.,போலீசார் எதிர்மனுதாரர்களாக இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். விசாரணையின் தற்போதைய நிலை குறித்து சி.பி.சி.ஐ.டி.,தரப்பில் 'சீல்' இட்ட உறையில் வைத்து ஜூலை 28ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்றனர்.இன்று வருகைசாத்தான்குளம் கொலை வழக்கை விசாரிக்க மதுரை வரும் சி.பி.ஐ., குழு ஜவஹர்புரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆலோசனை நடத்துகிறது. பிறகு சாத்தான்குளம் செல்ல உள்ளனர்.
ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை
உ.பி.,யின் கான்பூரில், போலீஸ் டி.எஸ்.பி., உள்ளிட்ட எட்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் ம.பி.,யில் பதுங்கியிருந்த ரவுடி விகாஸ் துபே கைது செய்யப்பட்டு, கான்பூருக்கு அழைத்து செல்லும் வகையில் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கான்பூரை அடுத்த பிக்ரு கிராமத்தில் கடந்த 3-ம் தேதி தங்களை பிடிக்க வந்த போலீசாரை தடுத்து நிறுத்தி சினிமா பாணியில் இயந்திர துப்பாக்கிகளை வைத்து ரவுடி விகாஸ் துபே தலமையிலான கும்பல் சுட்டது. இதில் ஒரு போலீஸ் டி.எஸ்.பி., மூன்று எஸ்.ஐ.,க்கள் உள்ளிட்ட எட்டு போலீசார் உயிரிழந்தனர். இந்தியாவையே அதிரச் செய்த இந்த படுகொலையில் முக்கிய குற்றவாளியான விகாஸ் துபே தலைமறைவானான். இதற்கிடையே அவனது கூட்டாளிகள் 5 பேரை போலீசார் சுட்டுக்கொன்றனர். சிலரை கைது செய்தனர்.
விகாஸ் துபேவுக்கு தகவல் அளித்து வந்த எஸ்.ஐ.,க்கள் இருவரையும் புதனன்று கைது செய்தனர். 40 தனிப்படை போலீசார் டில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய இடங்களில் தனி தனிப் பிரிவாக சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று (ஜூலை 09) காலை மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார். அவரை கான்பூருக்கு அழைத்து வரும்வழியில் மழை பெய்ததால், சிக்கல் நீடித்தது.
இதற்கிடையே விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தை பயன்படுத்தி தப்பிக்க முயன்ற விகாஸ் துபேவை என்கவுன்டரில் போலீஸ் சுட்டுக்கொன்றதாக போலீசார் தெரிவித்தனர். விபத்தின் போது போலீசாரிடம் இருந்து துப்பாக்கியை பறித்து தப்பிக்க முயன்றதாகவும் அதனால் என்கவுன்டர் செய்ததாகவும் கான்பூர் ஐ.ஜி., கூறினார். காரில் இருந்த 4 போலீசார் காயமடைந்ததால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
என்கவுன்டர் குறித்து மேற்கு கான்பூர் எஸ்.பி., கூறுகையில், ‛கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதும், காயமடைந்த போலீஸ்காரர்களின் கைத்துப்பாக்கியைப் பறித்துக் கொண்டு விகாஸ் துபே தப்பிச் செல்ல முயன்றான். அவரை சரணடையச் செய்ய போலீசார் முயன்றனர். அப்போது போலீஸ்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால், போலீசார் பதிலுக்கு சுட்டனர்,' என்றார்.
No comments
Thanks